tamilnadu epaper

எங்கள் ஊர் 'விளநகர்'சிறப்பு

எங்கள் ஊர் 'விளநகர்'சிறப்பு

 மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா செம்பனார்க்கோவில் ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த ஆறுபாதி ஊராட்சியில் உள்ள ஊர் விளநகர்.இது பூம்புகார் சட்டமன்ற தொகுதிக்கும்..
மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதிக்கும் உட்பட்டதாகும்.
    மயிலாடுதுறை 'தரங்கம்பாடி சாலையில் அமைந்த இவ்வூர் இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையானதாகும்.
      இவ்வூர் சிவாலயத்து இறைவனுக்கு 'உசிரவனேஸ்வரர்'
என்று பெயர் . உசிரம் என்றால் விழல் என்று பொருள்.இந்த சிவாலயத்துக்கு விழல்(தர்ப்பை புல்)தலவிருட்சமாக இருக்கிறது.எனவே விழல்நகர் என அழைக்கப்பட்டு இப்போது மறுவி விளநகர் என ஆகியிருப்பதாக கூறுவர்.
    இங்கு பிரதான தொழிலாக விவசாயமே இருக்கிறது..ஆனாலும் இப்பகுதிக்கு பெயர் பெற்றுத்தந்த தொழில் என்றால் கீற்று முடைதலைச் சொல்லலாம்.
பொள்ளாச்சி உடுமலைப்பேட்டை தாராபுரம் பகுதிகளிலிருந்து தென்னம்மட்டைகளை மொத்தமாக வாங்கிவந்து இங்கு பக்குவப்படுத்தி கீற்றுகளாக முடையும் தொழிலில் ஏராளமான குடும்பங்கள் தலைமுறை தலைமுறைகளாக ஈடுபட்டு வருகின்றனர்.
இப்போது நவீன முறை கலாய் ஷீட்டுகள்..சிமெண்ட் ரூப் ஷீட்டுகள் மூலம் வீடுகள் கட்டப்படுவதால் தொழில் சற்று தடுமாட்டத்தை சந்தித்தாலும்.
.தனக்கான பெயரை தக்கவைத்து சிறப்புடன் விற்பனை ஆகவே செய்கின்றன 'ஆறுபாதி கீற்றுகள்'.
     இவ்வூரில் பாரம்பரியமாக தவில் நாதஸ்வர கலைஞர்கள்  உருவாகி வருகிறார்கள்.
கலைப்பயிற்சிக்கூடமும் இயங்குகிறது.
திருமணப் பத்திரிகைகளில் 'விளநகர் குழுவினர்'மங்கல வாத்திய இசை என்று அச்சடிப்பது இப்பகுதியில் பிரசித்தம்.
பெரும்பாலான கோவில்களில் இவர்கள் பரம்பரை இசை வாசிப்பாளர் களாலும் இருக்கிறார்கள்.நாற்பது கிலோமீட்டர் சுற்றளவில் கோவில் திருவிழாக்களில் இவர்களது இசைப்பண் இடம்பெறாமல் சிறப்படையாது என்பதே உண்மை.
      இவ்வூர் முக்கிய வழிபாட்டு தலங்களாக 'துறைகாட்டும் வள்ளல்'பநீ உசிரவனேஸ்வரர் கோவில் உள்ளது.
    திருஞானசம்பந்தர் செம்பள்ளி தரிசனம் முடித்து திருவிளநகர் வருகிறார். காவிரி வடகரையிலிருந்து தென்கரை சிவாலயத்திற்கு வர முற்படும்போது காவிரியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.அதைக்
கண்ட திருஞானசம்பந்தர் 'ஆற்றைக்கடந்து செல்ல துறைகாட்டுவோர் எவரேனும் உள்ளரோ'என மனதளவில் நினைக்க..வேடன் ஒருவன் தான் அழைத்துச்சென்று தென்கரை சேர்ப்பதாக உறுதியளித்து ஆற்றில் இறங்குகிறான்..காவிரி வற்றி முழங்கால் அளவு நீரே இருக்கிறது.
.வியப்போடு கரை சேர்ந்த ஞானசம்பந்தர் வேடரைத்தேட..அங்கே அவரைக் காணோம்..வேடராக வந்து தனக்கு துறைகாட்டி அருளியது திருவிளநகர் இறைவனே என உணர்ந்த திருஞானசம்பந்தர் போற்றிப்பாடி மகிழ்ந்த தலமே விளநகர் உசிரவனேஸ்வரர் ஆலயம் ஆகும்.
   தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்
தலங்களில் 40-வது தலமாகும்.இத்தல இறைவன் மூலவர் துறைகாட்டும் வள்ளல்-வேயுறு தோளியம்மை.தருமைஆதினத்திற்கு பாத்தியப்பட்ட திருக்கோவிலாகிய இத்தலம் மிகவும் சிதிலமடைந்தும்..போதுமான கவனிப்பு இன்றியும் இருந்து வந்தது.தருமையாதின குரு முதல்வர் 27-வது குருமகா சந்நிதானத்தின் முயற்சியில் புரனமைக்கப்பட்டு ..
