வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தில் 19-வது உலகளாவிய உற்பத்தி மாநாடு: முன்னாள் நீதிபதி சதாசிவம் துவக்கி வைத்தார்
வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தில் 19-வது உலகளாவிய உற்பத்தி மாநாடு: முன்னாள் நீதிபதி சதாசிவம் துவக்கி வைத்தார்
உயர் கல்வியில் தமிழ்நாடு முதலிடம்: வேந்தர் விசுவநாதன் பெருமிதம்
வேலூர்,
இந்தியா உலகளாவிய உற்பத்தி மற்றும் கண்டுபிடிப்பு மையமாக உருவெடுத்து வருகிறது என்று சுப்ரீம் கோர்ட் முன்னாள் தலைமை நீதிபதி பி.சதாசிவம் பேசினார்.
வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தில் மெக்கானிக்கல் துறை சார்பில் 19- வது உலகளாவிய உற்பத்தி மற்றும் மேலாண்மை குறித்த மூன்று நாள் மாநாட்டை சுப்ரீம் கோர்ட் முன்னாள் தலைமை நீதிபதியும், கேரளா முன்னாள் ஆளுநருமான துவக்கி வைத்து பி.சதாசிவம் பேசியதாவது:
உற்பத்தித் துறை என்பது ஒரு தொழில்துறை மட்டுமல்ல. வலுவான பொருளாதாரத்திற்கு அடித்தளமாகும். மேலாண்மை என்பது நிர்வாகம் மட்டுமின்றி தலைமைத்துவம், உத்தி மற்றும் தொலைநோக்குப் பார்வை ஆகியவற்றின் தொகுப்பாகும். உற்பத்தியும், மேலாண்மையும் இணைந்தே ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கான இரட்டை எஞ்சின்களாக விளங்குகின்றன. இந்தியா ஆத்மநிர்பார் பாரத் என்ற தொலைநோக்குப் பார்வையுடன், விண்வெளி, பாதுகாப்பு, செமிகண்டக்டர், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, டிஜிட்டல் உற்பத்தி, மேம்பட்ட பொருட்கள் போன்ற துறைகளில் விரைவான வளர்ச்சியுடன், இந்தியா உலகளாவிய உற்பத்தி மற்றும் கண்டுபிடிப்பு மையமாக உருவெடுத்து வருகிறது.
வி.ஐ.டி. பல்கலைக்கழகம் ஆராய்ச்சி மற்றும் புதுமை படைப்பதில் முக்கிய பங்காற்றுகின்றன. இவையெல்லாம் இந்தியாவை அறிவியல் மற்ற மற்றும் தொழில்துறை சிறப்பின் முன்னணிக்கு உயர்த்தும் முக்கிய காரணிகள் ஆகும். உலகத் தரம் வாய்ந்த ஆய்வுக்கூடங்கள், நவீன ஆராய்ச்ச்சி மையங்கள், தொழில்துறையுடன் இணைந்த பாடத்திட்டங்கள், இந்தியக் கல்வியை மாற்றி வரும் வேந்தரின் தொலைநோக்கு பார்வையாக உள்ளது. இவை அனைத்தும் விஐடியை தனித்துவமாக மாற்றி உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
வேந்தர் விசுவநாதன்
மாநாட்டிற்கு தலைமை வகித்து விஐடி வேந்தர் கோ.விசுவநாதன் பேசியதாவது:
மொத்த உள்நாட்டு உற்பத்தியில், இந்தியா உலக அளவில் 4-வது இடத்தில் உள்ளது. தனிநபர் வருமானத்தில் உலக அளவில் 140வது இடத்தில் உள்ளது. பள்ளி கல்வியில், கேரளா நாட்டிலேயே முதலிடத்தில் உள்ளது. கல்வி கற்றவர்களின் சதவீதத்தில், கேரளா முதலிடத்தில் உள்ளது. உயர்கல்வியில், தமிழ்நாடு முதலிடம், கேரளா 2-ம் இடம். பள்ளி கல்வியில், அவர்கள் முதலிடம், தமிழ்நாடு இரண்டாம் இடம். இந்த நிலை மற்ற மாநிலங்களிலும் வர வேண்டும். உற்பத்தி செய்ய முன்வருபவர்களை ஊக்குவிக்க வேண்டும். அவர்களுக்கு அனைத்து சலுகைகளையும் வழங்க வேண்டும். இதன் மூலம் வேலைவாய்ப்புத் திறனும், பொருளாதாரமும் உயரும்.
இவ்வாறு அவர் பேசினார்.
மாநாட்டில் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு முகமை (டிஆர்டிஓ) முன்னாள் தலைவர் ஜி.சதீஷ் ரெட்டிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதும், ஐஐடி பேராசிரியர் டி.பிரதீப் அவர்களுக்கு சிறந்த ஆராய்சிக்கான விருதும், டிஆர்டிஓ விஞ்ஞானி ஜி.மதுசூதன் ரெட்டிக்கு சிறந்த பணிக்கான விருதும் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.
மாநாட்டில் விஐடி துணைத் தலைவர் சேகர் விசுவநாதன், ரமணி பாலசுந்தரம், உதவித் துணைத் தலைவர் காதம்பரி எஸ்.விசுவநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.