tamilnadu epaper

கி. ஆ. பெ. விசுவநாதம் பிள்ளை

கி. ஆ. பெ. விசுவநாதம் பிள்ளை


பிறப்பு : 11-11-1899

இறப்பு : 19-12-1994

பெற்றோர் : பெரியண்ண பிள்ளை, சுப்புலட்சுமி அம்மையார்

இடம் : திருச்சி, தமிழ்நாடு

புத்தகங்கள் : அறிவுக்கதைகள், அறிவுக்கு உணவு,ஆறு செல்வங்கள், எண்ணக்குவியல், எது வியாபாரம்? எவர்வியாபாரி?, எனது நண்பர்கள், ஐந்து செல்வங்கள், தமிழ் மருந்துகள், தமிழ்ச்செல்வம், தமிழின் சிறப்பு, திருக்குறள் கட்டுரைகள், திருக்குறள் புதைபொருள் - பாகம்1, திருக்குறள் புதைபொருள் - பாகம் 2, திருக்குறளில் செயல்திறன், நபிகள் நாயகம்,நல்வாழ்வுக்குவழி, நான்மணிகள், மணமக்களுக்கு, மாணவர்களுக்கு, வள்ளலாரும்அருட்பாவும், வள்ளுவர், வள்ளுவரும்குறளும், வானொலியிலே

வகித்த பதவி : எழுத்தாளர்

விருதுகள் : முத்தமிழ் காவலர் விருது



வாழ்க்கை வரலாறு


கி.ஆ.பெ. விசுவநாதம் பிள்ளை பரவலாக முத்தமிழ் காவலர் கி.ஆ.பெ, தமிழகத்தின் திருச்சியைச் சேர்ந்த தமிழ் உணர்வாளர் ஆவார். நீதிக்கட்சி உறுப்பினராக பிராமணரல்லாதோர் முன்னேற்றத்திற்காகவும் தமிழ்மொழியின் உயர்விற்காகவும் பாடுபட்டவர். இவர் எழுதியுள்ள 23 நூல்களும் தமிழ்வளர்ச்சித்துறையால் 2007-2008 இல் நாட்டுடைமையாக்கப்பட்டு பரிவுத் தொகை 10 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது.


 பிறப்பு


1899-ஆம் ஆண்டு நவம்பர் 11-ஆம் தேதி பெரியண்ண பிள்ளை - சுப்புலட்சுமி அம்மையார் அவர்களுக்கு புதல்வனாய் பிறந்தார். தமிழ் இலக்கண கடலான இவர் பள்ளிக்கு சென்றதில்லை. ஐந்தாவது வயதில் முத்துச்சாமிக் கோனாரிடம் மணலில் தமிழ் எழுத்துகளை எழுதிப் பயிற்சி பெற்றார். நாவலர் வேங்கடசாமி நாட்டார், மறைமலையடிகள், திரு. வி. க, நாவலர் சோமசுந்தர பாரதியார் முதலிய தமிழறிஞர்கள் தொடர்பால் தாமாக முயன்று தமிழ் இலக்கண-இலக்கியங்களைக் கற்றுப் புலமை பெற்றார்.


முதல் இந்தி எதிர்ப்புப்போரில்(1938) தந்தை பெரியாரோடும், தமிழறிஞர்களோடும் கைகோத்துப் போராடிய முதன்மைப் போராளியே கி. ஆ. பெ. விசுவநாதம். 1965ஆம் ஆண்டு இந்தி எதிர்ப்புப் போரில் மக்களை தூண்டியதாகக் கூறி இரண்டு மாதம் சிறையிலடைக்கப்பட்டார். அதன் காரணமாக கி.ஆ.பெ. விசுவநாதம் தனது மகள் மணிமேகலை திருமண உறுதியேற்பாடு நிகழ்வுக்கு செல்ல முடியவில்லை. தன் வாழ்நாளின் இறுதியில் தமிழீழ விடுதலைப் போருக்கு துணை நின்றார்.


2000ஆம் ஆண்டிலிருந்து கி.ஆ.பெ. விசுவநாதம் விருது அவர்களின் பெயரில் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் கீழ் இயங்கும் தமிழ் வளர்ச்சி இயக்ககம் மூலம் தமிழ்நெறியில் தமிழ்த் தொண்டாற்றும் ஒருவருக்கு ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. இவரது நினைவில் ஐந்து ரூபாய் தபால் தலை இந்திய தபால் துறை சார்பில் வெளியிடப்பட்டது.1997ல் முதல்வர் கருணாநிதி திருச்சியில் துவக்கிய மருத்துவக் கல்லூரிக்கு கி.ஆ.பெ. யின் பெயர் சூட்டப்பட்டது.


