இன்னும் ரெண்டு வருஷத்துல வயசுக்கு வந்துருவ! இன்னும் அப்பாவக் கூட்டிக்கிட்டே போ பாத்ரூமுக்குக் கூட! இப்படி பேய் பேய்னு பயந்து சாவுறியேடி!" என

தன் மகள் தேவியைக்" />

tamilnadu epaper

கண்ணாடிப் பேய்கள்

கண்ணாடிப் பேய்கள்


"இன்னும் ரெண்டு வருஷத்துல வயசுக்கு வந்துருவ! இன்னும் அப்பாவக் கூட்டிக்கிட்டே போ பாத்ரூமுக்குக் கூட! இப்படி பேய் பேய்னு பயந்து சாவுறியேடி!" என

தன் மகள் தேவியைக் கரித்துக் கொண்டிருந்தாள் அம்மா 

லெட்சுமி.


"சரி விடு! எல்லாம் சரியாகிவிடும்! புள்ள பயந்திடப்போவுது!" என்று அப்பா ராஜன் மகளுக்கு ஒத்து ஊதினார். 


தேவியும் இதுவரை இரவில் தனியாக அதுவும் வீட்டிற்குள் எங்கும் சென்றதில்லை. ஆனால் ஹாரர் திரைப்படங்கள் டி. வி யில் அடிக்கடி பார்ப்பாள். 

பிறகு இரவு வந்தவுடன் பார்த்த பேய் படங்களை நினைத்துப் பார்த்து பயப்படுவாள். 


அமானுஷ்ய விஷயங்கள் தான் உணர்வதாக அடிக்கடி தேவி அப்பாவிடம் மட்டும் சொல்லி வந்தாள். 


ஜன்னலில் அசைந்தாடும் உருவமும். 

நடு இரவில் ஜல் ஜல்ஜல் கொலுசு ஒலி கேட்பதாகவும். சில சமயங்களில் தன் பின்னே ஒரு உருவம் நிற்பதுபோல உணர்வதையும் ராஜனிடம் சொல்லி ஏன் அப்படி நடக்கின்றது? என சந்தேகம் கேட்டுக்கொண்டே இருப்பாள். 


கொலுசு சப்தம் போலொரு பூச்சியின் ஒலி என்பதை பலரும் சொன்னதைவைத்துப் புரிந்து கொண்டாள். 

பின்னால் உருவம் போல் இருப்பது பய உணர்ச்சியின் வெளிப்பாடு என மற்றும் ஜன்னல் உருவம் பேய் திரைப்படங்களின் பாதிப்பு மற்றும் அதே சிந்தனையில் இருப்பதால் வரும் உணர்வு என ராஜன் புரியவைக்க முயற்சி செய்தார். 


ஒருநாள், "அப்பா! நடு இரவில் மொட்டை மாடியில் யாரோ குதிப்பது போன்ற சப்தம் வருதுப்பா! அது என்னவாக இருக்கும்?"

பயத்துடன் கேட்ட மகளை மறுநாள் விடிந்தும் விடியாத அதிகாலைப் பொழுதில்

 மொட்டை மாடிக்கு அழைத்துச் சென்று காட்டினார். 

அங்கே அவள் கண்ட காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

எங்கிருந்தோ தப்பி வந்த குரங்கு குட்டிகள் வழி தெரியாமல் மொட்டை மாடியில் சுற்றித் திரிந்தன. மொட்டை மாடியில் மலம் ஜலம் கழித்து கிடந்தது. அவளே புரிந்துகொள்ளட்டும் என

ராஜன் ஒன்றும் விளக்கம் அளிக்கவில்லை. தேவிக்கு புரிந்து விட்டது. 

அவள் கொஞ்சம் தெளிவாக இருந்தாள். 


சில நாட்கள் நிம்மதியாக கழிந்தது தேவிக்கு. 


ஒருநாள் இரவு இரண்டு மணி இருக்கும். திடீரென வீட்டின் வெளிக் கதவை யாரோ மெதுவாகத் தட்டுவது போலத் தெரிந்தது. வெளிப்பக்க தாழ்ப்பாள் கொண்டி மட்டும் ஆடுவது போல தெளிவாகக் கேட்டு கண் விழித்தாள் தேவி. 


