14 டன் கனரக செயற்கைக்கோள்களை ஏவுவதற்காக ஸ்ரீஹரிகோட்டாவில் 3-வது ஏவுதளம்: இஸ்ரோ தலைவர் நாராயணன் தகவல்
Dec 31 2025
75
சென்னை, டிச.
ஸ்ரீஹரிகோட்டாவில் 14 ஆயிரம் கிலோ எடை கொண்ட பொருட்களை தூக்கி செல்லும் திறன் கொண்ட 3-வது ஏவுதளம் அடுத்த 4 ஆண்டுகளில் செயல்பாட்டுக்கு வரும் என்று இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் கூறினார்.
ஆந்திரா மாநிலம் திருப்பதி மாவட்டத்தில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்திற்கு (இஸ்ரோ) சொந்தமான ஏவுதளம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ளது.
இங்கு பி.எஸ்.எல்.வி. மற்றும் சிறிய வகை ராக்கெட்டுகளை ஏவுவதற்காக முதலாவது ஏவுதளமும், 6 ஆயிரம் கிலோ எடைகளை தாங்கி செல்லும் பாகுபலி அதாவது ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3, எல்.வி.எம். ரக ராக்கெட்டுகள் 2-வது ஏவுதளத்தில் இருந்து விண்ணில் ஏவப்படுகிறது.
இதனை தொடர்ந்து மனிதர்களை விண்ணுக்கு அனுப்பி மீண்டும் பூமிக்கு அழைத்து வரும் ககன்யான் போன்ற திட்டங்களை செயல்படுத்த இஸ்ரோ தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இதனால் 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட எடையை தாங்கி செல்லும் ராக்கெட்டுகளை விண்ணில் செலுத்த கூடுதல் சக்தி கொண்ட 3-வது ஏவுதளம் அமைக்க இஸ்ரோ திட்டமிட்டு இருந்தது.
இதுகுறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறும்போது, ‘ஸ்ரீஹரிகோட்டாவில் 2-வது ஏவுதளத்தில் எதிர்பாராதவிதமாக விபத்துகள் ஏதேனும் ஏற்பட்டு ஏவுதளம் சேதமடையும்போது ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட்டுகளை ஏவ முடியாத சூழல் ஏற்படும். இஸ்ரோவின் அனைத்து விண்வெளி திட்டங்களும் தாமதமடையும். எனவே முன்னெச்சரிக்கையாக ஜி.எஸ்.எல்.வி. மட்டுமின்றி, என்.ஜி.எல்.வி. (அடுத்த தலைமுறை ராக்கெட்) ராக்கெட்டுகளையும் ஏவும் வசதி கொண்ட 3-வது ஏவுதளத்தை ஸ்ரீஹரிகோட்டாவில் அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த ஏவுதளத்தில் மகேந்திரகிரி இஸ்ரோ மையம் போன்ற சோதனை மையமும் அமைக்கப்பட உள்ளது' என்றனர்.
அடுத்த தலைமுறைக்கான என்.ஜி.எல்.வி. ராக்கெட் தயாரிப்பு விஞ்ஞானிகள் கூறும்போது, ‘12 ஆயிரம் முதல் 14 ஆயிரம் டன் எடையை சுமந்து செல்லும் திறன் கொண்ட அதிநவீன என்.ஜி.எல்.வி. ராக்கெட் தயாரிப்பு பணிகளில் இஸ்ரோ தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்த ராக்கெட் 3 நிலைகளைக் கொண்டதாக இருக்கும். இதில் முதல் நிலையை மீண்டும் பயன்படுத்த முடியும்’’ என்றனர்.
ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் 3-வது ஏவுதளம் அமைக்க தேசிய விண்வெளி ஆணையம் ஏற்கனவே ஒப்புதல் அளித்துவிட்டது. பணி தொடங்கப்பட்டு அடுத்த 4 ஆண்டுகளில் இந்த ஏவுதளம் செயல்பாட்டுக்கு வரும் என்று இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் கூறினார்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?