இவர், அறிவுக்கதைகள், அறிவுக்கு உணவு, ஆறு செல்வங்கள், எண்ணக்குவியல், எது வியாபாரம்? எவர்வியாபாரி?, எனது நண்பர்கள், ஐந்து செல்வங்கள், தமிழ் மருந்துகள், தமிழ்ச்செல்வம், தமிழின் சிறப்பு, திருக்குறள் கட்டுரைகள், திருக்குறள் புதைபொருள் - பாகம்1, திருக்குறள் புதைபொருள் - பாகம் 2, திருக்குறளில் செயல்திறன், நபிகள் நாயகம், நல்வாழ்வுக்குவழி, நான்மணிகள், மணமக்களுக்கு, மாணவர்களுக்கு, வள்ளலாரும் அருட்பாவும், வள்ளுவர், வள்ளுவரும் குறளும், வானொலியிலே ஆகிய நூல்களை இயற்றியுள்ளார்.



பெயர் : வ. வே. சுப்பிரமணியம் ஐயர்

இயற்பெயர் : வரகனேரி வேங்கடேச சுப்பிரமணிய ஐயர்

பிறப்பு : 02-04-1881

இறப்பு : 04-06-1925

பெற்றோர் : வேங்கடேச ஐயர், காமாட்சியம்மாள்

இடம் : திருச்சிராப்பள்ளி, சென்னை, தமிழ்நாடு

புத்தகங்கள் : மங்கையர்க்கரசியின் காதல், கம்ப நிலையம், குளத்தங்கரை அரசமரம், பல மொழிபெயர்ப்பு நூல்கள், மாஜினியின் சுயசரிதை, கரிபாலிடியின் வரலாறு, நெப்போலியன், தன்னம்பிக்கை, கம்பராமாயணம் - ஓர் ஆராய்ச்சி

வகித்த பதவி : சுதந்திரப்போராட்ட வீரர், இலக்கியவாதி, மொழிபெயர்ப்பாளர்



   வாழ்க்கை வரலாறு


 வரகனேரி வேங்கடேச சுப்பிரமணிய ஐயர் (வ.வே.சு.ஐயர்) இந்திய விடுதலைக்காக முதன்மை பங்காற்றியவரும், சிறந்த இலக்கியவாதியும், மொழி பெயர்ப்பாளரும் ஆவார். இவர் தமிழகத்திலுள்ள திருச்சிராப்பள்ளியைச் சேர்ந்தவர். தமிழ் இலக்கிய பங்களிப்புகளுக்காக இவர் தமிழ் சிறுகதை தந்தை என்றும் அழைக்கப்படுகிறார்.


வெங்கடேச சுப்பிரமணியம் திருச்சி வரகனேரியைச் சேர்ந்த வேங்கடேச ஐயருக்கும், சின்னாளப்பட்டி எனும் ஊரைச் சேர்ந்த காமாட்சியம்மாளுக்கும் 2.4.1881ல் பிறந்தார். வேங்கடேச ஐயர் எம்.ஏ. தேர்ச்சி பெற்று, திருச்சி வரகனேரி வர்த்தக சங்கம், ஜனோபகார நிதி முதலிய நிறுவனங்களை நடத்தி வந்தவர்.


  கல்வி


வ. வே. சுப்பிரமணியம் திருச்சி செயிண்ட் ஜோசப் கல்லூரியில் கல்வி பயின்றார். தம் பன்னிரண்டாம் வயதில் தகுதித் தேர்வு எழுதி (மெட்ரிகுலேஷன்) மாநிலத்தில் ஐந்தாவதாகத் தேறினார். பதினாறாம் வயதில் பி.ஏ. பட்டத் தேர்வில் மாகாணத்தில் முதலாவதாகத் தேறினார். பின்னர் சென்னை சென்று வக்கீல் பரீட்சையில் முதல் பிரிவில் தேறி, சென்னை மாநகர் ஜில்லா கோட்டில் முதல் வகுப்பு ப்ளீடராகச் சேர்ந்து வக்கீல் தொழில் நடத்தினார்.


