எங்கள் ஊர் சுரண்டை தென்காசி மாவட்டம், வீரகேரளம்புதூர் வட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும். இங்கு 2008-ஆம் ஆண்டு சுரண்டை அரசுக் கலைக் கல்லூரியானது, தமிழக அரசால் துவங்கப்பட்டுள்ளது.
சுரண்டை திருநெல்வேலி - தென்காசி நெடுஞ்சாலையில் பாவூர்சத்திரத்திலிருந்து 9 கிமீ தொலைவிலும், அத்தியூத்து விளக்கில் இருந்து 13 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது. திருமங்கலம் - கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் குத்துக்கல்வலசைக்கு அருகில் உள்ள இ. நா. விலக்கில் இருந்து 15 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது.
திருநெல்வேலி - 48 கிமீ சங்கரன்கோவில் - 30 கிமீ புளியங்குடி - 30 கிமீ பாவூர்சத்திரம் - 9 கிமீ கடையநல்லூர் - 15 கிமீ ஆலங்குளம் - 17கிமீ தென்காசி - 15 கிமீ.
திருநெல்வேலி மற்றும் தென்காசி நகருக்கு அடிக்கடி பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சுரண்டையில் மகாத்மாகாந்தி பேருந்து நிலையத்திலிருந்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இப்பேருந்து நிலையம் 2019 ஆம் வருடம் புதுப்பிக்கப்பட்டது. சங்கரன்கோவில், புளியங்குடி, கடையநல்லூர், ஆலங்குளம், செங்கோட்டை, பாபநாசம், ஆய்க்குடி, அம்பாசமுத்திரம், பாவூர்சத்திரம், கடையம் பகுதிகளில் இருந்து பேருந்து வசதி உள்ளது. சுரண்டையில் இருந்து இராஜபாளையம், மதுரைக்கு சில குறிப்பிட்ட நேரங்களில் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சுரண்டையில் இருந்து அண்மை கிராமங்களான ஊத்துமலை, கீழக்கலங்கல், ரெட்டியார்பட்டி, வீ. கே. புதூர் பகுதிகளுக்கும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தென்காசியில் இருந்து சுரண்டை வழியாக சென்னைக்கு பேருந்து இயக்கப்படுகிறது. ஆலங்குளத்தில் இருந்து சுரண்டை வழியாக திருப்பூருக்கு பேருந்து இயக்கப்படுகிறது. செங்கோட்டையில் இருந்து சுரண்டை வழியாக சென்னை, ஊட்டி,திருப்பதி, பெங்களூர் ஆகிய பகுதிகளுக்கு பேரூந்துகள் இயக்கப்படுகின்றன. இவைதவிர தனியார் ஆம்னி பேருந்துகள் சென்னை, கோவை, பெங்களூர், திருச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும் இயக்கப்படுகிறது.
மதுரை நாயக்கர் ஆட்சிக் காலத்தில் சுரண்டை பாளையம் உருவாக்கப்பட்டது. ஆங்கிலேயர் ஆட்சியின்போது இது சமீனாக மாற்றபட்டது. சுரண்டை நகரானது கீழ் சுரண்டை, பங்களா சுரண்டை, மேலச் சுரண்டை ஆகிய சிற்றூர்களின் ஒருங்கிணைப்பில் உருவானது ஆகும். கிராமமாக இருந்த இந்த ஊர் 1980களில் பேரூராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. இந்திலையில் தென்காசி மாவட்டம் உருவாக்கப்பட்ட பிறகு 2021 ஆகத்து 24 அன்று சுரண்டை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. நகராட்சியானது 27 வார்டுகளைக் கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது
கடல் மட்டத்தில் இருந்து எங்கள் சுரண்டை சராசரியாக 132 மீட்டர் (433 அடி) உயரத்தில் இருக்கின்றது.
எங்கள் சுரண்டை நகராட்சி தென்காசி (சட்டமன்றத் தொகுதி)யையும், தென்காசி மக்களவைத் தொகுதியையும் கொண்டது.
