வாசகர் கடிதம் (P. கணபதி) 23.08.25

வாசகர் கடிதம் (P. கணபதி) 23.08.25


அன்பு உள்ளங்கள் அனைவர்க்கும் வணக்கம். 

முதலில் எனது படைப்புகளை வெளியிட்டு என் எழுத்தார்வத்துக்கு தூண்டுகோலாய் துணை நிற்கும் தமிழ்நாடு டாட் காம் குழுமத்தாருக்கு நன்றிகள். அதேபோல் என் எழுத்தைப் பாராட்டும் வாசக நல்லுள்ளங்களுக்கும் நன்றியும் வணக்கமும். 


அமெரிக்க பொருளாதார நிபுணர் ஜெப்ரி சாக்ஸ், அமெரிக்க அரசின் இந்தியா மீதான டாரிப் யுத்தம் எவ்வளவு மோசமான செயல் என்பதை விவரித்துள்ளார். இந்திய - அமெரிக்க உறவு எத்தகைய முக்கியமான அம்சம் என எடுத்துக் கூறியுள்ளார். அது இந்தியர்களின் எண்ணப் போக்கைக் காட்டும் கண்ணாடியாக அமைந்துள்ளது. 


முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதாவின் 36 கோடி வருமானவரி குறித்த செய்தியின் விபரம் அரிய முற்பட்டேன். குழப்பமே மிஞ்சியது. Reporting ல் தவறு உள்ளது. 


லார்ட் டென்னிங், சாமுவேல் லீபோவிட்ஸ், ஆஸ்டின், சால்மண்ட், V. R. கிருஷ்ணையர்,என்று சில நீதித்துறை வல்லுநர்களின் சரிதங்களைப் படித்தும், அவர்களின் ஆற்றல்கள் குறித்து கேள்விப்பட்டும் இருக்கிறேன். ஆனால் சமீபத்தில் காலமான நீதியரசர் பிராங் கெப்ரியோ மட்டுமே என் மரியாதைக்கு உரியவராக நெஞ்சில் நிறைந்துள்ளார். அவரது இறுதி வரிகளை ஒரு காணொளியில் அவர் பேசுவதைக் கேட்டேன். அந்த Swan song நெஞ்சை உருக்குவதாக இருந்தது. அவர் உண்மையிலேயே ஒரு மாமனிதர் தான். R. I. P.


தீபம் ஏற்றுவதில் இத்தனை தத்துவங்களா, நுட்பங்களா? ஹா! திகைத்து விட்டேன். Light - The prime work of God என்ற மில்டனின் கூற்று ஞாபகம் வந்தது. அருட்பெரும் ஜோதியின் பேரொளி மின்னும் கட்டுரை சரியான வழிகாட்டி. குறிப்பாக மகளிர் மனங்கொள்ள வேண்டிய கட்டுரை. 


நாவலர் சோமசுந்தர பாரதி அவர்களின் வரலாறு தமிழாராய்சியில் அவரின் ஈடுபாடும், இணையற்ற தமிழ்த் தொண்டும் பற்றி விவரிக்கிறது. நல்ல தகவல்களின் வாசிப்பனுபவம் ஆகும்.


மேத்யூ ஆர்னால்டு என்ற அறிஞர் எஸ்ஸேய்ஸ் ஆன் கிரிட்டிசிசம் என்ற தனது நூலில் ஒரு சிறந்த உரைநடைக்கு substance & style முக்கியம் என்றும்., சிறந்த கவிதைக்கு diction & movement அவசியம் என்றும் வரையறுத்துள்ளார். அதன்படி கவிஞர் மு. வா. பாலாஜி அவர்களின் கவிதை இந்த இரண்டு அம்சங்களையும் கொண்டு சிறப்பான படைப்பாக விளங்குகிறது. சிறந்த எதுகை, மோனை, நல்ல லயமும் கருத்தும் கொண்ட ஆக்கம். பாராட்டுக்கள். 


திருமதி. பானுமதி நாச்சியார் அவர்களின் கவிதையும் இதே ரகம் தான். "ஆடுகவே நீ ஆடுகவே" என்ற refrain ஐ ஒவ்வொரு ஸ்டான்சாவின் இறுதியாக வைத்துள்ளார். அது திருவாசகத்தில் மாணிக்கவாசகப் பெருமான் அருளிச்செய்த "உந்தீ பற, உந்தீ பற" என்ற உத்தியை நினைவுறுத்துகிறது. அதேபோல் அவரது மற்றொரு கவிதையில் வரும் தொடர் முழக்கம் "நீயாக வேண்டும்" என்பது பாலும் பழமும் படத்தில் வரும் "நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்" என்ற பாடல் வரிகளை நினைவுறுத்துகிறது. கவிதையில் பிசிறு தட்டாமல் வென்றுள்ளார். சபாஷ்.


திரு. இராம வேதநாயகம் அவர்களின் "உண்ணும் முறைகள்" அறிவுரைக் கவிதையாகவும் கொரட்டூர் திருமதி பத்மாவதி அவர்களின் "ஆனந்தத் தாண்டவம்" பக்திக் கீர்த்தனையாகவும் இரண்டும் தனித்து மிளிர்கின்றன. பாராட்டுக்கள். 


உடலுறவு வலி குறித்த கட்டுரை (either clinical or physiological or psychological) தேவையா? சொல்லித் தெரிவதில்லை மன்மதக் கலை. பல வாசகர்கள் முகம் சுளிப்பார்கள் என்பது நிச்சயம். 


ஆனந்த் பாஸ்கரில் வெளியாகியுள்ள 

தி. வள்ளி நெல்லை அவர்களின் கதை "காகித ஓடம்" காட்டும் காட்சி பரிதாபத்துக்கு உரியது. சோகச் சுவை கலந்த யதார்த்தம். பொருத்தமான தலைப்பு. அருமை. 


மீண்டும் நாளை சந்திப்போம். நன்றி.


P. கணபதி

பாளையங்கோட்டை

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%