கிரேக்கம், இலத்தீன், பிரெஞ்சு, ஆங்கிலம், சமஸ்கிருத, தமிழ் மொழிகளில் ஆழ்ந்த புலமை பெற்றவராய் விளங்கினார்.வழக்கறிஞர் பட்டம் பெற்றதும் பத்தொன்பதாம் வயதில் திருச்சி திரும்பி வழக்கறிஞர் தொழில் நடத்தி வந்தார். 1907ல் வ.வே.சு. ரங்கூன் வழி இலண்டன் சென்றார். லண்டன் சென்று பாரிஸ்டர் பட்டம் பெற வேண்டும் என்ற விருப்பத்தின் அடிப்படையில் லண்டன் சென்று அங்கு இந்தியா ஹவுஸில் தங்கினார்.


லண்டனில் அரசியல் போராட்டம்


இவர் இலண்டனில் வாழ்ந்த காலத்தில் பாரதியாரின் இந்தியா பத்திரிகைக்கு எழுச்சியூட்டும் கட்டுரைகள் எழுதி அனுப்பி வந்தார். அபிநவபாரத் சங்கம் இந்திய விடுதலைக்கான இளைஞர்களின் களமாகத் திகழ்ந்தது. வ.வே.சு ராணுவ வீரருக்குரிய போர்ப் பயிற்சிகளை இங்குக் கற்றுக் கொண்டார்.


இலண்டன் இந்தியா விடுதியில் தங்கியிருந்த அவருடன் 30 பேர் சேர்ந்து விடுதலை இயக்கத்தில் ஈடுபட்டனர். வ.வே.சுவும் துப்பாக்கிப் பயிற்சி பெற்றார். மற்ற புரட்சி இளைஞர்களுக்கும் அப்பயிற்சியை அளித்தார். மண்டயம் ஶ்ரீநிவாசாச்சாரியார், அரவிந்த கோஷ், மகாகவி பாரதியார், நீலகண்ட பிரம்மச்சாரி, வ.ரா.போன்ற மற்ற வீரர்களோடு இணைந்து இந்திய விடுதலைக்குப் போராடினார்.


1922ல் சேரன் மாதேவியில் ‘தமிழுக்குருகுலம்’ என்ற கல்வி நிலையத்தை தொடங்கினார். அதை நிர்வகிக்க பரத்வாஜ் ஆசிரமத்தையும் அமைத்தார். 1924ல் பாலபாரதி என்ற இதழைத் தொடங்கினார். தொழிற்கல்வியும் அறிவுக் கல்வியும் மாணவர்க்கு அளித்தார்.


தம் குருகுல மாணவர்களுடன் 1925 சூன் 3 அன்று அம்பாசமுத்திரம் அருவியை காணத் தம் மகள் சுபத்திராவுடன், மகன் கிருஷ்ணமூர்த்தியையும் அழைத்துக் கொண்டு சுற்றுலா சென்றார். 1925 சூன் 4 அன்று அருவியில் விழுந்த மகளைக் காப்பாற்ற குதித்த வ.வே.சு.ஐயர் அங்கேயே உயிரிழந்தார்.


தமிழ்நாடு அரசு வ.வே.சுப்பிரமணியம் நினைவைப் போற்றும் வகையில் திருச்சியில் அவர் வாழ்ந்த இல்லம் வ.வே.சு.ஐயர் நினைவகம் எனும் பெயரில் நினைவு இல்லமாக்கப்பட்டுள்ளது. இங்கு நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இவரது நினவாக சேரன்மகாதேவியில் வ.வே.சு.ஐயர் மாணவர் விடுதி உள்ளது.





பெயர் : சுஜாதா(எஸ். ரங்கராஜன்)

பிறப்பு : 03-05-1935

இறப்பு : 27-02-2008

இடம் : திருவல்லிக்கேணி, சென்னை, தமிழ்நாடு

வகித்த பதவி : பொறியாளர், எழுத்தாளர்

விருதுகள் : வாஸ்விக் விருது, கலைமாமணி விருது



  வாழ்க்கை வரலாறு


 சுஜாதா தமிழகத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களில் ஒருவராவார். இயற்பெயர் ரங்கராஜன். தனது தனிப்பட்ட கற்பனை மற்றும் நடையால் பல வாசகர்களை கவர்ந்துள்ளார். சுஜாதாவின் முதல் கதை 1953 ஆம் ஆண்டு சிவாஜி என்ற பத்திரிக்கையில் வெளிவந்தது. இவர் சிறுகதைகள், புதினங்கள், நாடகங்கள், அறிவியல் நூல்கள், கவிதைகள், கட்டுரைகள், திரைப்பட கதை-வசனங்கள், தொலைக்காட்சி நாடகங்கள் எனப் பல துறைகளில் தன் முத்திரையினைப் பதித்தவர்.


