இயக்குனரும் நடிகருமான மனோஜ் பாரதியின் மறைவு பல அதிர்வுகளை ஏற்படுத்தி இருக்கிறது.
ஐம்பது வயதை கூட தொடுவதற்கு முன்னால் மிக வேக வேகமாக சென்று விட்டாரே என்ற ஆதங்கம் ஏராளமானவர்களுக்கு இருக்கிறது.
நேரடியான பழக்கமோ தொடர்போ இல்லாவிட்டாலும் கூட இது போன்ற மரணங்கள் ஒரு சிறு அதிர்வையோ அது பற்றிய பேச்சையோ நம்மிடம் இல்லாமல் கடக்காது. மனோஜை இழந்து வாடும் அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல்..
மிகப் பெரிய ஜாம்பவான்களின் வாரிசாக பிறப்பது ஒரு புறம் வரம் என்றால் இன்னொரு புறம் பெரும் மன அழுத்தம் தான்.
சமூகத்தின் நெருக்கடி. குடும்பத்தில் நெருக்கடி. எதையாவது சாதிச்சே ஆக வேண்டும் என்ற அதீத அழுத்தம். நிரூபித்தே ஆகணும் என்பதான தேவையற்ற இந்த மன அழுத்தங்கள் எல்லோராலும் தாங்கி கொள்ள இயலுமா?
இது நடிகர் இயக்குனர்கள் கலைஞர்களின் வாரிசு என்று மட்டுமல்ல. மருத்துவரின் வாரிசாக இருக்கலாம். பொறியாளரின் வாரிசாக இருக்கலாம். பெரிய தொழிலதிபரின் வாரிசாக இருக்கலாம். விளையாட்டு வீரர்களின் வாரிசாக இருக்கலாம்.
இப்படி தாய் தந்தையரின் பெயரை வாரிசுகள் எப்படியாவது நிரூபித்தாகணும் சாதித்தாகணும் என்று எழுதப்படாத விதியாக இந்த தேவையற்ற மன அழுத்தம்.
மனோஜூடைய பேட்டிகளை பார்க்கும் போது அந்த பையன் ரொம்ப ஒரு பக்குவப்பட்ட பையனாக அதே நேரம் தான் விரும்பியதை செய்ய இயலாத அளவுக்கு தன் தந்தையின் தலையீடு முழுமையாக இருந்ததை உணர முடிகிறது.
பிள்ளைகளின் ஆசை என்ன என்பதை விளங்கி கொள்ளாத பெற்றோர்களாக அவர்களின் ஆசைகளை தேர்வுகளை அனுமதிக்காத அதற்கு உறுதுணையாய் நிற்காத பெற்றோர்களாக இன்னும் ஏராளமானவர்கள் இருக்கிறார்கள். மனோஜ் நிலையும் அது தான்..
தான் இயக்குனராக வேண்டும் என்று விரும்பிய பையனை நீ நடிகனாக தான் வேண்டும் என்று தன்னுடைய ஆசையை விருப்பத்தை தன்னால் இயலாத ஒன்றை மகனிடம் நிறைவேற்றிக் கொள்ள நினைத்த சராசரி தந்தையாக இருந்து
மனோஜின் சுயத்தை தொலைக்க வைத்த பாரதிராஜா ஐயோ தெரியாமல் செய்து விட்டேன் என்று வருந்துவதற்குள் அந்த பையனின் பெரும்பகுதி வாழ்க்கை தொலைந்து போய் விட்டது.
தன்னை நிரூபிக்க நிரூபிக்க என்று பத்தாண்டு கால மன அழுத்தங்களும் தன்னையே மாய்த்துக் கொள்ளும் எண்ணங்களுமாய்
ரொம்ப பாவமான நிலையில் தன் மனைவியும் பிள்ளைகளும் தான் தான் உயிரோடு இருக்க மீண்டு வர காரணம் என்று சொல்வதையும்
வாழ்வில் தான் நினைத்தது போன்று பல விசயங்கள் நடக்கவில்லை என்றாலும் என்றாவது ஒரு நாள் தனக்கான காலமும் நேரமும் வரும் என்று நம்பிக்கையோடு பேசும் காணொளிகளை பார்க்க ரொம்ப வருத்தமாக இருந்தது.
