ஆடி பிறந்தாச்சு
அன்னை பராசக்தியின் அருள் பெற , அவர் புகழ் பாடி மகிழும் மாதம்.
“தாயே கருமாரி எங்கள் தாயே கருமாரி,
தேவி கருமாரி துணை நீயே மகமாயி”
தட்சிணாயணப் புண்ணிய காலம் பிறக்கும் மாதமான ஆடி 1, மிக விசேஷமான மாதம்.
மருதாணி அரைத்து இட்டுக் கொண்டு , சிவந்த கைகளில் புதுக் கண்ணாடி வளையணிந்து , அம்மன் கோவிலுக்கு சென்று , அம்மனின் தெய்வீக அலங்கார அழகை அனுபவித்து , அவள் அருள் பெற வணங்குவோம்.
ஆடித்திருவிழா நமது பண்டிகைகளில் முக்கியம் வகிப்பது.
மஞ்சள் தேய்த்துக் குளித்து , பளிச்சென்று குங்குமம் அணிந்து, கையில் தேங்காய் பழம், பூ மாலை சகிதம் கோவிலுக்கு வரும் பெண்கள்…கையெடுத்து வணங்கலாம்.....
பக்தர்கள் சன்னதியின் நேர் எதிரே உள்ள பலி பீடத்தின் முன் உப்பும் மிளகும் சமர்ப்பித்து
தங்கள் மனதிலுள்ள தீய எண்ணங்களும் ,
குணங்களும் அகல வேண்டுவர்.
மாலை வேளையில் நடக்கும் கச்சேரிகள்/ பஜனைகள் பாடல்களைக் கேட்டு மகிழ இறையருள் நிறைந்து மனம் குளிரும்.
ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் , அம்மனுக்கு அபிஷேகம் ,அலங்காரம் அமோகமாக இருக்கும்.வீட்டிற்கு வரும் சுமங்கலிகளுக்குத் தாம்பூலம் கொடுப்பது வழக்கம்.
ஆடிக் கூழ் கேள்விப் பட்டிருப்போமே!
"ஆடிப்பட்டம் தேடிவிதை "என்பார்கள்.
ஆடியில் பருவ விதைப்புக்கான முதல் மழை கட்டாயம் பெய்யும்.அதனைக் கொண்டாடவே ஆடி முதல் நாள் கூழ் காய்ச்சிக் கொண்டாடுவர்.அம்மன் கோவில்களில் பெரிய பாத்திரத்தில் ஆடிப் பிறப்பன்று இந்த ஆடிக் கூழ் காய்ச்சிக் கொடுப்பார்கள்.
"ஆடி அழைத்துக் கொண்டு வரும்"
பண்டிகைகளை...
விநாயக சதுர்த்தி,கிருஷ்ண ஜயந்தி, வரலக்ஷ்மி விரதம்,ஆடி பதினெட்டு, ஆடி கிருத்திகை,
ஆடிப் பூரம் - ஆண்டாளின் அவதார தினம் என விதம்விதமாக ஒவ்வொரு நாளும் கொண்டாட்டம் தான்.
ஆடி 18 அன்று, கலந்த சாதங்கள் செய்து அம்மனுக்கு நிவேதனம் செய்வது சிறப்பு.
இம்மாதத்தில் வரும் ஆடிச் செவ்வாய், ஆடி வெள்ளிகள் முக்கியத்துவம் பெறுகின்றன.
அன்றைய தினங்களில், இல்லத்தின் வாசலில் கோலமிட்டு, பூஜையறையில் குத்துவிளக்கேற்றி ஸ்ரீலலிதா ஸஹஸ்ரநாமம் மற்றும் பல அம்மன் பாடல்களை பாடி பால் பாயசம், சர்க்கரைப் பொங்கல் போன்றவற்றை நிவேதனம் செய்து இறைவனை வழிபடுவது சிறப்பு.
பெண் குழந்தைகளை அம்மனாக பாவித்து, உணவளித்து, அவர்களுக்கு ரவிக்கை, தாம்பூலம், வளையல், குங்குமச் சிமிழ், சீப்பு, கண்ணாடி, மருதாணி, மஞ்சள் போன்றவற்றைக் கொடுத்து சிறப்பிக்க தேவியின் அருள் கிடைக்கும்.