சீரங்கம் ஆண்கள் உயர்நிலைப் பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்த சுஜாதா, திருச்சி புனித ஜோசப் கல்லூரியில் பி.எஸ்.சி(இயற்பியல்) படிப்பை முடித்தார். அதன் பின்னர் சென்னை வந்த சுஜாதா, குரோம்பேட்டை எம்.ஐ.டியில் பி.இ(மின்னணுவியல்) கற்றார். திருச்சி புனித ஜோசப் கல்லூரியில் அப்துல் கலாம், சுஜாதா இருவரும் ஒரே வகுப்பில் படித்தார்கள்.


அதன் பின்னர் நடுவண் அரசுப் பணியில் சேர்ந்தார், முதலில் டெல்லியில் பணியாற்றினார். 14 ஆண்டு அரசுப் பணியில் இருந்த சுஜாதா பின்னர் பெங்களூர் பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் இணைந்தார். அங்கு ரேடார்கள் குறித்த ஆய்வுப் பிரிவிலும் மேலும் பல்வேறு பொறுப்புகளிலும் பணியாற்றினார். பின்னர் பொது மேலாளராக உயர்ந்தார். பதவியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் சென்னைக்குத் திரும்பினார்.


அறிவியலை ஊடகம் மூலமாக மக்களிடம் கொண்டு சென்றதற்காக அவரைப் பாராட்டி தேசிய அறிவியல் தொழில்நுட்பக் கழகம் அவருக்கு 1993ம் ஆண்டு விருது வழங்கிக் கெளரவித்தது. மின்னணு வாக்குப் பதிவுப் பொறியை உருவாக்க முக்கியக் காரணமாக இவர் இருந்தார். இதை உருவாக்கிய பாரத் எலெக்ட்ரானிக்கில் முக்கிய உறுப்பினராக இருந்தார் சுஜாதா. இப்பொறியை உருவாக்கியதற்காக அவருக்கு ‘வாஸ்விக்’ விருது வழங்கப்பட்டது.


சுஜாதாவின் எழுத்துப் பணியைப் பாராட்டி அவருக்கு தமிழக அரசின் கலைமாமணி விருதும் வழங்கப்பட்டுள்ளது.இவருடைய, ‘இடது ஓரத்தில்’ என்ற சிறுகதை 1962 ஆம் ஆண்டு குமுதம் இதழில் ரங்கராஜன் என்ற பெயரில் வெளிவந்தது. குமுதம் ரா.கி.ரங்கராஜனின் பெயரும் இவர் பெயரும் குழப்பிக் கொள்ளப்பட்டதால் தன் மனைவி பெயரான, ‘சுஜாதா’ வைத், தன் புனைபெயராக வைத்துக் கொண்டார். கணையாழி இதழில் கடைசிப் பக்கங்கள் எனும் கட்டுரைத் தொடரை ஶ்ரீரங்கம் எஸ்.ஆர் எனும் பெயரிலும் எழுதி வந்தார்.


சுஜாதா இலக்கியம், நாட்டார் வழக்காறு, தமிழ்ச் செவ்விலக்கியம், துப்பறியும் கதை, அறிவியல் கதை, சிறுகதை, புதினம், குறும் புதினம், நாடகம், திரைப்படம், கணிப்பொறியியல், இசை என்று பல பாணிகளிலும் வகைகளிலும் எழுதியுள்ளார். புதினங்கள், சிறுகதைகள், நாடகங்கள், தொகை நூல்கள் என இருநூற்றுக்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியுள்ளார். ஒரு கவிதைத் தொகுப்பும் படைத்துள்ளார். உடல் நிலை மோசமானதால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சுஜாதா சிகிச்சை பலனின்றி பிப்ரவரி 27, 2008 இரவு 9.30 மணியளவில் மறைந்தார்.




