*பட்டாசு இல்லாத பண்டிகை.*

*பட்டாசு இல்லாத பண்டிகை.*



வெளிச்ச தீபாவளிக்

கொண்டாட்டங்களுக்குள்

கருகிக்கிடக்கிறது

பிஞ்சுகளின் பெருங்கனவு.


ஒவ்வொரு வெடிச்சத்தங்களிலும்

ஒளிந்திருக்கிறது

ஏதோ ஒரு இதயத்துடிப்பின் 

நிசப்தம்.


சங்குச் சக்கரங்களில்

வட்டம் போடும்

வறுமையின் கோடுகள்.


கம்பி மத்தாப்புக்களை

எண்ணி எண்ணியே

கணிதம் கற்கும்

கந்தக அரும்புகள்.


சின்னச் சின்னப்பட்டாசுகளாய்

வெடித்துச் சிதறும்

சிட்டுக்குருவிகளின் சிறகுகள்.


குறிக்கோள்கள் புஸ்வாணமாக

கரிக்கோலில் ராக்கட் செய்யும் ஏவலாய் ஆன எடிசன்கள்.


நகக்கண்களில்

நச்சுக்களைச் சுமந்தே

நம் கண்களில்

வெளிச்சம் வீசும்

தணல் சுட்ட தளும்புகள்.


முகத்தில்

அடர்கரும்புகையை

அப்பிக்கொண்டு

வானில் வர்ணஜாலம் காட்ட

எரிந்து முடியும் வெளிச்சங்கள்.


திரிகளைக்கிள்ளி

பட்டாசுகளைப் பற்றவைக்கும்போதெல்லாம்

எனக்கு

ஒரு குழந்தையின் தலையில்

கொள்ளி வைப்பதாகவே

குலைநடுங்குகிறது.


புத்தாடை இனிப்போடு

கொண்டாடும் திருநாளில்

இந்த கந்தகப் புகையினில்

கடவுளின் தரிசனமே

மங்கிப் போகிறது.


இயற்கையை இம்சித்து

பிற உயிர்களையும்

அலறவிடும் அபாயச் சங்கை

அணைத்து வைப்போம்.


இனி தீபாவளி

தீபங்கள் ஒளிர்கின்ற

திருநாளாய் மலரட்டும்.


பலி கூடமாய் மாறிவிட்டப்

பட்டாசு ஆலைகளெல்லாம்

பள்ளிக்கூடமாய் ஆகட்டும்.


*நறுமுகை*.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%