கருவறையில்
தொடங்கி
கல்லறை
வரைக்குமே
தொடர்கின்றது
கற்றலின்
பயணம்...
மழலையில்தான்
அதிகம்
கற்கிறான்
அப்படி
கற்றதை
வைத்துதான்
வாழ்நாளில்
பயணிக்கிறான்...
ஆறாய்
பிறந்து
நதியாய்
சென்று
கடலாய்
கலக்க
வேண்டியவன்...
கற்றலுக்கு
முற்றும்
போட்டதும்
தேங்கிய
குட்டையாகிறான்...
கற்றல்
எங்கு
நிற்கிறதோ
அங்கு
நிகழ்கிறது
அறிவின்
மரணம்
வளர்ச்சியின்
மரணம்
வாழ்வின்
மரணம்
மனிதனின்
மரணம்...
கற்கும்
மனமிருந்தால்
மரணத்திடமும்
கற்கலாம்...
வாழும் நொடியே
வாழ்க்கை
நோய் நொடி
இல்லாததே
வாழ்க்கை
என்பதை
வாழ்க்கையை
கொள்ளை
கொண்ட
கொரானாவில்
கற்றேன்...
உடன் வருவது
எதுவுமில்லை
என்பதை
மற்றவர்களின்
மரணத்தில்
கற்கிறேன்...
கட்டியிருந்த
அரைஞாண்
கயிறும்
சொந்தமில்லை
என்பதை
புதைக்கும்
தருவாயில்
கற்கிறேன்...
புதைத்த
ஆறடி நிலமும்
சொந்தமில்லை
என்பதை
அதே
புதைத்த குழியில்
அடுத்தவனை
புதைக்கையில்
கற்கிறேன்..
இயற்கைக்கு
முன்
மனிதன்
ஒன்றும் இல்லை
என்பதை
சுனாமியால்
கற்றேன்..
மனிதன்
இயற்கை
எய்தும் வரை
கற்கிறவனே
வாழ்ந்தவனாகிறான்...
கற்றலை
நிறுத்துகிறவன்
நிறுத்துகிற
நொடியே
மடிந்து போகிறான்...
-ஆறுமுகம் நாகப்பன்