பெயர் : இளங்கோவடிகள்

பெற்றோர் : நெடும் சேரலாதன்

வகித்த பதவி : புலவர்



 வாழ்க்கை வரலாறு


 இளங்கோ, அல்லது இளங்கோ அடிகள் தமிழ்க் காப்பியங்களுள் ஒன்றான சிலப்பதிகாரத்தை எழுதியவர். இவர் சேர அரசன் செங்குட்டுவனுடைய தம்பியெனவும், இளவரசுப் பட்டத்தைத் துறந்து துறவறம் மேற்கொண்டவர் எனவும் சொல்லப்படுகின்றது. இவர் சமண சமயத்தைத் தழுவியவராக இருந்தும், தாம் இயற்றிய நூலில் வைணவத் திருமாலையும், சைவக் கொற்றவையையும் போற்றும் பகுதிகள் அந்தந்த சமயத்தவரால் பெரிதும் போற்றப்படுகின்றன.


சிலப்பதிகாரம் என்னும் நூலை இயற்றியவர். தமிழில் எழுதப்பட்ட ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்று சிலப்பதிகாரம். இந்நூல் ‘பாட்டிடையிட்ட தொடர்நிலைச் செய்யுள்’ எனவும் வழங்கப்படுகிறது. சிலப்பதிகாரம் கோவலன் என்ற குடிமகனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டதால் இதனை ‘குடிமக்கள் காப்பியம்’ என்றும் கூறப்படுகிறது.





பெயர் : ஈரோடு தமிழன்பன்

இடம் : ஈரோடு, தமிழ்நாடு

வகித்த பதவி : தமிழ் கவிஞர், எழுத்தாளர்

விருதுகள் : சாகித்ய அகாதமி விருது



 வாழ்க்கை வரலாறு


 ஈரோடு தமிழன்பன் தமிழகக் கவிஞர். ஆசிரியர், மரபுக் கவிஞர், கவியரங்கக் கவிஞர், புதுக்கவிதைக் கவிஞர், சிறுகதை ஆசிரியர், புதின ஆசிரியர், நாடக ஆசிரியர், சிறார் இலக்கியப் படைப்பாளி, வாழ்க்கை வரலாற்றாசிரியர், திறனாய்வாளர், கட்டுரையாளர், ஓவியர், சொற்பொழிவாளர், திரைப்பட இயக்குநர், திரைப்பட பாடலாசிரியர், என பன்முகப்பட்ட ஆளுமைகளைக் கொண்டிருப்பவர்.


 சென்னை தொலைக்காட்சி நிலையத்தில் செய்தி வாசிப்பாளாராக பணியாற்றியவர். தமிழ்நாடு அரசின் இயல் இசை நாடக மன்றத்தின் நிர்வாகக் குழு உறுப்பினராகவும் பணியாற்றியவர். வணக்கம் வள்ளுவம் என்ற கவிதைத் தொகுப்பிற்காக சாகித்திய அகாதமி விருதை 2004-ஆம் ஆண்டில் வென்றவர்.





பெயர் : புதுமைப்பித்தன்

இயற்பெயர் : சொ. விருத்தாசலம்

பிறப்பு : 25-04-1906

இறப்பு : 05-05-1948

இடம் : திருப்பாதிரிப்புலியூர், கடலூர், தமிழ்நாடு

வகித்த பதவி : தமிழ் எழுத்தாளர், உரையாசிரியர்



 வாழ்க்கை வரலாறு


 புதுமைப்பித்தன் என்ற புனைப்பெயர் கொண்ட சொ. விருத்தாசலம் கடலூர் மாவட்டத்தில் உள்ள திருப்பாதிரிப்புலியூரில் ஏப்ரல் 25, 1906 ல் பிறந்தார். தொடக்கக் கல்வியைச் செஞ்சி, திண்டிவனம், கள்ளக்குறிச்சி ஆகிய இடங்களில் பயின்றார். தாசில்தாராகப் பணி புரிந்த அவர் தந்தை ஓய்வு பெற்றமையால், 1918-இல் அவரது சொந்த ஊரானதிருநெல்வேலிக்குத் திரும்பினார். அங்குள்ள ஆர்ச் யோவான் ஸ்தாபனப் பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்தார். பின்பு நெல்லை இந்துக் கல்லூரியில் இளங்கலைப் (பி. ஏ) பட்டம்பெற்றார். இவர் மிகச்சிறந்த தமிழ் எழுத்தாளர்களுள் ஒருவர். சென்னை, தஞ்சாவூர்த் தமிழ் அல்லாது பிற வட்டார வழக்குத் தமிழில் எழுதிய முதல் எழுத்தாளர் புதுமைப்பித்தன்.