நம் குழந்தைகள் நம்மிடம் இருந்து உலகுக்கு வந்தவர்கள் என்பதை விட நம் வழியாக உலகுக்கு வந்தவர்கள் என்ற வாசகம் மிகுந்த அர்த்தம் பொதிந்தது.
நான் பெற்ற பிள்ளை நான் சொல்ற படி என் விருப்ப படி என் ஆசைப்படி தான் நடக்க வேண்டும் என்பது மிகப்பெரிய வன்முறை அல்லவா.
பாரதிராஜாவை குறை சொல்வதற்காக இதை சொல்லவில்லை. அதே தவறுகளை செய்யும் சராசரி தாய் தந்தையாக நாம் இருந்து விட கூடாது என்பதற்காக சொல்கிறேன்.
நான் செய்ய நினைத்ததை நான் செய்ய இயலாததை என் விருப்பங்களை நான் செய்ய நினைத்த சாதனைகளை என் வாரிசுகளின் வழியாக நிறைவேற்றி கொள்ள நினைத்து அவர்களின் ஆசைகளையும் தேர்வுகளையும் குழி தோண்டி புதைப்பதை விட நம் பிள்ளைகளுக்கு நாம் செய்யும் கொடூரம் என்னவாக இருந்து விட இயலும்?
உன் நன்மைக்கு தான் சொல்றேன். என் அனுபவத்தில் சொல்றேன். உன் பெற்றோர் உனக்கு தவறாக எதையும் செய்ய நினைப்பார்களா..எங்களை விட உனக்கு நல்லது நினைக்க யாராவது இருக்க முடியுமா என்ற கேள்விகள் எதையும் தவறுன்னு சொல்ல முடியாது.
ஆனால் உங்கள் குழந்தைகளின் வாழ்க்கையை நீங்கள் அபகரிப்பது ஆக்கிரமிப்பது மிகப் பெரிய வன்முறை என்பது புரிய வேணாமா? அவர்கள் வாழ்வின் அனுபவங்களை அவர்களாய் கற்றுக் கொள்ளட்டுமே..
நாலு தடவை கீழ விழுந்து எழாமல் நடந்த குழந்தை உலகத்துல எங்காவது இருக்கா?
உலகத்தில் பிறந்த எல்லாரும் சாதிச்சே ஆகணுமா? ஒரு இயல்பான நிறைவான மகிழ்ச்சியான சாதாரண வாழ்வை வாழ்ந்து விட்டு போக கூடாதா?
நாம் செய்ய வேண்டியது எல்லாம் இயன்ற வரை அவர்களுக்கான நல்ல கல்வி. கல்வியிலும் கூட அவர்கள் விரும்பும் பாடம் படிப்பு.. அவர்கள் விரும்பும் கலைகள். பணி.
அவர்களின் விருப்பங்களுக்கு நாம் எந்த வகையில் எல்லாம் உறுதுணையாய் நிற்க இயலுமோ அதை செய்வது மட்டும் தான் நாம் செய்ய வேண்டியதே அன்றி நம் திணிப்புகளை அல்ல.
எத்தனையோ மருத்துவர்களின் வாரிசுகள் மருத்துவம் படிக்க விரும்பாத போதும் நீட்டுக்கு படி ஆட்டுக்கு படி என்று கொன்று கொலையெடுக்கும் மருத்துவ பெற்றோர் உண்டு.
நான் ஆஸ்பத்திரி கட்டிட்டேன். அதை பார்த்துக்க நீ மருத்துவம் படிப்பது மட்டும் தான் உனக்கான ஒரே ஆப்ஷன்..
அடேய்களா. உங்க காலத்துக்கு பிறகு அந்த ஆஸ்பத்திரியை நல்ல விலைக்கு வித்துட்டு போங்க. வேற யாருக்காவது கைமாத்தி விட்டுட்டு போங்க.
