tamilnadu epaper

எங்கள் ஊரின் சிறப்பு (மடிப்பாக்கம்)

எங்கள் ஊரின் சிறப்பு  (மடிப்பாக்கம்)

 

முப்பது, நாற்பது ஆண்டுகளுக்கு முன் வரை வயல்கள் மற்றும் வாழைக் கொல்லைகளாக இருந்த பகுதி தற்போது மிகவும் பரபரப்பான பகுதியாக இருக்கும் மடிப்பாக்கம் என்றால் நம்புவதற்கு சற்று கஷ்டமாகத் தான் இருக்கும்.

 

மடிப்பாக்கம் ஒரு காலத்தில் சிறு கிராமமாக இருந்திருக்கிறது. மடிப்பாக்கம் மையப் பகுதியில் இருக்கும் பொன்னியம்மன் கோயில் கிராம தேவதை என அழைக்கப்படுவதைக் காணலாம்.  

 

இந்த பக்கம் நான்கு கிலோ மீட்டர் தூரத்தில் செயின்ட் தாமஸ் மவுண்ட் ஸ்டேஷன் மற்றும் செயிண்ட் தாமஸ் மெட்ரோ ஸ்டேஷன். அந்தப் பக்கம் நான்கு கிலோ மீட்டரில் வேளச்சேரி ரயில் நிலையம். இன்னொரு நான்கு கிலோமீட்டர் தூரத்தில் மீனம்பாக்கம் ரயில் நிலையம் மற்றும் மெட்ரோ ரயில் நிலையம். ஊரின் மையப் பகுதியில் பேருந்து நிலையம் இருக்கிறது. கோயம்பேடு, கிளாம்பாக்கம், தாம்பரம், சென்ட்ரல் ஸ்டேஷன் என எங்கு வேண்டுமானாலும் செல்வதற்குப் பேருந்து வசதி.

விரைவில் மெட்ரோ ஸ்டேஷன் வரவிருக்கிறது.

 

பொன்னியம்மன் கோயில், மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், ஐயப்பன் கோயில், குணாளம்மன் கோயில், வேம்புலி அம்மன் கோயில், இராமர் கோயில், கல்யாண காந்தசாமி கோயில்,பாதாள விக்னேஸ்வரர் கோயில், சிவா விஷ்ணு கோயில், ஓதீஸ்வரர் கோயில், ஸ்ரீ ஆயி மாதாஜி மந்திர் என எங்கு திரும்பினாலும் கோயில்கள்.

 

அரசு பள்ளிகள் தவிர பிரின்ஸ் மெட்ரிக், ஸ்ரீவாரி, கிங்ஸ் மெட்ரிக், நியூ பிரின்ஸ், ஹோலி பிரின்ஸ், சாய் மெட்ரிக் என தனியார் பள்ளிகள் நிறைய உள்ளன.

 

ஒரு காலத்தில் பழம்பெரும் நடிகர் பாலையா அவர்களின் தோட்டம் இருந்ததால் அப்பகுதி இன்னமும் பாலையா கார்டன் என்றழைக்கப்படுகிறது. அந்த ஏரியாவில் ஒரு பெரிய ஏரியும், ஐயப்பன் கோயில் அருகே ஒரு ஏரியும் உள்ளன. அவற்றைச் சுற்றி அழகிய நடைபாதைகள் அமைக்கப்பட்டுள்ளது. நடைப்பயிற்சி செய்பவர்கள் எப்போது வேண்டுமானாலும் செய்ய வசதியாக விளக்குகள் பொருத்தப்பட்டு இரவிலும் பகல் போல் ஒளிர்கிறது. இந்த ஏரியா வாசிகளுக்கு சிறந்த பொழுதுபோக்கு இடமாக இவை விளங்குகின்றன 

 

மருத்துவ மனைகள், குமரன் தியேட்டர்,பல்வேறு அரசு மற்றும் தனியார் வங்கிகள் மற்றும் பல வகையான சூப்பர் மார்க்கெட்டுகள் என ஒரு சிறு நகராகவே உள்ளது மடிப்பாக்கம்.

 

 

 

*****

V. புவனஸ்வரி 

மடிப்பாக்கம் சென்னை 600091