தென்காசி மாவட்டம் சுரண்டை நகராட்சி மாவட்டத்தின் வளர்ந்து வரும் முக்கிய வர்த்தக நகரமாகும் சுரண்டை நகராட்சி பகுதியில் மட்டும் சுமார் 1000 வர்த்தக நிலையங்கள் உள்ளன.
சுரண்டையை சுற்றியுள்ள சுமார் 50க்கும் மேற்பட்ட வியாபாரிகள் சுரண்டையை மையமாக கொண்டே வியாபாரம் செய்து வருகின்றனர்.
சுரண்டை மற்றும் பகுதி வியாபாரிகள் நலன் கருதி சுரண்டையில் தொழிலாளர் நல ஆய்வாளர் அலுவலகம் மற்றும் எடை அளவைகள் முத்திரை ஆய்வாளர் அலுவலகம் அமைக்க வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை அடிப்படையில்
கடந்த தமிழக முதல்வர் கலைஞர் ஆட்சியின் போது எடை அளவைகள் முத்திரை முகாம் அமைக்கப்பட்டு 32 வருடங்களாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதன் மூலம் சுரண்டை சுற்று வட்டார பகுதியை சேர்ந்த சுமார் 1400 வியாபாரிகள் தங்கள் எடை அளவைகளை எவ்வித சிரமமும் இன்றி முத்திரை பதித்து பயனடைந்து வருகின்றனர்.
எங்கள் சுரண்டையில் 19 நூற்றாண்டு சேர்ந்த வடிவம்மன் கோயில் உள்ளது.
இக்கோயிலில் ஒருகாலப் பூசை நடக்கின்றது. வைகாசி மாதம் கொடை விழா முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது.
மேலும் எங்கள் சுரண்டையில் ஸ்ரீனிவாச பெருமாள் திருக்கோயில் உள்ளது.
இக்கோயிலில் ஸ்ரீநிவாச பெருமாள், ஸ்ரீதேவி-பூதேவி சன்னதிகளும், நம்மாழ்வார், விஷ்வத்சேனர், கருடாழ்வார், ஆஞ்சநேயர் உபசன்னதிகளும் உள்ளன. இக்கோயில் தொகுப்புக் கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.இக்கோயிலில் வைகானசம் ஆகம முறைப்படி ஒருகாலப் பூசை நடக்கின்றது.
பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றான சுரண்ைட அழகு பார்வதி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம்.
கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கும்.
முதல் நாள் அரண்மனை தெரு தேவர் சமுதாய மண்டகப்படி, 2-ம் நாள் மேலத்தெரு தேவர் சமுதாய மண்டகப்படி, 3-ம் நாள் செட்டியார், பிள்ளைமார் சமுதாய மண்டகப்படி, 4-ம் நாள் அம்மன் கொண்டாடி நாடார் மண்டகப்படி, 5-ம் நாள் சேனைத்தலைவர் மண்டகப்படி, 6-ம்நாள் வன்னியர் சமுதாய மண்டகப்படி, 7-ம் நாள் கோட்டைத்தெரு தேவர் மண்டகப்படி, 8-ம் நாள் அனைத்து சமுதாயத்திற்குமான பொது மண்டகப்படி நடக்கும்.
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சமுதாயம் சார்பில், அம்மன் வீதி உலா வரும் நிகழ்ச்சி மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடைபெறும்.
9-ம் நாள் விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நடக்கும்.. அலங்கரிக்கப்பட்ட தேரில் அழகு பார்வதி அம்மன் எழுந்தருளுவார். தொடர்ந்து திரளான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுப்பார்கள். கோவில் வளாகத்தில் இருந்து புறப்பட்ட தேரானது கோட்டை தெரு, தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி, சுரண்டை நகராட்சி அலுவலகம் வழியாக மீண்டும் கோவில் நிலையை வந்தடையும்.
10-ம் நாளான சப்தாவரண நிகழ்ச்சி, ஆச்சாரியார் (கம்மாளர்)சமுதாயம் சார்பில் நடக்கும். .
-ஆறுமுகக் கனி
சத்திரப்பட்டி