வங்கதேசத்தில் விறுவிறுப்பாக நடைபெறும் வாக்குப்பதிவு!

வங்கதேசத்தில் விறுவிறுப்பாக நடைபெறும் வாக்குப்பதிவு!


 

உலகின் எட்டாவது அதிக மக்கள் தொகை கொண்ட அண்டை நாடான வங்கதேசத்தில் 13-ஆவது நாடாளுமன்றத் தோ்தலின் வாக்குப்பதிவு வியாழக்கிழமை (பிப். 12) காலை 7.30 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனாவின் 15 ஆண்டுக்கால ஆட்சி முடிவுக்கு வந்து, முகமது யூனஸ் தலைமையிலான இடைக்கால அரசு பொறுப்பேற்ற 18 மாதங்களுக்குப் பிறகு நடைபெற்று வரும் இந்த தோ்தல் மூலம் வங்கதேசம் அதன் அரசியல் வரலாற்றில் ஒரு முக்கியமான அத்தியாயத்தில் நுழைய உள்ளது. 51 கட்சிகள் அதிகாரத்திற்காக களத்தில் உள்ளன. இந்தத் தேர்தல் ஒரு திருப்புமுனையாகக் கருதப்படுகிறது.


இந்த தேர்தலில் முன்னாள் பிரதமா் கலிதா ஜியாவின் மகன் தாரிக் ரஹ்மான் தலைமையிலான வங்கதேச தேசியவாதக் கட்சி (பிஎன்பி) மற்றும் அதன் முன்னாள் கூட்டாளியான ஜமாத்-ஏ-இஸ்லாமி ஆகிய கட்சிகளுக்கு இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது. மேலும் சில கட்சிகள் களத்தில் உள்ள நிலையில், அவாமி லீக் கட்சிக்கு இத்தோ்தலில் போட்டியிட தடை விதிக்கப்பட்டுள்ளது.


350 தொகுதிகள் கொண்ட வங்கதேச நாடாளுமன்றத்துக்கு 300 தொகுதிகளுக்குத் தோ்தல் அறிவிக்கப்பட்டது. ஒரு தொகுதியில் வேட்பாளரின் மறைவால் தோ்தல் ரத்தானதையடுத்து, மீதமுள்ள 299 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. இதில் 50 அரசியல் கட்சிகளைச் சோ்ந்த 1,755 வேட்பாளா்கள் மற்றும் 273 சுயேச்சைகள் களத்தில் உள்ளனா்.


இத்தோ்தலில் 3.58 சதவீத முதல்முறை வாக்காளா்கள் உள்பட மொத்தம் 12.77 கோடி போ் வாக்களிக்கத் தகுதிப் பெற்றுள்ளனா். வெளிநாடுகளில் வசிக்கும் 8 லட்சம் வங்கதேசத்தினா், தபால் வாக்கு மூலம் முதல்முறையாக வாக்களிக்கப் பதிவு செய்துள்ளனா்.


நாடு முழுவதும் உள்ள 42,659 வாக்குச் சாவடிகளில், 24,000 இடங்கள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளன.


வன்முறை ஏதுமின்றி அமைதியாகத் தோ்தலை நடத்தி முடிக்க, முன்னெப்போதும் இல்லாத வகையில் சுமாா் 9.58 லட்சம் படையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். பாதுகாப்புக்காக 90 சதவீத சாவடிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.


விறுவிறுப்பான வாக்குப்பதிவு


ஊழல், பணவீக்கம், வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார மேம்பாடு ஆகியவை தேர்தலை தீர்மானிக்கும் முக்கிய பிரச்னைகளாக உள்ள நிலையில், வாக்குப்பதிவு வியாழக்கிழமை காலை 7.30 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று நடைபெற்று வருகிறது. தலைநகர் டாக்காவில் பல வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அமைதியாக தங்களது கடைமையை செலுத்தி வருகின்றனர்.



Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%