எங்கள் ஊர் அணைக்கட்டு வேலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும்.இதன் தொகுதி எண் 44. அணைக்கட்டு வட்டம் மற்றும் அணைக்கட்டு ஊராட்சி ஒன்றியம் ஆகியவைகளின் நிர்வாகத் தலைமையிடம் அணைக்க்ட்டில் உள்ளது. அணைக்கட்டு நகரம் முந்தைய வட ஆற்காடு மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது.இது வேலூர் மக்களவைத் தொகுதியுள் அடங்குகிறது. காட்பாடி, ஆம்பூர், வேலூர்,வாணியம்பாடி, திருப்பத்தூர், போளூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இதன் எல்லைகளாக அமைந்துள்ளன.விவசாயம் மட்டுமே இந்த தொகுதியில் பிரதான தொழிலாக அமைந்துள்ளது ஒடுகத்தூர் கொய்யா, மருத்துவ குணம் வாய்ந்த இலவம்பாடி கத்தரி மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இத்தொகுதியில் பள்ளிகொண்டா பேரூராட்சி, கருகம்பத்தூர் வேலூர் மாநகராட்சியில் உள்ள பலவன்சாத்து அரியூர், விருப்பாச்சிபுரம் பாகாயம் பகுதிகள் மற்றும் பென்னாத்தூர் ஒடுக்கத்தூர் (பேரூராட்சிகள்) இந்த தொகுதியில் அடங்கியுள்ளன.
அணையில் பெயரில் இருப்பதால் குழப்பம் ஏற்படுகிறது. ஆனால் கிராமத்தின் உள்ளேயும், வெளியேயும் அணைகள் இல்லை. இந்த இடம் வேளாண்மைக்கு பிரபலமானது. ஆரம்ப காலத்தில் அறுவடையான நெற்பயிரில் இருந்து நெல்ல்லை பிரித்தெடுக்க யானைகளைப் பயன்படுத்தினர்.தமிழில் ஆனையை கட்டி என்பது ஆங்கிலேயர் காலத்தில் அணைக்கட்டு என மருவியது.
வேலூர் மாவட்டத்தில் உள்ள வேலூர் மாநகராட்சி , 11 நகராட்சிகள் (திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, வாணியம்பாடி, ஆம்பூர், பேர்ணாம்பட்டு, குடியாத்தம், மேல்விஷாரம், ஆற்காடு, இராணிப்பேட்டை, வாலாஜாபேட்டை மற்றும் அரக்கோணம் ), 5 பேரூராட்சிகள் ( நாட்ராம்பள்ளி, உதயேந்திரம், ஆலங்காயம், ஒடுக்கத்தூர், பள்ளிகொண்டா) மற்றும் 14 ஊராட்சி ஒன்றியங்களில் (ஆலங்காயம், அணைக்கட்டு, ஆற்காடு, குடியாத்தம், ஜோலார் பேட்டை, கீ. வ. குப்பம், கந்திலி, கணியம்பாடி, காட்பாடி, மாதனூர், பேரணாம்பட்டு, திருப்பத்தூர், வேலுர், வாலாஜா ) உள்ள 944 வழியோர ஊரக குடியிருப்புகளுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கும் வகையில் காவிரி ஆற்றினை நீராதாரமாகக் கொண்டு வேலூர் கூட்டு குடிநீர் திட்டம் ரூ.1295.00 கோடி மதிப்பீட்டில் தயாரிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டுள்ளது.
அணைக்கட்டு வட்டம், அணைக்கட்டு, உசூர், பள்ளிகொண்டா மற்றும் ஒடுகத்தூர் என நான்கு பிர்கா எனும் குறு வட்டங்களையும், 61 வருவாய் கிராமங்களைக் கொண்டுள்ளது. இதன் வடக்கே காட்பாடி வட்டம், மேற்கே குடியாத்தம் வட்டம், கிழக்கே வேலூர் வட்டம் சூழ்ந்துள்ளது. இவ்வட்டத்தின் அருகமைந்த நகரங்கள் வேலூர், பள்ளிகொண்டா, ஆற்காடு ஆகும்.