சப்தம் வந்து கொண்டிருந்தது. அதைத் தொடர்ந்து கதவின் இடுக்கில் யாரோ அங்குமிங்கும் நடப்பது போல நிழலாடியது. அவ்வளவுதான் தேவி பயந்து போய் அப்பாவை எழுப்பி விஷயத்தைக் கூறினாள். 


அவரும் எழுந்து உட்கார்ந்து பார்த்தார். அவர்கள் படுத்திருக்கும் அறையும் வாசற்கதவும் பக்கம் தான். எனவே ஒரு உருவத்தின் நிழல் ஆடியது உறுதியாகத் தெரிந்தது. 


என்னவாக இருக்கும் என ராஜன் நடந்து கதவருகே சென்றார். பயத்துடன் தேவி அவரைப் பிடித்துக்கொண்டு பின்னாலே சென்றாள்


கதவைத் திறந்து வெளியே எட்டிப்பார்த்த

ராஜன் அதிர்ச்சியானார். 

அங்கே இரத்தம் சிதறிக் கிடந்தது. 

அதைப் பார்த்ததும் தேவி பயந்து அலறி விட்டாள். 

ராஜன் அவளைத் தைரியப்படுத்தி

" அங்கே பார் தேவி!"என்று ராஜன் காட்டிய திசையை நடுக்கத்துடன் பார்த்தாள். அங்கே சற்று தள்ளி இவர்களின் வளர்ப்பு பூனை ஒரு எலியைக் கொன்று வாசல் கதவிலிருந்து தளம் வரைக்கும் இழுத்துச் சென்று தின்று

கொண்டிருந்தது. தேவிக்கு அப்போதுதான்

ஞாபகம் வந்தது. இரவு

படுப்பதற்கு முன் பூனைக்கு பால் ஊற்ற மறந்தது. அதுதான் கதவின் கொண்டியைத் தட்டி இருக்கிறது. பின்னர் பசியில் வசமாக மாட்டிய ஒரு எலியை அடித்துக் கொன்றிருக்கிறது. 


ராஜன் மெதுவாக தேவியைப் பார்த்தார். அவள் முகம் பயம் நீங்கிப் பிரகாசமாயிருந்தது. 


தேவி தைரியமாக வீட்டிற்குள் இரவிலும் தனியாகப் போகப் பழகிக் கொண்டாள். தேவையற்ற பயத்தை அன்றோடு உதறித் தள்ளினாள். 


சில நாட்கள் கழித்து ராஜன், தேவியிடம், 


"தேவி! மனிதர்கள் குறிப்பிட்ட வயது வரை தான் உயிரோடு இருப்பார்கள். பிறகு ஆயுள் காலம் முடிந்தவுடன் இறந்து விடுவார்கள். அதற்கு சாட்சியாக இறப்புச் சான்றிதழ் தந்து உறுதி செய்வார்கள். அதன்பிறகு அந்த உயிரற்ற உடல் சிறு உயிரினங்களின் உணவாகி எலும்பு மட்டுமே பூமியில் மிஞ்சும். அதோடு அவ்வளவுதான். 

பேய் என்பதெல்லாம் கதைக்கு மட்டுமே பொருந்தும். 


மனிதர்கள் நல்லவர்கள் தீயவர்கள் என இருப்பது வழக்கம். தீய எண்ணம் உள்ளவர்கள் தான் பேய். 


நாம் கண்ணாடி பார்க்கும்போது நல்லவனாக இருக்கிறோம் என்று நம்மைப் பார்த்து நாமே சந்தோஷப்பட வேண்டும். தீயவனாக இருந்தால் நாம் தான் பேய் என்று பயந்து உணர்ந்து திருந்த வேண்டும். எனவே பேய் என்பதற்கு உருவம் இல்லை. நம்முடைய தீய எண்ணங்கள் மட்டும் தான் பேய். 


அப்படியே இறந்த மனிதனெல்லாம் பேய் என்றால் மனிதன் தவிர மற்ற உயிர்கள் இறந்து தானே போகின்றன. அவைகள் எல்லாம் பேயாகவா அலைகின்றன? இல்லையே! இனி எதற்கும் நீ பயப்படக்கூடாது!"என்ற

அப்பாவின் வார்த்தைகளை ஏற்று அஞ்சாமல் வாழ்வேன் என உறுதி கூறினாள் தேவி. 



-பிரபாகர்சுப்பையா

மதுரை- 12.