வாசகர் கடிதம் (சின்னஞ்சிறுகோபு) 24.07.25

வாசகர் கடிதம் (சின்னஞ்சிறுகோபு) 24.07.25



  சர்க்கரை நோயாளிகள் வெள்ளை சர்க்கரைக்கு பதிலாக நாட்டுச் சர்க்கரை பனைவெல்லம் போன்றவற்றையும் சாப்பிடக்கூடாது. எந்தவகையான இனிப்பாக இருந்தாலும் முழுமையாக அதனை தவிர்ப்பதுதான் நல்லது. அதுபோல அதிக அளவிலான இனிப்புகள் உள்ள பழங்களான வாழைப்பழம், மாம்பழம், சப்போட்டா, அன்னாசிப் பழம், பலாப்பழம், சீத்தாப்பழம், பேரிச்சம்பழம் போன்றவற்றையும் தவிர்க்க வேண்டும் என்ற நலம் தரும் மருத்துவ பகுதியின் குறிப்புகள் சர்க்கரை வியாதிகாரர்களுக்கு சரியான எச்சரிக்கையாக அமைந்திருக்கிறது. அதுபோல நடந்து சம்பந்தப்பட்டவர்களும் உடல் நலனை காத்துக்கொள்வது முக்கியமான ஒன்றாகும்.


  தமிழ்ச் செம்மல் நன்னிலம் இளங்கோவனின் 'மனம் ஒரு குரங்கு' சிறுகதையை படித்தபிறகுதான் அரசியல் நிகழ்ச்சிகளுக்கு எப்படி இவ்வளவு கூட்டம் கூடுகிறது என்பது எனக்கு தெளிவாக தெரிந்தது. கூலிக்காக இப்படி கூடுபவர்களும் இப்போதெல்லாம் பிழைக்கத் தெரிந்தவர்களாக இருக்கிறார்கள் என்பதும் புரிந்தது.


  தன்வினை தன்னைச் சுடும் என்பதை அப்போதே அதிரடியாக உணர்த்தியது 'ஐயோ எரியுதே... எரியுதே!' என்ற முகில் தினகரனின் சிறுகதை. தீபக்கின் சதித்திட்டம் யாரும் எதிர்பாராதவிதத்தில் அப்படியே அவன் பக்கம் சாய்ந்தது வியப்பாக இருந்தாலும், அந்த பாவிக்கு நல்லா வேணும் என்றும் தோன்றியது!


  திருமதி மல்லிகா கோபாலின் 'லண்டன் பயணம்' என்ற கட்டுரை விரிவான சிறப்பான ஏராளமான தகவல்களால், லண்டன் மாநகரத்தையே சுற்றிப் பார்த்ததைப்போன்ற ஒரு உல்லாச உணர்வை தந்தது. தான் பார்த்ததை வாசகர்களும் தங்களது மனக்கண்ணால் பார்க்கும் விதத்தில் இந்த கட்டுரையை சிறப்பாக எழுதியிருக்கும் அவரை பாராட்டுகிறேன்.


  கவிதா சரவணன் 'முன்னோரைப் போற்றும் ஆடி அமாவாசை' என்ற கட்டுரையில் ஆடி அமாவாசையின் சிறப்பை தெளிவாக சொல்லியிருக்கிறார். ஆடி அமாவாசையில் தர்ப்பணம் கொடுத்தாலே, ஆண்டு முழுவதும் தர்ப்பணம் கொடுத்த பலன் கிடைத்துவிடும் என்ற தகவல் குறிப்பிடத் தக்கது.


  தினம் ஒரு தலைவர்கள் வரிசையில் கேமு கலானி என்ற இளைஞரைப்பற்றி படித்தபோது மனம் நெகிழ்ந்துப்போனேன். இவரை அவரின் 20 வது பிறந்தநாளுக்கு இரண்டு மாதங்களுக்கு முன்னர் 19 வயதாக இருந்தபோதே ஆங்கிலேயர்களால் தூக்கிலிடப்பட்டது அதிக வருத்தத்தை தந்தது. கேமு கலானி தனது மரணத்தை மன தைரியத்துடன் புன்னகையுடன் ஏற்றுக்கொண்ட விதம் அவரின் உறுதியான சுந்திரவேட்கையை உணர்த்தியது.


  கவிஞர் இரா.இரவியின் 'வெங்காயம்' என்ற கவிதை படிக்க படிக்க உற்சாகமாக இருந்தது. வெங்காயத்தின் சிறப்பை, பயனை அழகழகாக சொல்லி அசத்திவிட்டார் இந்த கவிஞர். உறிக்க உறிக்க ஒன்றும் இல்லாததுதான் உறித்துப் போடாவிட்டால் ஒன்றும் ருசி இருக்காது என்று ஆரம்பித்து, சின்ன வெங்காயம் இதயத்தை சீராக்கும் வெங்காயம் என்று அழகாக முடித்திருந்த விதம் அற்புதமாக இருக்கிறது!



  -சின்னஞ்சிறுகோபு,

   சிகாகோ.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%