திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தாலுக்காவில் உள்ள ஒரு சிறிய
கிராமம் திருக்கண்டீஸ்வரம். இவ்வூர் நன்னிலம் சட்டமன்ற
தொகுதிக்கும், நாகை நாடாளுமன்ற தொகுதிக்கும் உட்பட்டது.
2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி மொத்த
மக்கள் தொகை 1632. இங்கிருந்து கிழக்கே சுமார் ஒரு கி மீ
தொலைவில் உள்ள ஊர் சன்னாநல்லூர். மேற்கே சுமார் இரண்டு
கி.மீ. தொலைவில் உள்ள ஊர் நன்னிலம். ஒரு காலத்தில் இங்கு
வில்வ மரங்கள் நிறைந்து காணப்பட்டதால் இத்தலத்திற்கு
வில்வாரண்யம் என்ற பெயரும் உண்டு.
இந்த ஊரில் உள்ளது தேவாரப் பாடல் பெற்ற பசுபதீஸ்வரர் கோயில்.
காவிரி தென்கரையில் அமைந்துள்ள 72 வது சிவத்தலமாகும்.
நன்னிலம் நாகப்பட்டினம் சாலையில் முடிகொண்டான் ஆற்றுக்கு
தென்கரையில் அமைந்துள்ளது இந்த கோயில். இங்கு சிவன் சுயம்பு
மூர்த்தியாக உள்ளார். ராஜ கோபுரம் இங்கு கிடையாது.
இத்தலம் பற்றி தேவாரத்தில் நாவுக்கரசர் இவ்வாறு பாடியுள்ளார்.
"பாலனாய்க் கழிந்த நாளும் பனிமலர்க் கோதை மார்தம்
மேலனாய்க் கழிந்த நாளு மெலிவொடு மூப்பு வந்து
கோலனாய்க் கழிந்தநாளுங் குறிக்கோளி லாதுகெட்டேன்
சேலுலாம் பழனவேலித் திருக்கொண்டீச் சரத்துளானே"
சேல்கள் உலாவும் வயல்கள் சூழ்ந்த திருக்கொண்டீஸ்வர பெருமானே
சிறுவனாய் இருந்து கழிந்த பாலப் பருவத்தும், குளிர்ந்த மலர் மாலைகளை
அணிந்த மகளிருடைய தொடர்புடையவயனாய் கழிந்த வாலிபப்
பருவத்தும், மெலிவோடு கிழப்பருவம் வரக் கோலை ஊன்றிக் கழிந்த
முதுமைப் பருவத்தும் குறிக்கோள் ஏதுமின்றி வாழ்ந்து கெட்டு போயினேன்.
-அந்த பாடலின் பொருள் இதுதான்.
கைலாயத்தில் சிவபெருமான் பார்வதி தேவிக்கு வேத ரகசியங்களை உபதேசம் செய்து கொண்டு
இருந்த போது அவர் அதை கவனிக்காமல் வேறு சிந்தனையில் இருந்தார். இதனால்
கோபம் கொண்ட ஈசன் அவரை பசுவாக மாறும்படி சாபம் கொடுத்து விட்டார்.
மேலும் பூலோகத்தில் சிவன் தவமிருக்கும் இடத்தை கண்டுபிடித்து அங்கு சென்று
வழிபட்டால் சாபம் நீங்கும் என்று சொல்லி மறைந்து விட்டார். தன் கொம்பால்
பூமியை கீறிக் கொண்டே சென்ற பார்வதி வில்வாரண்யத்தில் தவமிருந்த சிவனின்
தலையையும் கீறிவிட்டார். உடனே தன் பாலை சொரிந்து புண்ணை ஆற்றினர் என்பது
இத்தல வரலாறு. மூலத் திருமேனியில் பசுவின் கொம்பு பட்டு ஏற்பட்ட வடு இன்றும்
காணப்படுகிறது. தல புராணத்தை விளக்கும் அழகிய ஓவியங்கள் பிரதான
மண்டபத்தில் காணப்படுகின்றன. குரு பகவான் சிவபெருமானை வணங்கி அருள்
பெற்ற நான்கு தலங்களில் இது இரண்டாவது ஆகும்.
சுவாமி சந்நிதிக்கும் அம்பாள் சந்நிதிக்கும் இடையில் வெள்ளைக் கல்லால் செய்யப்பட
பழமையான ஜேஸ்டா தேவி அருள்பாலிக்கிறாள். இவள் மகாலட்சுமியின் சகோதரி.
இங்கு அனுக்கிரக தேவதையாக இருக்கிறாள். இந்த தேவியை வணங்கினால்
திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம் கிடைக்கும். பில்லி, சூனியம், ஏவல்
இவற்றில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
அகத்தியர் ஒரு முறை இத்தலத்திற்கு வந்த போது கடும் காய்ச்சலால் அவதிப்பட்டார்.
சிவபெருமான் ஜுரகேஸ்வர் வடிவில் வந்து அவரை குணப்படுத்தினார். காய்ச்சலால்
பாதிக்கப்படுபவர்கள் இவருக்கு வெந்நீரில் அபிஷேகம் செய்து, அன்னத்துடன் மிளகு ரசம்
வைத்து வழிபட்டால் குணமாகும் என்பது ஐதீகம்.