இப்பகுதியில் இரண்டு மேல்நிலைப் பள்ளிகளும், சில நர்சரி தொடக்கப் பள்ளிகளும் உள்ளன.பள்ளிகொண்டா நகரில் ஸ்ரீ கிருஷ்ணாபொறியியல் கல்லூரி ஒன்று உள்ளது. இப்பகுதி தரௌபதி அம்மன் கோவில் திருவிழாவிற்கு புகழ் பெற்றது. மழை பெற கோவிலில் மகாபாரத கதை சொற்பொழிவு நடக்கும். இதை கேட்க சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள மக்கள் வருவார்கள். வாரச் சந்தை ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் ஊரின் பொதுவான இடத்தில் நடக்கும்.
அணைக்கட்டு தாலுகாவில் மொத்தம் உள்ள 51 ஊராட்சிகளில் 3 ஊராட்சிகள் மலை ஊராட்சிகள் ஆகும். அது பீஞ்சமந்தை, ஜார்தன்கொல்லை, பாலம்பட்டு ஆகியவை மலைப்பகுதியில் அமைந்துள்ளது. வேலூர் அருகே உள்ள ஊசூர் அருகில் தொடங்கும் இந்த ஊராட்சிகளின் எல்லை, வனப்பகுதியில் சுமார் 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒடுக்கத்தூர் அரசம்பட்டு வரை அமைந்துள்ளது.
இந்த மூன்று மழை ஊராட்சிகளில் சுமார் 36,000 பேர் வசித்து வருவதாக கணக்குகள் தெரிவிக்கிறது. இதில் பீஞ்சமந்தை ஊராட்சியில் மட்டும் சுமார் 68 குக்கிராமங்கள் உள்ளது. அணைக்கட்டு தொகுதியில் உள்ள ஊராட்சிகளில் மட்டுமின்றி வேலூர் மாவட்டத்திலேயே இந்த பீஞ்சமந்தை மலை ஊராட்சியே பெரிய ஊராட்சியாக உள்ளது. இந்த ஊராட்சியின் எல்லைப் பகுதி அருகே உள்ள அல்லேரியில் தொடங்கி மேல் அரசம்பட்டு கிராமம் வரை சுமார் 10 கிலோமீட்டர் தூரம் வரை உள்பரப்பளவை கொண்டுள்ளதாக ஆய்வறிக்கை கூறுகிறது.
பல ஆண்டு கோரிக்கையான பீஞ்சமந்தை சாலை பணிகள் நிறைவுற்று, பொதுமக்கள் பயன்பாட்டிற்காக அண்மையில் திறக்கப்பட்டது. நூறு ஆண்டுகால கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
வேலூர் மாவட்டம் ஒடுக்கத்தூர் அருகே பொதுமக்களுக்கு நிலங்களை வழங்கியவருக்கு ஐந்துக்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் கோயில் கட்டி வழிபாடு செய்வதுடன், அவரது பெயரில் அன்னதானமும் செய்து வருகின்றனர். ஒடுகத்தூர் அடுத்த குருவராஜபாளையத்தை சேர்ந்தவர் தர்மம் கொண்ட ராஜா. இவர் கி.பி.18ம் நூற்றாண்டில் இங்கு சிறந்த ஆன்மிகவாதியாக வாழ்ந்தவர். இவர் தனது பகுதியில் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளிலும் பல அதிசயங்களை நிகழ்த்தியவர். பல ஊர்களிலும் தனக்கு சொந்தமான நிலங்களை அரசுக்கும், மக்களுக்கும் தானமாக வழங்கியவர். அத்தகைய ஒருவரை கடவுளாக கருதி வழிபடுகின்றனர் 5 கிராமங்களை சேர்ந்த மக்கள்அணைக்கட்டு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஒடுகத்தூர் அடுத்த குருவராஜா பாளையம் கிராமத்தை ஒட்டிய வனப்பகுதி ஓரத்தில் பழமைவாய்ந்த புகழ்பெற்ற இந்த தர்மகொண்ட ராஜா கோவில் உள்ளது. இந்த கோவிலில் அனைத்து சனிக்கிழமைகளில் சிறப்பான பூஜைகள் நடைப்பெற்று வருகின்றன.
