tamilnadu epaper

எங்கள் ஊர் ஜீயபுரம்

எங்கள் ஊர் ஜீயபுரம்

[10:08, 02/11/2024] Tamilnadu Epaper: ஜீயபுரம் திருச்சி--கரூர். ஹைவே மற்றும் ரயில் பாதையில் அமைந்துள்ளது எங்கள் ஊர் ஜீயபுரம் என்பதுஅம்மன்குடி,திருச்செந்துறை முதலிய இடங்களை
உள்ளடக்கியது.இந்த ஊர்களை உள்ளடக்கியது ஜீயபுரம் .அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றியத்தின் கீழ் வருவது எங்கள் ஊர். திருச்சி சத்திரம் பஸ் ஸ்டாண்டிலிருந்து சுமார் 12 கி.மீ தூரத்தில் உள்ளது இவ்வூர்.நெடுஞ்சாலையை ஒட்டி, அகண்ட காவேரி ஆறு ஓடுகிறது.இரு கரைகளையும் தொட்டபடி ஆறு சலசலத்து ஓடியது ஒரு காலம்.
   நாங்கள் காவேரியில் குதித்து , நீச்சலடித்து, கும்மாளமிட்டது தற்பொழுது கனாக்காலம்.கோடை காலத்தில் , காவேரியில் தண்ணீர் இல்லாத காலத்தில்,ஆற்றின் மறுகரையிலுள்ள ஊர்களுக்கு, ஆற்று மணலில் நடந்தே போய் விடலாம்.
     ஜீயபுரத்தின் ஒரு பகுதியான அம்மன்குடி எங்கள் ஊர். எங்கள் பகுதியில் விவசாயம் முக்கியத் தொழிலாகும்.நெல்,கரும்பு, வாழை  குறிப்பாக நேந்திரம் வாழை ஏராளமாகப் பயிரிடப்படுகிறது.எங்கள் ஏரியாவில் இருந்து  நேந்திரம் வாழைத் தார்கள் கேரளாவிற்கு ஏற்றுமதி ஆகிறது. அங்கிருந்து நேந்திரம் பழங்களாகவும். சிப்ஸாகவும்  மீண்டும் தமிழ் நாட்டில் விற்பனை செய்யப்படுகிறது.
எங்கள் வீட்டிற்கு வலது புறமுள்ள
  (படத்தில் மாடிப்படியுடன் உள்ள) வீடு முக்கியத்துவம் வாய்ந்தது.தமிழ் நாட்டைச் சேர்ந்தவரும்,ஹிந்திப்பட உலகில் பிரபலமானவரும்,உ. பி.மாநிலம், மதுராவின் எம்.பி ஆன ஹேமமாலினி பிறந்த வீடு அது.
    ஸ்ரீரங்கம் ரங்கநாதர் எங்கள் ஊருக்கு எழுந்தருளி ஒரு நாள் தங்குவார்.
அந்தக் காரணத்தைப் பார்ப்போம் இப்பொழுது.
    ஸ்ரீரங்கம் ரங்கநாதர் பேரில் தீவிர பக்தி கொண்ட ஒரு பாட்டி  தன் பேரனுக்கும் ரங்கன் என்று பெயரிட்டு, ரங்கா,ரங்கா என்று அழைத்து வந்தார்.ஒரு நாள் காவேரியில் நீராடச் சென்ற பேரன் ரங்கனை வெள்ளம் இழுத்துச் சென்றது.
  பேரனைக் காணத பாட்டி ரங்கா !ரங்கா !! என்று புலம்பி அழுதாள்.பாட்டியின் துயர் துடைக்க, ஸ்ரீரங்கம் ரங்கநாதரே, அந்தப் பாட்டியின் பேரனாக வந்து, பாட்டி அளித்த பழைய சாதம், மாவடு ஊறுகாயை உண்டார். அதற்குள் ,உயிர் பிழைத்த ரங்கன் வர, ரங்கநாதர் பாட்டிக்கு காட்சி அளித்து மறைந்தார்.
   அதைக் குறிக்கும் வகையில், பங்குனி மாதம் பிரும்மோத்ஸவத்தில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஜீயபுரம் வந்து ஒரு நாள் தங்கி பழைய அமுது, மாவடு நைவேத்யம் ஏற்கிறார்.அதனால் ரங்கநாதர் எங்க ஊர் சாமி என்றால் மிகையல்ல.
  எங்கள் ஊருக்கு அருகில் தான் பிரபலமான சுற்றுலாத் தலமான முக்கொம்பு உள்ளது.
   இப்படி பல சிறப்புகளைக் கொண்டது எங்கள் ஊர் என்று பெருமையாகச் சொல்கிறேன்.

 

-V.VENKATARAMAN ,
HOUSE # 1, SURVEY # 1/4 ,
NEAR MANASAROVAR  HEIGHTS -- PH I ,
MANO VIKAS NAGAR ,
HASMATHPET ,
SECUNDERABAD --500 009
(Telangana State )