வால்பாறையில் மனித–விலங்கு மோதலை தடுக்க சிறப்புக்குழு நியமனம்: 2 வாரத்தில் அரசுக்கு அறிக்கை தாக்கல்

வால்பாறையில் மனித–விலங்கு மோதலை தடுக்க சிறப்புக்குழு நியமனம்: 2 வாரத்தில் அரசுக்கு அறிக்கை தாக்கல்



கோயம்புத்தூர் மாவட்டம், வால்பாறையில் மனித – வனவிலங்கு மோதலை தடுக்க தமிழ்நாடு கூடுதல் தலைமை முதன்மை தலைமை வனக்காப்பாளர் தலைமையிலான குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது.


கோயம்புத்தூர் மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகத்தில், வால்பாறை பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான ஐயர்பாடி தேயிலைத் தோட்டத்தில் 4 வீடுகள் கொண்ட தொழிலாளர் குடியிருப்பு அமைந்துள்ளது. அந்த குடியிருப்பில் அஸ்ஸாமைச் சேர்ந்த குடும்பத்தினர் ஒரு பெண் மற்றும் இரண்டு ஆண் குழந்தைகளுடன் வசித்து வருகின்றனர்.


கடந்த 6–ந் தேதி ​​தங்கள் வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்த சுமார் 5 வயதுடைய சிறுவன் சைபுல் ஆலம் என்பவரை அருகிலுள்ள தேயிலை புதர்களுக்குள் சிறுத்தை இழுத்துச் சென்றுள்ளது.


சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் உடனடியாக தோட்ட அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்ததின் பேரில் வால்பாறை வனத்துறையினர், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். வனத்துறையினரின் தேடுதல் வேட்டையில் தேயிலை புதர்களில் இருந்து சிறுவனின் உடலை கண்டறிந்து, வால்பாறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.


இந்த துயர சம்பவத்தில் உயிரிழந்த சிறுவனின் குடும்பத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் வனத்துறை செய்து வருகிறது.


வால்பாறை பகுதியில் உள்ள தேயிலை தோட்ட எஸ்டேட் குடியிருப்புகளில் வனவிலங்குகளின் நடமாட்டத்தினால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதை தடுக்கும் பொருட்டு வனத்துறையினர், அனைத்து எஸ்டேட் பகுதிகளிலும், தொழிலாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்தி வருகின்றனர். கோவை மாவட்ட கலெக்டர் தலைமையில் எஸ்டேட் மேலாளர்களுடனும் விழிப்புணர்வு ஆலோசனைக் கூட்டங்களும் நடத்தப்பட்டு வருகின்றன.


தோட்ட அதிகாரிகளுக்கு கீழ்க்காணும் வழிமுறைகளை பின்பற்று மாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது:-


தொழிலாளர் குடியிருப்புகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் புதர்களை அகற்றி சுத்தமாக வைத்தல், தெளிவான நிலையை ஏற்படுத்த வீடுகளைச் சுற்றி விளக்குகள் அமைத்து, போதுமான வெளிச்சத்தை உறுதி செய்தல், மாலை நேரங்களில் குடியிருப்புவாசிகள் அதிக எச்சரிக்கையுடன் இருக்கவும், பாதுகாப்பை பலப்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


குறிப்பாக இந்த தோட்டத்தில் தொழிலாளர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் இரண்டு வாரங்களுக்கு முன்பு நடத்தப்பட்டது.


நீண்ட கால தடுப்பு நடவடிக்கை களை வலுப்படுத்த, குறிப்பாக புலிகள் காப்பக எல்லைக்கு வெளியே உள்ள எஸ்டேட் பகுதிகளில், தலைமை வனஉரியினக் காப்பாளரின் பரிந்துரையின் பேரில், கூடுதல் தலைமை முதன்மை தலைமை வனக்காப்பாளர் ராம சுப்பிரமணியன் தலைமையில், 5 உறுப்பினர்களைக் கொண்ட குழுவை அரசு அமைத்துள்ளது.


1. துணை இயக்குனர், (ஆனைமலை புலிகள் காப்பகம்), 2. சார்-ஆட்சியர், பொள்ளாச்சி, 3. - இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளைபிரதிநிதி, 4. வால்பாறை நகராட்சி ஆணையர், 5. உதவி ஆணையர், தொழிலாளர் (தோட்டங்கள்) வால்பாறை மண்டலம்.


இக்குழு, வால்பாறை தேயிலை எஸ்டேட் பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் திறம்பட செயல்படுத்தப்படுவதை கண்காணிக்க வும் அதனை உறுதி செய்யவும், நிலைமைகளை மதிப்பீடு செய்து குறிப்பிட்ட பரிந்துரைகளை வழங்கும். இக்குழு தனது அறிக்கையினை இரண்டு வாரங்களுக்குள் அரசிடம் சமர்ப்பிக்கும். இத்தகவலை வனத்துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் தெரிவித்துள்ளார்.


தமிழகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியும் சீர்கெட்டு உள்ளது: எடப்பாடி குற்றச்சாட்டு

சென்னை, டிச.8-


தமிழகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியும் சீர்கெட்டு உள்ளது என்று எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டி உள்ளார்.


அண்ணா தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப் பதிவில் கூறியிருப்பதாவது:-


தமிழ்நாட்டில் ஸ்டாலின் மாடல் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு பாதாளத்திற்கு சென்றிருப்பதை கடந்த 24 மணி நேரத்தில் வந்த செய்திகளே தெளிவாக உணர்த்துகின்றன. கும்பகோணம் அருகே பட்டீஸ்வரம் பள்ளி மாணவர்கள் இடையேயான மோதலில் தாக்கப்பட்ட பிளஸ்–2 மாணவர் பரிதாபமாக உயிரிழப்பு. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் எடை தராசால் அடித்து காய்கறி கடைக்காரர் கொலை. தென்காசியில் சொத்து தகராறில் விவசாயி வெட்டிப்படுகொலை.


சேலம் தோப்பூர் பகுதியில் தலை துண்டித்து கொல்லப்பட்ட இளைஞரின் தலையை தேடும் போலீசார். நாகர்கோவிலில் பட்டப்பகலில் சாலையில் நடந்து சென்ற பெண்ணை வழிமறித்து திருட முயற்சி என தொடர்ச்சியாக வரும் செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன.


பள்ளி மாணவர்கள் இடையே படிப்பு தான் வளர வேண்டும். ஆனால், ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை போக்கு தான் அதிகரித்து வருகிறது. கொலை வரை நீண்டுள்ள இந்த மோதல் வெறியை கட்டுப்படுத்தத் தவறியதற்கு பொம்மை முதல்-அமைச்சரின் அரசு வெட்கப்பட வேண்டும்.


விவசாயி, வியாபாரி, பெண், இளைஞர் என யாருக்குமே பகல், இரவு என எந்த நேரத்திலும் துளி கூட பாதுகாப்பு இல்லாத ஒரு அவலத்தின் மொத்த உருவான ஆட்சியைத் தான் மு.க.ஸ்டாலின் நடத்தி வருகிறார்.


சட்டம்ஒழுங்கு சீர்கெட்டதால் தான் தமிழகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியும் சீர்கெட்டு உள்ளது. சுய விளம்பரத்தில் திளைக்கும் பொம்மை முதல்-அமைச்சர் இதை எப்போது தான் உணரப் போகிறாரோ? ஆட்சியில் இருக்கப்போகும் 4 மாதங்களிலாவது சட்டம் ஒழுங்கின் மீது கவனம் செலுத்துமாறு ஸ்டாலின் மாடல் தி.மு.க. அரசை வலியுறுத்துகிறேன்.


இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%