tamilnadu epaper

நின்றுபோன இதயம்

நின்றுபோன இதயம்


குடிகாரக்கணவன் வேண்டாமென

சாலினி பிரிந்துவந்து

வருடங்கள் ஆறாயிற்று..


அம்மா இறந்துபோனபின்

அப்பாவே உறுதுணையாய்

வாழ்வை பழக்கியாயிற்று..


சுட்டியாய் புன்னகைக்கும்

தன் சுட்டிப்பெண்ணுக்காய்

வாழ்க்கை வதைகளை

சகித்துக்கொண்டாயிற்று..


பார்வையால் வார்த்தைகளால்

சிறு தொடுகைகளால்

இந்த ஆண்களின் வக்கிரம்

தவிர்க்கவும் பழகியாயிற்று..


ஆஸ்துமா அப்பாவை

அவ்வப்போது தொல்லை செய்யும்..


சளி இருமல் காய்ச்சலென

குட்டி தேவதைக்கும்

இம்சை வரும்..


விடுப்பின்றி வேலைக்கு

போனால்தான் சமாளிக்கமுடியும்..


ஆனாலும் சாலினிக்கு 

கொஞ்ச நாளாய்

நெஞ்சு சுள்ளென்று

வலி பிசைந்துகொண்டேயிருக்கிறது..


ஆஸ்பத்திரியை நினைத்தால்

அச்சமாக இருக்கிறது..


நோயைப்பற்றியல்ல

காசைப்பற்றித்தான்..


சரி பார்த்துக்கொள்ளலாம்

அடுத்த மாதமெனத்தான்

எண்ணியிருந்தாள் கவலையாய்..


குட்டி தேவதைக்கு தலைவாரி

பொட்டு வைத்து உணவூட்டி..


அப்பாவுக்கு மருந்துகொடுத்துவிட்டு

வேலைக்கு கிளம்பியபோதுதான்..


கீழே விழுந்தாள்..


சுள்ளென வலி பரவி..


குட்டி தேவதை அறியாதிருந்தாள்

அம்மா இனி

எழப்போவதில்லையென..!


-ம.முத்துக்குமார்

வே.காளியாபுரம்