எங்கள் ஊர் திருவேங்கடம் என்பது தென்காசி மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். சங்கரன்கோவில் வட்டத்தை பிரித்து முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களால் திருவேங்கடம் வட்டம் உருவாக்கப்பட்டது. நெல்லை மாவட்டத்தில் இருந்த எங்கள் ஊர் தென்காசி மாவட்டம் உருவானபோது அதில் சேர்க்கப்பட்டது.வேங்கடம் என்றால் மலை என்று பொருள். திருமலையான திருப்பதியை நினைவு கூறும் பொருளில் எங்கள் ஊருக்கு திருவேங்கடம் என்று பெயர் ஏற்பட்டுள்ளது. மேலும் எங்கள் ஊரில் வெங்கடாசலபதி திருக்கோயிலும் உள்ளது. விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த ராஜபாளையத்திற்கும் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த கோவில்பட்டிக்கும் இடையில் அமைந்துள்ளது எங்கள் திருவேங்கடம்.
இப்பேரூராட்சி திருநெல்வேலியிலிருந்து 80 கிமீ தொலைவிலும்; கோவில்பட்டியிலிருந்து 25 கிமீ தொலைவிலும்; சங்கரன்கோவிலிருந்து 18 கிமீ தொலைவிலும்; சிவகாசியிலிருந்து 28 கிமீ தொலைவிலும் உள்ளது. சங்கரன்கோவில் இதன் அருகமைந்த தொடருந்து நிலையம் ஆகும்.
15.60 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 30 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி சங்கரன்கோவில் (சட்டமன்றத் தொகுதி)க்கும், தென்காசி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 2368 வீடுகளும், 8337 மக்கள்தொகையும் கொண்டது. முழுக்க முழுக்க வேளாண்மை தொழிலையே கொண்டுள்ளது எங்கள் ஊர். சிவகாசிக்கும் அருகில் இருப்பதால் எங்கள் ஊரில் பட்டாசு தொழிலும் நடைபெற்று வருகிறது.
திருவேங்கடம் ஊரில் நிட்சேப நதி (வைப்பாறு )பாய்கிறது. இவ்வாற்றின் குறுக்கே தடுப்பணை ஒன்று கட்டப்பட்டு அந்த நீர் கீழத்திருவேங்கடத்தின் கூத்தாடி குளத்துக்கு கால்வாய் மூலம் கொண்டு செல்லப்படுகிறது. எங்கள் திருவேங்கடம் சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதி ஆகும்
இத்தொகுதி தென்காசி பாராளுமன்ற தொகுதியின் கீழ் வரும் தொகுதியாகும். சங்கரன்கோவில் மற்றும் திருவேங்கடம் தாலுகாக்கள், சங்கரன்கோவில் நகராட்சி, சங்கரன்கோவில், மேலநீலிதநல்லூர், குருவிகுளம் ஆகிய 3 யூனியன்கள் உள்ளிட்டவற்றை கொண்டது சங்கரன்கோவில் தொகுதி.
யோக ஆஞ்சநேயர் திருக்கோவில்(சங்குபட்டி விலக்கு,நரிபாறை),
அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் ( மதாங்கோவில்),
மீனாட்சி அம்மன் உடனுறை சொக்கநாதர் கோவில் (சிவன் கோவில்),
திருவேங்கடநாதர் கோவில்,
படிக்காசு விநாயகர் கோவில்,
காளியம்மன் கோவில்,
முப்பிடாரி அம்மன் கோவில்,
வனப்பேச்சியம்மன் கோவில்,
அய்யனார் கோவில். போன்ற கோவில்கள் திருவேங்கடம் பேரூராட்சியில் இருக்கின்றன.
திருவேங்கடம் வட்டம், தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தின் பகுதிகளைக் கொண்டு புதிதாக நிறுவப்பட்ட தென்காசி மாவட்டத்தின் 8 வருவாய் வட்டங்களில் ஒன்றாகும்.இவ்வட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமும் மற்றும் வட்டாட்சியர் அலுவலகமும் திருவேங்கடத்தில் உள்ளது.
இவ்வட்டத்தில் கரிசல்குளம் , திருவேங்கடம் மற்றும் பழங்கோட்டை என 3 உள்வட்டங்களும், 41 வருவாய் கிராமங்களும் உள்ளது.
