விதைநெல்!

விதைநெல்!

"தாத்தா உன்னை எங்க டீச்சரு...வந்து பார்க்க சொன்னாங்க..பள்ளிக்கூடத்துல வந்து பார்ப்பியாம்.. வரலேன்னா நாளைக்கி என்னை திட்டுவாங்க..மறக்காம வந்து சேரு தாத்தா"என்றபடி புத்தகப்பையோடு வீதியில் இறங்கினான் பேரன் புவனேஷ். 'என்னவா இருக்கும் பய ஏதாவது படிப்புல ஏடாகூடம் பண்ணியிருந்தா .. மருமவள தான் கூப்பிட்டு விடும் அந்த டீச்சர் புள்ள..மருமவளும் அதுவும் ஒன்னா படிச்ச புள்ளைக..ஒரு மண்ணும் வெ ளங்காத கெழவனுகிட்ட என்ன பேசப் போகுது'யோசனையோடு நாணல்புதராய் வளர்ந்திருக்கும் சிரைக்கப்படாத தாடியை சொறிந்தபடியே நகர்ந்தார் பள்ளிக்கூடத்தை நோக்கி. ******* "வாங்க..பெரியய்யா எவ்வளவு அனுபவசாலி நீங்க..ஆனா ஒங்க நடவடிக்கை ஒன்னும் அதை மெய்ப்பிக்க காணுமே..ம்" எடுத்த எடுப்பிலேயே தண்டல்காரனின் தெனாவெட்டில் ஆரம்பித்தார் டீச்சர். மௌனத்தினூடே சிந்திக்கலானார் 'நாம என்ன தப்பு..பண்ணினோம்..சிநேகிதிகாரி ஏதும் குறை சொல்லி கண்டிக்க சொல்லியிருப்பாளோ..அப்படியே உயிர் கொடுக்குற நட்பாக இருந்தாலும்..நம்ம குடும்பத்து விவகாரத்துல தலையிட உரிமையும்..கண்டிக்க வயசும் அனுபவமும் உண்டா இந்த பொடிமட்டைக்கீ.. 'முசுமுசுவென மூக்கு விடைக்க எழுந்த கோபத்தை கட்டுப்படுத்திக்கொண்டார். "என்னம்மா..என்னவோ கேட்கறீங்க.. நாலெழுத்து படிச்ச புள்ளை..நானோ கைநாட்டுக்காரன்.. புரியலியேமா.?". " அதொன்னுமில்ல பெரியவரே..அறுவடை செஞ்சு களத்துக்கு வர்ற நெல்லுல ..விதை நெல்லு..விற்பனை நெல்லு..வீட்டுக்கு நெல்லுன்னு பிரிப்பீங்க தானே". "ஆமாம்மா.. ஒவ்வொன்னுக்கும் பதக்காய்ச்சல்.. பக்குவம் இருக்குல்லம்மா.. தனித்தனியா தானே செப்பமிடனும்.. அதுதானே காலாகாலத்து வழமை". " சரிதான் ..ஐயா அபபடியே மனிதர்களையும் பகுத்து பார்க்க தெரியனுமே ..உங்க பேரன் விதை நெல்லு மாதிரி இல்லியா..உங்க வம்ச விளைச்சலை தரப்போற தலைமுறை விதை..அடுத்த அடுக்கு வீரியவிதையை கைமாத்தி தரவேண்டிய கடமை உள்ளவன்.சரியா.?!அன்னிக்கு கடைவீதியில பார்க்கறேன்.. திண்பண்டத்துக்கு காசு கேட்டு வந்த அவனை..நிக்க வச்சுகிட்டு..அவனுக்கு எதிரிலேயே சாராயப்பாட்டிலை திறக்கறீங்க..கப்புல கவிழ்த்து சீப்பிக்குடிச்சிட்டு.. ஊறுகாய நக்கறீங்க..நீங்க கண்ணை மூடி அந்த கருமாந்திரத்தை குடிக்கும் போது..சின்னப்பசங்க கூடிநின்னு வேடிக்கை பார்க்கறானுங்க.. ஏதோ சாகசத்தை பார்க்குற சுதாரிப்பு..நாளை அவனுங்க அந்த சாகசத்துக்கு ஏங்குவானுங்க..பாதை மாறி சீரழிஞ்சு..வீடு.. சமுதாயம்..எதிர்காலம் எல்லாம் அவனுங்களுக்கு எதிராகிடும்..அந்த பசங்களுக்கு ஒரு ரூபாய தூக்கிப்போட்டு துரத்திவிட்டுட்டு.. மறைவா போயி உங்க உற்சாகசாந்தியை வச்சுக்குங்க ஐயா...விதை நெல்லை மட்டும் மூனுகாய்ச்சல் போட்டு ..வேப்பிளை..நொச்சியிலை.. மிளகாய்வற்றல் கலந்து கோட்டை கட்டி காவந்து பண்ணுறது மட்டும் சம்சாரித்தனமில்ல.. சமுதாயத்துல இளையதலைமுறை ங்கிற விதை நெல்லையும் பக்குவப்படுத்தி பாதுகாத்து வளர்த்தெடுக்கறதும் நம்ம பொறுப்பு தானே ..ஐயா"என்றார் டீச்சர். தலையாட்டி அமோதித்து கண்கள் கலங்க கைகூப்பினார். பதிலுக்கு டீச்சரும் கைகூப்ப..புது அனுபவத்தை பூரிப்போடு பார்த்து நின்றார்கள் கிராமத்து குழந்தைகள்.!*-----------

*அரும்பூர். க.குமாரகுரு , மயிலாடுதுறை*

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%