 நவீன தமிழ் இலக்கியத்தின் ஒரு முன்னோடியாக இவர் கருதப்படுகிறார். கூரிய சமூக விமர்சனமும் நையாண்டியும், முற்போக்குச் சிந்தனையும், இலக்கியச் சுவையும் கொண்ட இவருடைய படைப்புகள், இவரின் தனித்தன்மையினை நிறுவுகின்றன. புதுமைப்பித்தன் அடிப்படையில் சோஷியலிச கருத்துகளைக் கொண்டவர். அவரது அரசியல் கட்டுரைகள் மற்றும் புத்தகங்களில் குறிப்பிடத்தக்கவை நான்கு. அவை ஃபாசிஸ்ட் ஜடாமுனி, (முசோலினியின் வாழ்க்கை வரலாறு) கப்சிப் தர்பார், (ஹிட்லரின் வாழ்க்கை வரலாறு) ஸ்டாலினுக்குத் தெரியும் மற்றும் அதிகாரம் யாருக்கு (இரண்டும் கம்னியூசத்தையும் ஸ்டாலினின் கொள்கைகளையும் விவரிப்பவை). நான்கு புத்தகங்களுமே ஃபாசிசத்தை எதிர்த்தும் ஸ்டாலினிய கொள்கைகளுக்கு ஆதரவாகவும் எழுதப்பட்டன.


 புதுமைப்பித்தனின் சிறுகதைகள் தான் அவருக்கு எழுத்துலகில் தனி இடத்தை அளித்தன. அவர் எழுதியதாகக் கணிக்கப்படும் 108 சிறுகதைகளில் 48 மட்டுமே அவர் காலத்திலேயே வெளியாகின. அவரது சிறுகதைகள் மணிக்கொடி, கலைமகள், ஜோதி, சுதந்திர சங்கு, ஊழியன், தமிழ்மணி, தினமணியின் ஆண்டு மலர், நந்தன் ஆகிய பத்திரிக்கைகளில் பிரசுரமாயின. மற்றவை அவர் மறைவுக்குப் பின்னர் வெவ்வேறு காலங்களில் பிரசுரமாயின. கடைசித் தொகுப்பு 2000ல் வெளியானது. புதுமைப்பித்தன் 1930களில் உருவாகிய மணிக்கொடி இயக்கத்தின் முக்கிய எழுத்தாளர்களுள் ஒருவராக விளங்கினார். 2002ல் தமிழக அரசு இவரது படைப்புகளை நாட்டுடமை ஆக்கியது.





பெயர் : காரைக்கால் அம்மையார்

இயற்பெயர் : புனிதவதி

பெற்றோர் : தனதத்தன், தர்மவதி

இடம் : காரைக்கால், பாண்டிச்சேரி

புத்தகங்கள் : அற்புதத் திருவந்தாதி, திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகம், திரு இரட்டை மணிமாலை

வகித்த பதவி : ஆன்மீகவாதி



 வாழ்க்கை வரலாறு


காரைக்கால் அம்மையார் மூன்று பெண் நாயன்மார்களில் ஒருவரும், மூத்தவருமாவார். கையிலை மலையின் மீது கைகளால் நடந்து சென்றவரை, சிவபெருமான் அம்மையே என்று அழைத்ததாலும், காரைக்கால் மாநகரில் பிறந்தவர் என்பதாலும் காரைக்கால் அம்மையார் என்று வழங்கப்பெறுகிறார். பரமதத்தன் என்பவரை மணந்து இல்லற வாழ்வில் ஈடுபட்டிருந்தவர், ஒரு நாள் கணவன் கொடுத்தனுப்பிய மாம்பழத்தினை சிவனடியாருக்கு படைத்துவிட்டு, அந்த மாம்பழத்தினை கணவன் கேட்க, இறைவனிடம் வேண்டி மாம்பழத்தினைப் பெற்ற நிகழ்விலிருந்து இறைவனை சரணடைந்தார்.