தென்மேற்கு பருவ மழை ஆற்றின் நீர்வளத்தை அதிகரிக்கச் செய்து வெள்ளம் பொங்கி வரும்.இதனையே ஆற்றுப்பெருக்கு எனக்கூறுவர். நல்ல நாள் பார்த்து விதை விதைப்பர். தை மாதத்தில் அறுவடை செய்வர்.வற்றா நதிகளை தங்கள் தெய்வமாக போற்றி மகிழ்ந்து, உழவு வேலையை தொடங்குவார்கள். இதனையொட்டியே "ஆடிப்பட்டம் தேடிவிதை"என்ற பழமொழியும் விளைந்தது.
"தேவி நீயே துணை தென்மதுரை
வாழ் மீனலோசனி
தேவாதி தேவன் சுந்தரேசன்
சித்தம் கவர் புவன சுந்தரி அம்பா
மலையத்வஜன் மாதவமே
காஞ்சன மாலை புதல்வி மகாராணி
அலைமகள் கலைமகள் (பணிகீர்வாணி)
அமிழ்தனை இனிய முத்தமிழை வளர்த்த…
கீரவாணியில் அன்னையைப் பாடி மகிழ்வோம்.
மலையாளத்தில் இது கர்கடகம் மாதம்..
ராமாயண மாதம் 🙏🏻
தட்சிணாயன புண்ணிய காலம் தொடங்குகிறது,..
ராமாயண மாதமாக கொண்டாடப் படுகிறது கேரளத்தில் ..
அனைத்துக் கோவில்களிலும் ராமாயணம் அதிகாலை நான்கு மணிக்கு ஒலிபரப்பப் படும்..
துஞ்சத்து எழுத்தச்சன் அவர்களின் அத்யாத்ம ராமாயணமும்,வால்மீகி ராமாயணமும் வாசிக்கப் படும்.
வீடுகளிலும் சிறியவர் முதல் முதியவர் வரை ராமாயணம் இந்த மாதம் முழுவதும் வாசிப்பார்கள்...வரும் நாட்கள் அனைவருக்கும் செழிப்பாக விளங்க வேண்டும் என்ற பிரார்த்தனையுடன் பொது சத்சங்கங்களும் நடைபெறும்.
பாகவதப் பாராயணமும்,ஸப்தாகங்களுமாக ஊரே அமர்க்களப் படும்.
திருச்சூரின் பெயர்பெற்ற வடக்குந்நாத க்ஷேத்திரத்தில் , ஆடி முதல்நாள் ,இன்று ஆனையூட்டு எனப்படும் யானைக்கு பிரசாத உணவு அளிக்கப்படுகிறது....இன்றைய விழாவில் சுமார் 50 யானைகள் பங்கு பெறும்.
நாலம்பல தரிசனம் இந்த மாதம் பிரசித்தமானது..மிக விசேஷமானது கூட....அதாவது நான்கு கோயில்களில் ஒரே நாள் தரிசனம் செய்தல்...
திருப்பறையாறு - ஶ்ரீராமர்
இரிஞ்சாலக்குடா
கூடல்மாணிக்கம். - பரதர்
மூழிக்குளம். - லக்ஷ்மணர்
பாயம்பலம். - சத்ருக்னர்
ஆடி அழைத்து வரும் என்பார்கள்..
ஆம் வரும் நாட்கள் பண்டிகை நாட்களே..
தமிழ் நாட்டில் ஆடிமாத கூழ் தயாரிப்பது போல,கேரளத்தில் கர்கடகக் கஞ்சி , ஔஷதமாக தயாரிக்கப் படும்.
மழைக் காலத்தில் வரும் வியாதிகளிலிருந்து விடுபட இந்தக் கஞ்சி ஒரு ரோக நிவாரணியாக கருதப் படுகிறது.தன்வந்த்ரி கோவில்களிலும் ,
வீடுகளிலும்,தயாரிக்கப் படும் இந்த ஓளஷதக் கஞ்சி ஆரோக்கியத்திற்கு உகந்தது.
ஆவணி மாத அறுவடைக்கு ஆடியின் காற்று அவசியம்..
ஆடிப்பெருக்கு - பொங்கி வரும் காவிரித்தாயை படையலிட்டு வழிபடும் நாள்..
ஆடிப் பூரம் ஆண்டாளின் அவதார நாள்..
எல்லோர் வாழ்விலும் ஆரோக்கியமும்,
மகிழ்ச்சியும் விளங்க வாழ்த்துகளுடன் ,
சோபனா விச்வநாதன்