tamilnadu epaper

அவன்தான் உங்களை

அவன்தான் உங்களை


உங்கள் ஊரிலும் 

அவன் இருக்கக்கூடும்.


நீங்கள் போகும் வழி 

ஒன்றாக இருந்தால் 

அவன் போகும் வழி 

வேறொன்றாக இருக்கும்.


இருந்தாலும் 

அவன் எப்போதும் 

உங்களையே நத்திக்கொண்டிருப்பான்


உங்கள் தயவையே

வேண்டிக்கொண்டிருப்பான்

உங்கள் அன்புக்காகவே

ஏங்கிக்கொண்டிருப்பான்...


நீங்கள் போனாலும்

போகாவிட்டாலும்,

அவன்தான் உங்களை

கருத்தரங்கத்திற்கு அழைப்பான்


அவன்தான் உங்களை

கவியரங்கத்திற்கு கூப்பிடுவான்


அவன்தான் உங்களிடம்

ஆய்வரங்கத்திற்கு போகலாம் என ஆளாய்ப் பறந்திருப்பான்


அவன்தான் உங்களிடம் நூல் வெளியீட்டு விழாவுக்கு போவோம் எனக்கூறி ஒற்றைக்காலில் நின்றிருப்பான்


அவன் உங்களை எழுத்தாளர்களின் இறப்புக்கு போயே ஆகவேண்டும் வாருங்கள் என அழைத்திருப்பான்


அவன்தான் உங்களை மறைந்த கவிஞனின் நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொள்ளச் சொல்லி இறைஞ்சியிருப்பான்


நீங்கள் கேட்டாலும் கேட்காது போனாலும் அவன்தான் இச்சமூக முன்னேற்றம் குறித்து ஆழமாய் பேசியிருப்பான்


அவன்தான் உங்களிடம் இம்மண்ணின் மேன்மைகள் குறித்து மணிக்கணக்காய் கதறியிருப்பான்


அவன்தான் உங்களிடம் மழைமேல் உள்ள காதலை அடைமழையாய் கொட்டியிருப்பான்


அவன்தான் உங்களிடம் பறவைகளின் பசி குறித்து பசி மறந்து பேசியிருப்பான்....


அவன் உங்களூரில் உங்களிடையேதான் எங்காவது நடமாடிக்கொண்டிருப்பான்


அவன் உங்களுக்கானவன் என்பதை உணர்வதோடு வாய்ப்பிருந்தால் அவனை நோக்கி சில புன்னகைப் பூக்களை வீசுங்கள்


அவன் அவ்வளவு மகிழ்வான் 

இந்நிலமும் அவ்வளவு குளிரும்.