நீங்க ஆஸ்பிட்டல் கட்டி விட்டதற்காகவே உங்கள் வாரிசுகளை மருத்துவம் படிக்க நிர்பந்திப்பது எவ்ளோ பெரிய வன்முறை. மருத்துவ கல்லூரிகளில் நடக்கும் தற்...கொலை..
நீட் ஐஐடி கோச்சிங் தங்களால் முடியல என்று கடிதம் எழுதி வெச்சிட்டு மரணிக்கும் மாணவர்களின் கடிதங்களின் இறுதியில் இருக்கும் வாசகங்கள் எல்லாம் அப்பா என்னை மன்னிச்சிடுங்க அம்மா என்னை மன்னிச்சிடுங்க உங்க ஆசையை நிறைவேற்ற முடியல என்பதான கடிதங்களே பெரும்பான்மை.
மருத்துவம் மட்டுமல்ல. எல்லா துறை சார்ந்த பெற்றோர்களிடமும் இந்த அழுத்தம் பரவலாக இருக்கிறது.
இது தேவையற்றது. வாரிசுகள் உங்கள் தொழிலை விரும்பி வருவது வேறு. நீங்களாய் திணிப்பது வேறு..
சமூக அழுத்தங்களை புறக்கணிக்க பழகணும். இன்னமும் சொந்தமா வீடு வாங்கலியா காரில்லையா சொத்து வாங்கலியா தொடங்கி சமூகமும் குடும்பமும் தரும் புற அழுத்தங்களால் வாழ்வை தொலைத்தவர்கள் ஏராளம்.
வேறு வழியின்றி சமூகத்திடம் தன்னை நிரூபிக்க கடன்களில் இஎம்ஐகளில் விழுந்தவன் ஏராளம். ஊர்லயே பெரிய வீடு எல்லாரும் பெருமையா பேசணும் என்பதற்காகவே வீம்புக்கு கடன் வாங்கி வீணாப்போனவர்கள் ஏராளம். எத்தனை மன அழுத்தங்கள்..
மக்கா..இங்கே எவனுக்கும் நம்மை நிரூபித்தாக வேண்டிய கட்டாயம் இல்லை. நம் ஆயுசு எத்தனை வருசம்னு யாருக்கும் தெரியாது.
எனக்கான வாழ்வை எனக்கு பிடித்த மாதிரியான எளிமையான வாழ்வை நான் வாழ்ந்துட்டு போறேன். சாதனை செய்யும் வாய்ப்பு கிடைச்சவன் செய்யட்டும்.
எல்லா பயலும் சாதிச்சே ஆகணும்னா பெத்து விட்டிருக்காங்க? நமக்கு அடிப்படை தேவை என்பது ஒரு நிம்மதியான மகிழ்ச்சியான வாழ்க்கை மட்டும் தான்.
அதற்காக உழைக்க வேண்டும் தான். அது நாமாக விரும்பி செய்தாக வேண்டிய ஒன்று.
ஆனால் தேவையற்ற அதீத புற அழுத்தங்களும் இந்த சமூகத்திடம் நம்மை நிரூபித்தே ஆக வேண்டிய கட்டாயங்களை மண்டைகளுக்குள் ஏற்ற வேண்டியதும் இல்லை..நாம் நம்மை நிரூபிப்பதற்காகவே உலகத்தில் படைக்கப் பட்டவர்கள் அல்ல.
வாரிசுகளிடம் உங்கள் எண்ணங்களை திணிக்காதீர்கள். அவர்கள் வாழ்க்கையை வாழ விடுங்கள்.
சந்தோஷ் சுப்ரமணியம் நண்பன் போன்ற திரைப்பட கதைகள் எல்லாம் பார்த்தும் புரிந்தும் அதன் நியாயங்களை நாம் உணர்கிறோமா? நம் குழந்தைகளிடம் திணிக்காமல் இருக்கிறோமா?
-ஆன்டனி வளன்