அந்த ஐடி நிறுவனத்தின் கேண்டினிற்குள் நுழைந்த திலீப் இடப்புறம் சற்றுத் தள்ளியிருந்த மேஜையில் தனியே அமர்ந்திருந்த சங்கீதாவை பார்த்ததும், 'கரெக்ட்... இதுதான் நல்ல சமயம்... இப்பவே போய் அந்த மனோகரைப் பற்றி இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி அவ மனசைக் கலைக்கணும் அப்பத்தான் நான் அவளைக் கரெக்ட் பண்ண முடியும்" தனக்குள் சொல்லிக்/கொண்டு அவளிடம் சென்றான்.
அவனைக் கண்டதும் சங்கீதா, "வா திலீப் உட்காரு"
உட்கார்ந்தான்
"வந்து... சங்கீதா ஒரு விஷயம் சொல்றேன்... நீ என்னைத் தப்பா நினைக்க கூடாது" என்று பீடிகையுடன் ஆரம்பித்து "மனோகர் ஒரு போதை அடிமை!... ட்ரக் அடிக்ட்!... சரக்கு மட்டும் இல்லை... கஞ்சா... ஹெராயின்... அபின்... போன்ற எல்லாத்துக்கும் அடிமை"
கண்களை அச்சத்துடன் விரித்தாள் சங்கீதா.
"அதுமட்டுமில்லை... அப்பப்ப "பப்"புக்குப் போய் மோசமான பெண்களோடு டான்ஸ் ஆடுவான்... அவர்களை பிக்அப் பண்ணிட்டு போய் "கச...முசா" வேலை எல்லாம் செய்வான்"
சங்கீதா விழிகள் சிவந்தாள்.
"நானும் எவ்வளவோ சொல்லி அவனைத் திருத்த முயற்சி பண்ணினேன் முடியலை.. இதையெல்லாம் உன்கிட்ட எதுக்கு சொல்றேன்னா நீ அவனை நல்லவன்னு நம்பி ஏமாந்துடக் கூடாதல்லவா?" நல்ல பிள்ளை போல் திலீப் பேச, "ரொம்பத் தேங்க்ஸ் திலீப்" என்று சொல்லி விட்டு "விருட்"டென்று எழுந்து நடந்தாள் சங்கீதா.
திலீப் மகிழ்ந்து போனான்
அவன் சந்தோஷத்தைச் சாய்க்கும் விதமாய் அடுத்த சில நாட்கள் சங்கீதா அந்த மனோகருடன் அதிகமாய் பேசிப் பழக ஆரம்பித்தாள். இருவரும் டூவீலரில் அடிக்கடி வெளியே சுற்றவும் செய்தனர்.
சங்கீதாவிடம் தனியாகபேசும் வாய்ப்புக்காகக் காத்திருந்த திலீப் அது கிடைத்ததும் நேரடியாகவே கேட்டான்.
"என்ன சங்கீதா இப்பல்லாம் மனோகர் கிட்ட ரொம்ப குளோஸ் ஆயிட்ட போலிருக்கு"
"ஆமாம் திலீப் நீ அவனைப் பத்திச் சொன்னதிலிருந்து எனக்கு அவன் மேல் கோபத்திற்கு பதில் பரிதாபம் தான் தோன்றியது!... நல்லவனான ஒரு இளைஞன் அறியாமையால் கெட்ட பழக்கங்களில் ஈடுபட்டால் அவனை ஒதுக்கி விடுவதை விட அவன் கூடப் பழகி அவனைத் திருத்த முயற்சி செய்யணும்... அதைத்தான் நான் செய்கிறேன்... அவன் இப்ப நல்லாவே மாறிட்டான்... நீ சொன்ன கெட்ட பழக்கங்கள் பக்கம் எல்லாம் போறதே இல்லை... உண்மையைச் சொல்லணும்னா ஆரம்பத்தில் அவன் கூட நட்பா மட்டும் தான் நான் பழகிட்டிருந்தேன் இப்ப காதலிக்கவே ஆரம்பிச்சிட்டேன்... படிப்பு முடிஞ்சதும் கல்யாணம் பண்ணிக்கப் போறோம்!"
தலை மேல் இடி விழுந்தது போல் இருந்தது திலீப்பிற்கு.
(முற்றும்)
-முகில் தினகரன்,
கோவை