திருமணத் தடை விலக குழந்தை பாக்கியம் கிடைக்க நினைத்த காரியம் கைகூட ஒரு முறை
பசுபதீஸ்வரர் கோயிலுக்கு சென்று வழிபட்டால் போதும். குடும்பத்தில் சண்டை
கணவன் மனைவி இடையே மனக்கசப்பு ஏற்பட்டு விவாகரத்து வரையில் சென்றாலும்
இங்கு வந்து வழிபட்டால் குடும்பத்தில் ஒற்றுமை ஏற்படும்.
இந்த ஊருக்கு அருகில் சுமார் இரண்டு கி மீ தொலைவில் சன்னாநல்லூர் என்ற
ஊரில் ரயில் நிலையம் உள்ளது. ரயில் நிலையம் பெயர் 'நன்னிலம்'. சென்னை,
திருப்பதி, விழுப்புரம் செல்லும் விரைவு ரயில்கள் இங்கு நின்று செல்லும்.
இந்த ஊரில் அரசு ஆரம்ப தொடக்கப்பள்ளி உள்ளது. சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக
இது இயங்கி வருகிறது. இப்பள்ளிக்கு தேவையான வசதிகளை ஊராட்சி மன்றத்
தலைவர் திரு. ஆனந்தன் அவர்கள் செய்து கொடுத்திருப்பதாக ஊராட்சி செயலர்
திரு.சசிகுமார் அவர்கள் தெரிவித்தார்கள். பள்ளிக்கு பின்புறத்தில் மாதா கோயில்
ஒன்று உள்ளது.
புகழ்பெற்ற பின்னணிப் பாடகரும், இசைஞானி அவர்களிடம் சுமார் 40 ஆண்டுகளாக
புல்லாங்குழல் வாசிக்கும் கலைஞராகவும் இருக்கும் அருண்மொழி என்கிற
திரு.நெப்போலியன் பிறந்த ஊர் இது. நடிகர்கள் பார்த்திபன், ராமராஜன் இவர்களுக்கு பிரபலமான
பல பாடல்களை பாடியுள்ளார். 'ஒத்த ரூபா தரேன்..' பாடல் மிகப் பிரபலமானது.
அவரையும் சேர்த்து அண்ணன் தம்பி ஆறு பேர். அவரின் சகோதரர் திரு.எட்வர்ட்
அவர்கள் இல்லத்திற்கு திரு.சசிகுமார் அவர்கள் என்னை அழைத்து சென்றார்.
திரு.அருண்மொழி இருக்கும் புகைப்படம் ஒன்றை அவர் என்னிடம் காட்டினார்.
திரு.அருண்மொழியின் இன்னொரு சகோதரர் திரு.ராபர்ட் அவர்கள் நான்
மயிலாடுதுறை ஏ.வி.சி. கல்லூரியில் படிக்கும் போது ரயிலில் அறிமுகம் ஆனவர் .
எனக்கு ஒரு வருடம் சீனியர் அவர். அவரும் திரைத்துறையில் இருப்பதாக திரு.எட்வர்ட்
அவர்கள் சொன்னார்கள்.
இந்த ஊருக்கு மிக அருகில் உள்ள ஊர் மணவாளம்பேட்டை . 1970 களில் டூரிங்
திரையரங்குகள் நிறைந்து இருந்த காலத்தில் இந்த ஊரில் ஆற்றுக் கரையோரத்தில்
லட்சுமி என்ற பெயரில் ஒரு டூரிங் திரையரங்கம் இருந்தது. அதன் சிறப்பு
என்னவென்றால் மற்ற டூரிங் போல ஐந்து ரீல்களுக்கு ஒரு முறை இடைவேளை
விட மாட்டார்கள். படம் தொடங்கி படத்தில் வரும் இடைவேளை வரை பிறகு ஆரம்பித்து
படம் முடியும் வரை என்று ஒரே புரொஜெக்டர் மூலம் சிறப்பாக நடத்தி வந்தார்கள்.
இடைவேளை வரைக்கும் உள்ள ரீல்களை -சுமார் பத்து ரீல் வரை- சுற்றி மாட்டும்
அளவுக்கு வடிவமைத்து அதை வெற்றிகரமாக செயல்படுத்தி நிறைய ஊர்களில்
அந்த மாடல் புரொஜெக்டரை அறிமுகப்படுத்தினார்கள். இதை வடிவமைத்தவர்கள்
அப்போது திருச்சியில் இருந்த வாணி பிலிம்ஸ் விநியோகிஸ்தர்கள். அது நல்ல வரவேற்பை பெற்றது.
நன்னிலம், தாலுகா தலைமையிடம். பல அரசு அரசு அலுவலகங்கள் இங்கு உள்ளன.
அரசுப் போக்குவரத்துக் கழக கிளை உள்ளது. இங்கிருந்து நீண்ட தூரமுள்ள பல ஊர்களுக்கு
பேருந்துகள் செல்கின்றன.
===
திருமாளம் எஸ். பழனிவேல்