இவ்வட்டத்தில் குருவிகுளம் ஊராட்சி ஒன்றியம் அமைந்துள்ளது.
எங்கள் திருவேங்கடத்தில் வெங்கடாசலபதி திருக்கோவில் உள்ளது. இது 19 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கோவிலில் ஆகும்.இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. மரபு சாராத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.
இக்கோயிலில் ஒருகாலப் பூசை நடக்கின்றது. மார்கழி மாதம் வைகுண்ட ஏகாதசி முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. சித்திரை மாதம் ராமநவமி திருவிழாவாக நடைபெறுகிறது.
திருவேங்கடம் தாலுகா அழகனேரி கிராமத்தில் காளியம்மன் கோவில் கொடை விழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறும். அதிகாலையில் அம்மனுக்கு அபிஷேகங்கள் அலங்காரங்கள் நடைபெறும்.. இதில் கிராம மக்கள் மற்றும் அழகனேரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள கிராம மக்கள் கோவிலுக்கு வந்து வழிபடுவர்.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் பிறந்த ஊர் திருவேங்கடத்திற்கு மிக அருகில் உள்ள கிராமமாகும்.கலிங்கப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிறந்த தரச் சான்று தகுதி வழங்கப்பட்டுள்ளது.
அர்ப்பணிப்புடன் செயல்படும் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களைத் தேர்வு செய்து, மத்திய அரசின் நல்வாழ்வுத்துறை, தேசிய தரச் சான்றிதழ் (National Quality Assurance Standard) வழங்குகின்றது.தூய்மையான மருத்துவ வளாகம், மக்கள் பயன்பாடு, மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களின் அர்ப்பணிப்புடன் கூடிய சேவை உள்ளிட்ட காரணிகள், வரையறுக்கப்பட்ட தேசியத் தரத்திற்கு இணையாக இருக்கின்ற வகையில்தகுதி பெற்ற மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு, இந்தத் தரச் சான்று வழங்கப்படுகின்றது. நாடு முழுவதும் இதற்காக நேரடியாகக் கள ஆய்வு செய்கின்றார்கள்.அவ்வாறு, கடந்த 2019 - 2020 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில்,கலிங்கப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையம், தேசிய தகுதிச் சான்றிதழ் பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் இச்சான்றிதழ் பெற்ற, ஒரே அரசு மருத்துவமனை கலிங்கப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையம் ஆகும்.
தென்காசி மாவட்டத்தில் நதிநீர் பாசன வசதி இல்லாத ஒரே தொகுதியான சங்கரன்கோவில் தொகுதியை பொறுத்தவரை 75 சதவீதம் விவசாயமும், 15 சதவீதம் விசைத்தறியும் பிரதான தொழில்கள் ஆகும். நகர் பகுதியில் துண்டு, புடவை தயார் செய்யும் விசைத்தறி கூடங்கள் அதிக அளவில் உள்ளன.
விவசாயத்தை பொறுத்தவரை தொகுதியில் பூக்கள், எலுமிச்சை, சோளம், கடலை உள்ளிட்ட மானாவாரி பயிர்கள் அதிகளவு பயிரிடப்படுகிறது.
கரிசல் பூமியான திருவேங்கடம், கோவில்பட்டி மாநகருக்கு சற்று தொலைவில் தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ராஜபாளையத்திலிருந்து கோவில்பட்டி தூத்துக்குடி செல்லும் பேருந்துகள் கலிங்கப்பட்டி திருவேங்கடம் வழியாகத்தான் செல்கின்றன.
சங்கரன்கோவிலில் இருந்து திருவேங்கடம் வரை செல்லும் மாவட்ட முகமை சாலையில், சங்கரன்கோவில் தற்காலிக பஸ் நிலையம் முதல் உமையத்தலைவன்பட்டி வரை போக்குவரத்து நெரிசலை தவிர்த்திடும் வகையில் இருவழிதடமாக முதல்-அமைச்சர் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் அகலப்படுத்தப்பட்டது.
குருவிகுளம் ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் தென்காசி மாவட்டத்தில் உள்ள 10 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். திருவேங்கடம் வட்டத்தில் உள்ள குருவிகுளம் ஊராட்சி ஒன்றியத்தில் 39 ஊராட்சி மன்றங்கள் உள்ளது. இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் குருவிகுளத்தில் அமைந்துள்ளது.
-உதயசங்கர் சுப்பிரமணியபுரம்