கடந்த 4-11-2020 ல் குடமுழுக்கு 
செய்வி க்கப்பட்டது.
    அருள்மிகு வரதராஜபெருமாள் கோவில்..
கீழ மாரியம்மன் ஆலயம் ஆகியவை முக்கியமான வழிபாட்டு தலங்களாக விளங்குகின்றன.
இலவம் மரத்தில் சுயம்புவாக தோன்றியதாக நம்பப்படும் சாய்பாபா ஆலயமும் மக்கள் வழிபாட்டில் இருக்கிறது.
    இவ்வூர் மண்ணின் மைந்தர்களாக நினைவு கூறத்தக்கவர்களில் முதன்மையானவர் எழுத்தாளரும்..
தொழிலதிபரும்..
மக்கள் சக்தி இயக்கம் நிறுவனருமான எம்.எஸ்.உதயமூர்த்தி(8-4-1928--21-1-2013)விளநகரில் பிறந்த இவர் பள்ளிப்படிப்பை மயிலாடுதுறையிலும்..பட்டப்படிப்பை அண்ணாமலைப்
பல்கலைக்கழகத்திலும் நிறைவு செய்து..சீர்காழி சபாநாயகம் உயர்நிலைப்பள்ளியில் வேதியல் ஆசிரியராக பணியாற்றினார்.பின் கும்பகோணம் மற்றும் கிண்டி பொறியியல் கல்லூரிகளிலும் உதவிப்பேராசிரியராக பணியாற்றிய பின்னர்..அமெரிக்க சென்று பல்வேறு நிறுவனங்களில் தலைமைப்பதவிகளை வகித்தார். தானே ஒரு நிறுவனத்தை தொடங்கி வெற்றிகரமாக நடத்தியபின் தன் மகனிடம் ஒப்படைத்துவிட்டு இந்தியா திரும்பினார்.
     கிராமப்புற முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்ட அறிக்கைகளை தயாரித்து மத்திய மாநில அரசுகளுக்கு வழங்கினார்.அதில் குறிப்பிடத்தக்க அம்சம் நதிகள் இணைப்பு பற்றியது.
   மக்கள் சக்தி இயக்கத்தை தொடங்கி இளைஞர்களிடையே தன்னம்பிக்கை மற்றும் நாகரீக அரசியல் பிரவேசம் பற்றி உரையாற்றினார்.
   அண்ணா உடல்நிலை சரியில்லாமல் சிகிட்சைக்காக அமெரிக்கா சென்றபோது அவரை வரவேற்று உபசரித்தவர்.எம் ஜி ஆர் அரசியல் பிரவேசத்திற்கு முன்பே  நியாயமான அரசியலைத்தருவார் என அமெரிக்காவுக்கு அழைத்து அறிமுகக் கூட்டம் நடத்தியவர்.
நாற்பதுக்கும் மேற்பட்ட தன்னம்பிக்கை நூல்களை தந்தவர்.
   இவரது கருத்துக்களால் ஈர்க்கப்பட்ட பிரபல இயக்குநர் திரு.கே.பாலச்சந்தர் ஒரு திரைப்படத்திற்கு 'உன்னால் முடியும் தம்பி'என இவரது புத்தகத்தலைப்பை சூட்டியதோடு கதை நாயகனுக்கு உதயமூர்த்தி என்று பெயரும் சூட்டி கௌரவித்தார்.இவருக்கு பூர்வீக இடத்தில் சிலையும் நினைவு இல்லமும்  இவரது குடும்பத்தினரால் அமைத்து  பராமரிக்கப்பட்டு வருகிறது.
   அடுத்த ஆளுமையாக முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் விளநகர் எஸ்.கணேசன் அவர்களை கூறலாம்.
   மாணவர் பருவத்திலிருந்தே திராவிடர் கழகத்தில் ஈடுபாடு கொண்டு..பின்னர் திமுக தொடக்க காலத்திலிருந்தே பயணித்தவர்.
     அண்ணா..கலைஞர் ஆகியோரின் அன்பும் அரவணைப்பும் பெற்றவர்.
   தமிழக சட்டப்பேரவைக்கு தொடர்ந்து மூன்று முறை தேர்ந்தெடுக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டவர்.
   செம்பனார்கோவில் ஒன்றியக்குழு தலைவராகவும் பொறுப்பு வகித்தவர்.இந்தி எதிர்ப்பு போராட்டத்திலும் கலந்து கொண்டு சிறை சென்றவர்.தனது பூர்வீக சொத்துக்களை விற்று தொகுதி மேம்பாட்டிற்காக செலவிட்டவர் என அவர் மறைந்து நாற்பதாண்டுகளுக்கு மேல் ஆகியும் மக்கள் பேசிக்கொள்வதைப்
பார்த்து இளைய
தலைமுறையினர்
வாய் பிளப்பது கண் கூடு.
     இத்தகைய மண்ணில் வாழ்வது பெருமை என விளநகர் மக்கள் பூரிப்படையலாம்.இவ்வூரில் பாசனத்திற்கு உதவும் வாய்க்கலின் பெயர் கூட 'சத்தியவாணன்' வாய்க்கால் என்பது தான்..!*
----------------
அரும்பூர்.க.குமாரகுரு,மயிலாடுதுறை