3வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா வளர்ச்சி ஜனாதிபதி திரெளபதி முர்மு உரை

3வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா வளர்ச்சி ஜனாதிபதி திரெளபதி முர்மு உரை



புதுடெல்லி, ஜன.


3வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா வளர்ச்சி அடைந்துள்ளது என்று பார்லிமெண்ட் கூட்டத் தொடரில் ஜனாதிபதி திரெளபதி முர்மு பெருமிதத்துடன் கூறினார்.


நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கியது


பரபரப்பான அரசியல் சூழலில், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் குடியரசுத் தலைவர் உரையுடன் இன்று (ஜன. 28 ) தொடங்கியது.நடப்பாண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால், இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு உரையாற்றினார்.


இன்று தொடங்கியுள்ள பட்ஜெட் கூட்டத் தொடர் ஏப்ரல் 2ம் தேதி வரை இரு கட்டங்களாக நடைபெறவுள்ளது. முதல் கட்ட அமர்வு பிப்ரவரி 13–ந்தேதி வரையும், இரண்டாம் கட்ட அமர்வு மாா்ச் 9 முதல் ஏப். 2 வரையும் நடைபெறுகிறது. குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்துக்கு பிப். 2 முதல் மூன்று நாள்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.


இக்கூட்டத் தொடர் சுமுகமாக நடைபெறுவதை உறுதி செய்யும் நோக்கில், பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நேற்று அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தப்பட்டது. இந்த நிலையில், 2026–27ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் பிப்ரவரி 1ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தாக்கல் செய்யப்படவுள்ளது. இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் ஞாயிற்றுக்கிழமை பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது மிக அரிதான நிகழ்வாகும். மத்திய பட்ஜெட்டை தொடர்ந்து 9-ஆவது முறையாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யவுள்ளார். நாளை பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது.


இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றினார்.


முன்னதாக மராட்டிய மாநில துணை முதலமைச்சர் அஜித் பவாரின் மறைவுக்கு அவர் இரங்கல் தெரிவித்தார். தொடர்ந்து அவர் பேசியதாவது;- “நாட்டில் பின்தங்கிய மக்களை முன்னேற்றுவதே அரசின் நோக்கம். அருணாசல பிரதேசம், திரிபுரா, மிசோரம் மாநில தலைநகரங்கள் அகல ரெயில் பாதையுடன் இணைக்கப்பட்டுள்ளன.


மின் வாகன உற்பத்தியில் இந்தியா புதிய உச்சத்தை அடைந்துள்ளது. அசாமில் செமிகண்டக்டர் ஆலை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. விண்வெளி சுற்றுலா வெகு தூரத்தில் இல்லை. நாட்டில் சமூக நீதியை நிலைநாட்ட மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது.


இந்தியாவில் பொருளாதாரம் வலுவாக உள்ளது. உலகின் 3-வது பெரிய பொருளாதாரமாக இந்தியா வளர்ச்சி அடைந்துள்ளது. மெட்ரோ கட்டமைப்பில் 3-வது பெரிய நாடாக இந்தியா மாறி இருக்கிறது. தமிழகத்தில் புதிய பாம்பன் பாலம் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.


உணவு உற்பத்தியில் சாதனை


கடந்த ஆண்டில் 350 மில்லியன் டன் உணவு தானிய உற்பத்தி செய்து இந்தியா சாதனை படைத்துள்ளது. இந்தியாவில் உள்ள கிராமங்கள் நெடுஞ்சாலைகள் மூலம் இணைக்கப்பட்டுள்ளது. 2014ம் ஆண்டின் தொடக்கத்தில், சமூக பாதுகாப்பு திட்டங்கள் 25 கோடி குடிமக்களை மட்டுமே சென்றடைந்தன. அரசாங்கத்தின் முயற்சிகளால் தற்போது சுமார் 95 கோடி இந்தியர்கள் சமூக பாதுகாப்புத் திட்டங்களால் பயன் பெறுகின்றனர். 25 கோடி மக்கள் வறுமையில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர். ஜல்ஜீவன் மிஷன் திட்டம் மூலம் 12.5 கோடி குடும்பங்களுக்கு குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.


4 கோடி கான்கிரீட் வீடுகள்


இனி வரும் ஆண்டுகளில் 4 கோடி கான்கிரீட் வீடுகள் வழங்கப்படும்.


மீனவர்கள் நலனுக்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மகளிருக்காக பல்வேறு திட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் எய்ம்ஸ் உள்ளிட்ட மருத்துவமனைகள் உருவாக்கப்பட்டுள்ளன. லாக்பதி தீதி என அழைக்கப்படும் லட்சாதிபதி சகோதரிகள் திட்டம் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்படுகிறது. அரிய தாதுப் பொருள்களின் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.


ஆபரேஷன் சிந்தூர் மூலம் பயங்கரவாதிகளின் முகாம்கள் அழிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிற்கு எதிரான நடவடிக்கைகளுக்கு வலுவான பதிலடி கொடுக்கப்படும். (இந்தியப் படைகளின் வீரத்தை ஆப்ரேஷன் சிந்தூர் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.)


இடதுசாரி பயங்கரவாதத்திற்கு எதிராக வலுவான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. நாட்டில் தற்போது இடதுசாரி பயங்கரவாதம் வெறும் 8 மாவட்டங்களில் மட்டுமே உள்ளது. 100-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இடதுசாரி பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டதால் மக்கள் நிம்மதியாக வாழ முடிகிறது.


இந்தியாவில் விரைவில் இடதுசாரி பயங்கரவாதம் முற்றிலும் ஒழிக்கப்படும். கடந்தாண்டு 50 ஆயிரமாக இருந்து ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் எண்ணிக்கை இந்தாண்டு 2 லட்சமாக உயர்ந்துள்ளது. 2 லட்சம் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் மூலம் 2 லட்சம் நபர்களுக்கு வேலை கிடைத்துள்ளது. உலகக்கோப்பைகளை வென்ற இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, மகளிர் பார்வையற்றோர் கிரிக்கெட் அணிகளுக்கு பாராட்டுகள்.


இவ்வாறு ஜனாதிபதி கூறினார்.


எதிர்க்கட்சிகள் கடும் அமளி


வி.பி.ஜி. ராம் ஜி சட்டத்தை ஜனாதிபதி குறிப்பிட்ட போது எதிர்க்கட்சி எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர்.



Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%