ராஜபாளையம் அருகே போலி தங்க நாணயங்கள் கொடுத்து ரூ.5 லட்சம் மோசடி: தம்பதி உள்பட 4 பேர் கைது
Dec 11 2025
37
ராஜபாளையம் அருகே போலி தங்க நாணயங்கள் கொடுத்து ரூ.5 லட்சம் மோசடி செய்த தம்பதி உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
தென்காசி மாவட்டம் கரிவலம்வந்தநல்லூர் பகுதியை சேர்ந்தவர் ராமர். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே தெற்கு வெங்காநல்லூர் பகுதியில் உள்ள உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்க வந்தார்.
அப்போது ராமரிடம் அறிமுகமான சிலர், தாங்கள் தங்க நாணயம் வைத்திருப்பதாகவும், குறைந்த விலைக்கு அதனை விற்பதாகவும் கூறியுள்ளனர். இதனை நம்பிய ராமர், முதலில் ஒரு தங்க நாணயம் வாங்கியுள்ளார். அதை சோதனை செய்து பார்த்தபோது உண்மையான தங்க நாணயமாக இருந்தது. இதனை நம்பிய ராமர், அவர்களிடம் ரூ.5 லட்சம் கொடுத்து தங்க நாணயம் வாங்கியதாக கூறப்படுகிறது. ஆனால் அவர்கள் போலியான தங்க நாணயங்களை கொடுத்து, மோசடி செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து ராமர், ராஜபாளையம் தெற்கு போலீசில் புகார் அளித்தார்.
4 பேர் கைது:
இதுகுறித்து துணை போலீஸ் சூப்பிரண்டு பசினா பீவி உத்தரவின் பேரில், ராஜபாளையம் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து, இந்த மோசடியில் ஈடுபட்டவர்களை வலைவீசி தேடி வந்தனர். இந்த நிலையில், மோசடியில் ஈடுபட்டவர்கள் சென்னையில் உள்ளதாக கிடைத்த தகவல்படி, ராஜபாளையம் தெற்கு போலீசார் தனிப்படை அமைத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் மற்றும் குற்றப்பிரிவு சப்–இன்ஸ்பெக்டர் சக்தி குமார் தலைமையில் சென்னைக்கு சென்று அந்த கும்பலை பிடித்தனர்.
தொடர்ந்து இந்த மோசடியில் ஈடுபட்ட காஞ்சீபுரம் மாவட்டம், புதுப்பாக்கம் பகுதியை சேர்ந்த சக்திவேலு (வயது 67), விழுப்புரம் மாவட்டம், திருக்கை கிராமத்தை சேர்ந்த பாண்டுரங்கன் (வயது 60), அவரது மனைவி அரசாயி (வயது 56), சென்னையை சேர்ந்த சண்முகம் (வயது 61) ஆகியோரை ராஜபாளையம் தெற்கு போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து தலா 1 கிராம் எடையுள்ள 11 தங்க நாணயங்கள் மற்றும் போலி தங்க நாணயங்கள், ரூ.2 லட்சம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். விசாரணையில் அவர்கள் 4 பேரும் இதேபோல் பல்வேறு நபர்களிடம் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?