வயது சான்றிதழ் இல்லாத பணியாளர்கள் மருத்துவ வாரியத்திடம் இருந்து சான்றிதழ் பெற்று சமர்ப்பிக்க வேண்டும்: மின்வாரியம் உத்தரவு
Dec 14 2025
66
சென்னை: வயது சான்றிதழ் இல்லாத பணியாளர்கள் மருத்துவ வாரியத்திடம் இருந்து வயது சான்றிதழ் கட்டாயம் பெற வேண்டும் என மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது.
மின்வாரியம் அல்லது எந்த ஒரு அரசுத்துறை நிறுவனங்களில் பணியில் சேர்ந்தாலும் கல்வி, வயது உள்ளிட்டவற்றுக்கான பல்வேறு ஆவணங்கள் கேட்கப்படும்.
அதில் பணியாளரின் வயதை உறுதி செய்ய வயது சான்று கேட்கப்படும். பொதுவாக இதற்கு பிறப்புச் சான்றிதழ், 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் ஆகியவை வழங்கப்படும். இது பணியாளரின் பணிக்காலம் மற்றும் அவரின் ஓய்வு வயதை தீர்மானிக்க கேட்கப்படுகிறது.
இந்நிலையில் மின்வாரியத்தில் தற்போது பணியில் இருப்பவர்களில் சிலர் முறையான வயது சான்றிதழ் சமர்ப்பிக்காமல் பணியில் சேர்ந்துள்ளதாகவும், அந்த பணியாளர்கள் மருத்துவ வாரியத்திடம் இருந்து வயது சான்றிதழ் பெற்று சமர்ப்பிக்க வேண்டும் என மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து மின்வாரியம் பிறப்பித்த உத்தரவு: அனைத்து தலைமை பொறியாளர்கள் மற்றும் மேற்பார்வை பொறியாளர்கள் அரசு வழங்கிய வழிமுறைகள் படி மருத்துவ வாரியம் பணியாளர்களுக்கு வயது சான்றிதழ் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்.
அதன்படி, மருத்துவக் குழுவில் பொது மருத்துவர், தடயவியல் அறிவியல் மருத்துவர், கதிரியக்கவியல் மருத்துவர் இடம் பெற வேண்டும், மேலும் சரியான வயதை கண்டறிய மண்டை ஓட்டை சிடி ஸ்கேன் பரிசோதனை செய்ய வேண்டும்.
இந்த மருத்துவ செலவுகளை மின்வாரியம் ஏற்றுக்கொள்ளும். பரிசோதனை முடிவில் கிடைக்கும் வயது துல்லியமாக இருக்காது என்பதால் அதிகபட்சமாக 2 முதல் 5 வயதுக்கும் மட்டுமே வித்தியாசம் இருக்க வேண்டும்.
அதிலும் குறைந்த வயதையே எடுத்துக்கொள்ள வேண்டும். உதரணமாக பரிசோதனை முடிவில் வயது 51 முதல் 54 வரை இருந்தால் அதில் குறைந்த அளவான 51-ஐ எடுத்துக்கொள்ள வேண்டும்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?