ரூ.3511 கோடியில் 183 முடிவுற்ற திட்டங்கள்: ஸ்டாலின் திறந்தார்; ரூ.1267 கோடி திட்டங்களுக்கு அடிக்கல்
சென்னை, பிப்.–
முதலமைச்சர் ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் 2378.30 கோடி ரூபாய் செலவில் 9 முடிவுற்ற பணிகளையும், சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் சார்பில் 635.30 கோடி ரூபாய் செலவில் 22 முடிவுற்ற பணிகளையும்,
நகராட்சி நிருவாக இயக்குநரகத்தின் சார்பில் 237.04 கோடி ரூபாய் செலவில் 62 முடிவுற்ற பணிகளையும், பேரூராட்சிகள் இயக்குநரகத்தின் சார்பில் 174.45 கோடி ரூபாய் செலவில் 27 முடிவுற்ற பணிகளையும், சென்னை மாநகராட்சி சார்பில் 86.04 கோடி ரூபாய் செலவில் முடிவுற்ற 63 பணிகளையும், திறந்து வைத்தார்.
மேலும், சென்னை மாநகராட்சி சார்பில் 335.62 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 8 புதிய திட்டப் பணிகளுக்கும், சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் சார்பில் 932 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 2 புதிய திட்டப் பணிகளுக்கும் அடிக்கல் நாட்டி, சென்னை குடிநீர் வாரியத்தின் அலுவலகப் பயன்பாட்டிற்காக 47 லட்சம் ரூபாய் மதிப்பிலான 5 வாகனங்களை அலுவலர்களுக்கு வழங்கினார்.
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ், ராசிபுரம் நகராட்சி 8 பேரூராட்சிகள் மற்றும் இராசிபுரம், வெண்ணந்தூர், நாமகிரிப்பேட்டை, புதுச்சத்திரம், எலச்சிப்பாளையம், மல்லசமுத்திரம், பரமத்தி ஆகிய 7 ஒன்றியங்களுக்குட்பட்ட 1070 ஊரகக் குடியிருப்புகள் மற்றும் 11 ஊராட்சிகளுக்கு 1138.41 கோடி ரூபாய் செலவிலான 2 கூட்டுக் குடிநீர் திட்டங்ளைள திறந்து வைத்தார்.
மேலும், கோயம்புத்தூர் மாநகராட்சி குறிச்சி மற்றும் குனியமுத்தூர் பகுதிகளுக்கு 591.14 கோடி ரூபாய் செலவிலான பாதாள சாக்கடை திட்டம், திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி நகராட்சிக்கு 62.82 கோடி ரூபாய் செலவிலான பாதாள சாக்கடை திட்டம் என மொத்தம் 653 கோடியே 96 லட்சம் ரூபாய் செலவில் 4 லட்சத்து 49 ஆயிரம் மக்கள் பயன்பெறும் வகையிலான 2 பாதாள சாக்கடைத் திட்டங்களை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.
மணலி, ஆலந்தூர் (முகலிவாக்கம்), பெருங்குடி (பள்ளிக்கரணை), மற்றும் சோழிங்கநல்லூர் (உத்தண்டி, ஒக்கியம்-துரைப்பாக்கம்) ஆகிய மண்டலங்களில் 188 கோடியே 7 இலட்சம் ரூபாய் செலவில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள்.
மாதவரம், தண்டையார்பேட்டை, அம்பத்தூர் மற்றும் அண்ணாநகர் மண்டலங்களில் உள்ள நீர் நிலைகளில் கழிவுநீர் கலப்பதை தடுக்கும் பொருட்டு 106 கோடி 42 லட்சம் செலவில், பாடி மேம்பாலத்திலிருந்து கொடுங்கையூர் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் வரை மாற்றியமைக்கப்பட்ட பிரதான கழிவுநீர் உந்து குழாய்கள் உட்பட மொத்தம் 635 கோடியே 31 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 22 முடிவுற்ற திட்டப் பணிகளை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.
புதிய திட்டங்களுக்கு அடிக்கல்
சர்தார் பட்டேல் சாலை-வேளச்சேரி பிரதான சாலை சந்திப்பிலிருந்து குருநானக் கல்லூரி சந்திப்பு வரை 200 அடி சாலையில் 310 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய மேம்பாலம்,மணலி மண்டலம், செட்டிமேடு பகுதியில் 6.75 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உள்ளரங்க கபடி மைதானம் மற்றும் திறந்தவெளி கால்பந்து மைதானம், மாதவரம் மண்டலம், சி.எம்.டி.ஏ. டிரக் டெர்மினல் பகுதியில் 4.63 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய விளையாட்டு வளாகம், மாதவரம் மண்டலம், திருவள்ளுவர் தெரு, புத்தகரத்தில் 4.70 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள முதல்வர் படைப்பகங்கள், ரூ.9.54 கோடி மதிப்பீட்டில், மாதவரம், தண்டையார்பேட்டை, கோடம்பாக்கம் மற்றும் சோழிங்கநல்லூர் மண்டலங்களில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான பிரத்யேக வசதிகளுடன் கூடிய 2 பூங்காக்கள் என 4 பூங்கா மேம்பாட்டு பணிகள்
என மொத்தம் 335.62 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 8 புதிய திட்டப்பணிகளுக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்.
குடிநீர் வழங்கல் திட்டப் பணிகள்
புழலில் செயல்பட்டு வரும் நாளொன்றுக்கு 300 MLD கொள்ளளவு கொண்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை 555 கோடியே 88 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், 310 MLD கொள்ளளவு கொண்ட நிலையமாக மறுசீரமைத்து மேம்படுத்தும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
376 கோடியே 12 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், அடையாறு மண்டலம், பள்ளிப்பட்டு மற்றும் திருவான்மியூர் பகுதிகளில் தொடர்ச்சியான குடிநீர் விநியோகம் செயல்படுத்தும் பணிகள்
என மொத்தம் 932 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 2 புதிய திட்டப் பணிகளுக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்.