இவர் இசைத்தமிழால் இறைவனைப் பற்றி முதன்முதலாக பாடியவராகவும், தமிழுக்கு அந்தாதி எனும் இலக்கண முறையை அறிமுகம் செய்தவராகவும் அறியப்பெறுகிறார். அற்புதத் திருவந்தாதி, திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகம், திரு இரட்டை மணிமாலை போன்ற நூல்களைத் தந்து சைவத்தமிழுக்கு பெரும் தொண்டாற்றியுள்ளார். இவருடைய பதிக முறைகளைப் பின்பற்றியே பிற்காலத்தில் தேவாரப் பதிகங்கள் இயற்றப்பட்டன. இவருக்கென காரைக்கால் சிவன் கோவிலில் தனி சந்நிதி அமைக்கப்பட்டுள்ளது. அக்கோவில் காரைக்கால் அம்மையார் கோவில் என்று மக்களால் அழைக்கப்பெறுகிறது.


 இளமைக் காலம்:


முற்காலத்தில் காரைவனம் எனப்பட்ட மாநகர், தற்போது காரைக்கால் என்று வழங்கப்படுகிறது. இந்நகரில் காரைக்கால் அம்மையார் தனதத்தன், தர்மவதி தம்பதியருக்கு மகளாகப் பிறந்தார். இவரது இயற்பெயர் புனிதவதி. சிவ வழிபாட்டில் ஈடுபாடு கொண்ட வணிகக் குடும்பத்தில் பிறந்தார். சிறுவயதிலிருந்தே சிவபெருமான் மீது பக்தி கொண்டவராக இருந்தார். இவர்களது மரபுக்குப் பொருந்தும் வகையில் காரைக்கால் மாநகரை அடுத்த நாகைப்பட்டினத்தில் பரமதத்தன் என்ற வணிகருக்கு மணமுடித்து கொடுத்தனர். தங்கள் குடிக்கு ஒரே புதல்வியாரானதினால், நாகைக்கு அனுப்பாமல், காரைக்காலிலேயே மணமக்களுக்கு வீடு அமைத்துத் தந்தார்.


மாங்கனியில் திருவிளையாடல்:


ஒரு சமயம் பரமதத்தன் தனது கடையிலிருந்தபோது ஒரு வியாபாரி இரண்டு மாங்கனிகளைக் கொண்டுவந்து அவரிடம் கொடுத்தார். கனிகளை பெற்ற பரமதத்தன், அதனைத் தன் வீட்டிற்கு கொடுத்து விட்டார். அவரது வீட்டிற்கு சிவனடியார் ஒருவர் உணவுவேண்டி வந்தார். அவரை வரவேற்று அமர செய்தார் அம்மையார். மதிய உணவு தயாராக இல்லாததால் தயிர்கலந்த அன்னம் படைத்து அத்துடன் தனது கணவன் கொடுத்து அனுப்பிய ஒரு மாங்கனியையும் தந்து உபசரித்தார். மதிய உணவிற்கு வீட்டிற்கு வந்த பரமதத்தனுக்கு பல வகை பதார்த்தங்களுடன் அன்னம் பரிமாறிய அம்மையார், சிவனடியாருக்குப் படைத்தது போக மீதமிருந்த ஒரு மாங்கனியை அவருக்கு வைத்தார்.


மாங்கனியின் சுவை நன்றாக இருக்கவே, மற்றொரு கனியையும் தனக்கு வைக்கும்படி கேட்டார் பரமதத்தன். அம்மையார் செய்வதறியாது திகைத்து சமையலறைக்குள் சென்று சிவபெருமானிடம் வேண்டினார். ‘மெய் மறந்து நினைந்து உற்ற இடத்து உதவும் விடையவர் தான் தம் மனம் கொண்டு உணர்தலுமே’ அவர் கையில் ஒரு மாம்பழம் தோன்றியது. மகிழ்ச்சி அடைந்த அம்மையார் அதனை கணவனுக்கு படைத்தார். முதலில் வைத்த மாங்கனியைவிட இக்கனி அதிக சுவையுடன் இருக்கவே சந்தேகமடைந்த பரமதத்தன், காரணம் கேட்டார். அம்மையார் நடந்ததை கூறினார். அக்காரணத்தைப் பரமதத்தன் நம்பவில்லை. சிவபெருமான் கனி தந்தது உண்மையானால், மீண்டும் ஒரு கனியை வரவழைக்கும்படி கூறினான். அம்மையார் சிவபெருமானை வணங்க, மீண்டும் ஒரு மாங்கனி கிடைத்தது. இதைக்கண்டு வியந்த பரமதத்தன் அவரைத் தெய்வப் பெண் என்று கருதினார். உடனுறையத் தனக்குத் தகுதியின்மையால் தான் அவரை விட்டு நீங்கிவிடுதல் வேண்டுமென்னும் முடிவில் அவரை நீங்கத் துணிந்தார். வாணிபம் செய்ய விரும்பும் பண்டங்களும் பொருந்துவனவற்றை நிரம்ப ஏற்றிக்கொண்டு கடலின்மீது பயணமாகச் சென்றார்.


