ஹைதராபாத் ஏடிஎம்மில் பணம் செலுத்த சென்றவரிடம் துப்பாக்கிச் சூடு நடத்தி ரூ.6 லட்சம் கொள்ளை
Feb 02 2026
17
ஹைதராபாத்: தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் நேற்று அதிகாலை 6 மணியளவில் ஜவுளிக்கடைக்காரர் ஒருவர் ஏடிஎம்மில் ரூ.6 லட்சம் செலுத்த சென்ற போது, 2 மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டு, அப்பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
ஹைதராபாத் நாம்பல்லி பகுதியில் ஜவுளிக்கடை நடத்தி வருபவர் ரிஷாத். இவர் தினமும் தனது கடையில் நடக்கும் வியாபார பணத்தை மறுநாள் காலையில் அங்குள்ள ஒரு ஏடிஎம் மையத்துக்கு சென்று தனது வங்கி கணக்கில் செலுத்துவது வழக்கம். அதுபோல் நேற்று அதிகாலை ஒரு பையில் ரூ.6 லட்சம் பணத்துடன், கோட்டி பகுதியில் பேங்க் சாலையில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியின் ஏடிஎம்-க்கு சென்றார். அப்போது இவரை பின் தொடர்ந்து வந்த இருவர், முகக்கவசம் அணிந்து இவரை நெருங்கி, பணப்பையை பறித்துக் கொண்டு பைக்கில் தப்பினர்.
அப்போது திருடன், திருடன் என கத்திய ரிஷாத்தை கைத்துப்பாக்கியால் சுட்டு விட்டு மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி தலைமறைவாகி விட்டனர். ரிஷாத்துக்கு காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்ததால் அவரால் தொடர்ந்து ஓட முடியாமல் கீழே விழுந்து விட்டார். உடனே அங்கிருந்தவர்கள் ரிஷாத்தை சிகிச்சைக்காக காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து ரிஷாத் அளித்த புகாரின் பேரில் கோட்டி போலீஸார் சம்பவ இடத்தில் கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர்.
இந்த கொள்ளை சம்பவம் நேற்று காலை 6 மணி முதல் 6.30 மணிக்குள் நடந்துள்ளது. ஆட்கள் நடமாட்டம் அதிகம் உள்ள அப்பகுதியில், கொள்ளையர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தி பணத்தை கொள்ளை அடித்து சென்றுள்ளது பொது மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது. கொள்ளையர்களை பிடிக்க 5 தனிப்படை அமைக்கப்பட்டிருப்பதாக டிஎஸ்பி சில்பாவல்லி தெரிவித்துள்ளார். இதனிடையே துப்பாக்கி சூடு நடைபெற்ற இடத்தை போலீஸார் ஆய்வு செய்தனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?