தர்மம் கொண்ட ராஜா இப்பகுதியில் சிறந்த ஆன்மிகவாதியாக விளங்கியவர். இவர் குளம் வெட்டும் பகுதிகளில் கிடைக்கும் தண்ணீர் உப்புத்தன்மையில்லாமல் நல்ல தண்ணீராகவே கிடைப்பது குறித்து அன்று ஆட்சி செய்து வந்த ஆங்கிலேயர்களுக்கும் தெரிய வந்தது. இதையடுத்து, அவரை அழைத்து ஆங்கிலேயர்கள் சென்னை தங்க சாலை பகுதியில் கிணறுகள் அமைக்க இடங்களை தேர்வு செய்ய கேட்டனர். அதற்கு ராஜா, மின்ட் பகுதிகளில் ஏழு கிணறுகள் அமைப்பதற்கான இடத்தை தேர்வு செய்து கொடுத்தார். அந்த கிணறுகளில் தற்போதும் நீரூற்று உள்ளதாகவும், அது நல்ல குடிநீராகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆங்கிலேயர் காலத்தில் தர்மம் கொண்ட ராஜா அமைத்த கோயிலுக்கு செல்ல மலைப்பாதையில் 30 அடி சாலை அமைக்கப்பட்டுள்ளது. இக்கோயிலுக்கு வந்து வணங்கும் பக்தர்களின் வேண்டுதல் நிறைவேறுகிறது. இந்த கோயிலில் பெருமாளுக்கு உருவச்சிலை இல்லாமல் ஒரு கல் மட்டுமே வைக்கப்பட்டுள்ளது. அதேபோல் தர்மம் கொண்ட ராஜாவின் உருவப்படமும் கருவறையில் வைக்கப்பட்டுள்ளது. பெருமாள் பக்தர்கள் அனைவருக்கும் ஒவ்வொரு சனிக்கிழமையும், இவரால் பயனடைந்த ஆறு கிராமங்களை சேர்ந்த மக்களும் இங்கு வந்து சிறப்பு பூஜைகள் நடத்தி அன்னதானம் வழங்குகின்றனர்.
அணைக்கட்டு அருகே ஊசூர் அடுத்து அமைந்துள்ளது புலிமேடு கிராமம். இக்கிராமத்தை ஒட்டிய வனப்பகுதியில் உள்ள காட்டாற்றில் பருவமழை காலத்தில் வெள்ளம் ஏற்படும். அச்சமயத்தில் மலைப்பகுதியில் பாறைகளுக்கு இடையே இருந்து வரும் தண்ணீர் சிறு நீர் வீழ்ச்சி போல் ஆர்ப்பரித்து கொட்டும்.
. வேலூரில் இருந்து சுமார் 16 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இயற்கை எழில் சூழ்ந்த வனப்பகுதிக்கு மத்தியில் ரம்மியமாய் கொட்டும் காட்டாற்று நீர் வீழ்ச்சியை கண்டு உற்சாக குளியல் போட வேலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மற்றும் அண்டைய மாவட்டத்தில் இருந்தும் பொதுமக்கள் குடும்பத்துடன் குவிந்து வருகின்றனர்.
வெயிலுக்கு பெயர் பெற்ற, இயற்கை சுற்றுலா தலங்கள் குறைந்த வேலூர் மாவட்டத்தில் பொழுதுபோக்கிற்காக இயற்கைச் சுற்றுலா தளத்தை தேடி அலையும் மக்களுக்கு பெரும் வரமாக புலிமேடு காட்டாற்று அருவி அமைந்துள்ளது.