 பேய் வடிவு பெறுதல்:


பின்னர் பரமதத்தன் பாண்டிய நாடான மதுரை மாநகர் சென்று மற்றொரு பெண்ணை மணம் முடித்து அங்கேயே வாழ்ந்தார். சிலகாலம் கழித்து அவளுக்கு ஒரு பெண்குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு அம்மையாரின் திருப்பெயரையே வைத்தார். பரமதத்தன் பாண்டிய நாட்டில் இருக்கும் செய்தி, அம்மையாருடைய உறவினர்களுக்கு, மற்ற வணிகர்கள் மூலம் தெரிய வந்தது. அவர்கள் அம்மையாரை அழைத்துக்கொண்டு பாண்டிய நாட்டை நோக்கி புறப்பட்டு போனார்கள். பாண்டிய நாட்டில் பரமதத்தன் இருக்கும் நகருக்கு வெளியே உள்ள ஒரு இடத்தில் தங்கி, அம்மையார் வந்திருக்கும் செய்தியை பரமதத்தனுக்கு ஒரு ஆள் மூலம் சொல்லி அனுப்பினர். தன்னைத் தேடிவந்த மனைவியைக் கண்ட பரமதத்தன் அவரைத் தெய்வமாக வணங்கித் தனது இரண்டாவது மனைவி, குழந்தையுடன் காலில் விழுந்தார். இவர்கள் தெய்வத்தன்மை உடையவர்கள், அதனால் தான் காலில் விழுந்தேன். நீங்களும் இவரைப் போற்றி வழிபடுங்கள் என்று கூறினான். அதன் பிறகு ‘கணவருக்காக தாங்கிய உடல் நீங்கி, இறைவரைப் போற்றுகின்ற பேய்வடிவத்தை அடியேனுக்கு நற்பாங்கு பொருந்த அருளவேண்டும்’ என்று இறைவனிடம் வேண்டி நின்றார். தாம் வேண்டிய அதனையே பெறுவாராகி உடம்பில் தசையும் அதனை இடமாகக்கொண்டு அடைந்த அழகுகளும் ஆகிய இவை எல்லாவற்றையும் உதறி, அனைவரும் வணங்கும் சிவபூதகண வடிவம் பெற்றார்.


 கயிலாயம் செல்லல்:


அம்மையார் இறைவனைக் காணக் கயிலாயம் சென்றார். கயிலாயம் இறைவன் உறையும் புனிதமான இடம் என்பதால், அங்கு தரையில் கால் ஊன்றாமல், தலைகீழான நிலையில் சென்றார். கயிலையில் இறைவனுடன் இடங்கொண்டு அமர்ந்திருந்த பார்வதி அம்மை, தலையால் நடந்துவரும் அம்மையைக் கண்டு இவர் யாரெனக் கேட்க ‘நம்மைப் பேணும் அம்மை காண்’ எனக் கூறி ‘அம்மையே வருக’ என்றழைத்து ‘வேண்டுவன கேள்’ என விளித்தார், அதற்கு அம்மையார் ‘பிறவாமை வேண்டும், மீண்டும் பிறப்புண்டேல் இறைவா உனையென்றும் மறவாமை வேண்டும், இன்னும் வேண்டும் நான் மகிழ்ந்து பாடி, அறவா நீ ஆடும் போது உன் அடியின் கீழ் இருக்க’ என்றார். அவ்வாறே அருளிய இறைவன் அவருக்கு தன் திருத்தாண்டவம் காட்டி திருவாலங்காட்டிற்கு வரப்பணித்து அங்கு அருளிய இறைவன் தன் திருவடிக் கீழ் என்றும் இருக்க அருளினார்.


 எழுதியுள்ள நூல்கள்:


காரைக்கால் அம்மையார் பதினோராம் திருமுறையுள் இரண்டாவதாக இடம்பெற்றுள்ள பனுவல்களை பாடியுள்ளார். 


Thanks and regards 

A s Govinda rajan 

17/5 Sri andal flats andavar nagar second Street Kodambakkam Chennai 

7358228278