அநேகமாக எல்லா ஊரிலும் தெருவுக்கு ஒரு காலி மனையாவது இருக்கும்.
இது யாருடையது பலருக்கும் தெரிவதில்லை. வெளியூரிலோ வெளிநாட்டிலோ இருப்பார்கள்.
சுற்றுச் சுவரும் இருக்காது. காட்டுச் செடிகளும் முட்புதர்களும் கீரி, பாம்பு, எலி, பெருச்சாளி இன்னும் எத்தனையோ அதில் வாழ்ந்து கொண்டிருக்கும்.
தெரு நாய்களும் வாசம் செய்யும். இது மக்களுக்கு ஆபத்து என்று நிலச் சொந்தக்காரர் நினைப்பதில்லை. சொத்தாக வாங்கிப்போட்டது!
தனித்தனியாக குப்பைகளை பிரித்து போடவேண்டும் என்று எத்தனை கோடி முறை சொன்னாலும், தினமும் கார்ப்பரேஷன் காரர்கள் வந்து சென்றாலும் காலி மனைகளில் விட்டெரியப்படும் குப்பைக் கவர்கள், அழுகிய பழங்கள், காய்கறிகள், குழந்தைகள், பெண்கள், முதியவர் எல்லோருடைய ''டயபர்' மற்றும் 'பேட்' எறியப்பட்டதால் பிரிந்து செடிகளில் தொங்கிக் கொண்டிருக்கும் அவல நிலை மாறுவது எப்போது?
இந்தக் குப்பைகள்தான் பெருமழையில், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு ஓரிடத்தில் தங்கியோ, அடைத்துக் கொண்டோ நீர்த்தேக்கம் ஏற்படுகிறது.
நாம் முடிந்தவரை இல்லை இல்லை கண்டிப்பாக காலிமனைகளில் குப்பை போடாமல் இருந்தால் நாட்டுக்கு நன்மை செய்தவர்கள் ஆவோம்.
நிலச் சொந்தக்காரரிடம் கட்டாயப்படுத்தி சுற்று சுவர் எழுப்பி மற்றும் கதவுகள் வைக்க சொல்ல வேண்டும்.
இல்லையேல் மக்களுக்கு ஊறு விளைவித்ததாக அபராதம் கட்டச் செய்ய வேண்டும். நடக்குமா?
வி.பிரபாவதி