ஒரு பேருந்தில் நானும் என் மனைவியும் கோவையில் இருந்து சத்தியமங்கலம் வழியாக கோபிசெட்டிபாளையம் சென்று கொண்டு இருந்தோம். வழியில் ஒருவர் பேருந்தில் ஏறினார். மூன்று பேர் அமரக்கூடிய இருக்கையில் நாங்கள் இருவர் மட்டும் உட்கார்ந்திருந்தோம். பேருந்தில் ஏறியவர் நாங்கள் உட்கார்ந்திருந்த இருக்கையை நோக்கி வந்து என்னை பார்த்து கொஞ்சம் தள்ளி உட்காருப்பா என்றார். நான் கடும் கோபத்துடன் ராஸ்கல் நான் உனக்கு அப்பாவா என்று கேட்டேன். அதற்கு அவர் அப்பா என்று சொல்லக்கூடாதா அதற்கு ஏன் இவ்வளவு ஆத்திரம் என்று ஒருமையில் பேச ஆரம்பித்து விட்டார். அப்பன் என்று சொன்னால் என்ன என்றார். சிறிது நேரத்திற்குப் பிறகு என் அருகில் உட்கார்ந்த அந்த நபர் அவர் வைத்திருந்த கைப்பையில் இருந்து வேட்டி, துண்டு, சேலை ஆகியவற்றை ஒவ்வொன்றாக எடுத்து இருக்கை மீது வைத்தார் பிறகு கைப்பையின் அடியில் இருந்த அரிவாளை எடுத்து வைத்தார். அதைப் பார்த்த எனக்கு சற்று கலக்கமாக இருந்தது. மேலும் அவர் சொன்னார். அப்பன் என்று சொன்னதற்கு இவ்வளவு கோபப்படுகிறாயே என்று கண்டபடி பேச ஆரம்பித்து விட்டார். ஒரே வீச்சு தலையைத் தண்டாக்கி விடுவேன் என்றாரே பார்க்கலாம். நான் நடு நடுங்கிப் போனேன் பிறகு என்னை ஏதோதோ சொல்லித் திட்டிக்கொண்டே வந்தார். எனக்கு அவர் அருகில் உட்கார்ந்துகொண்டு வருவதற்கே அச்சமாக இருந்தது. ஆனால் அருகில் அமர்ந்திருந்தவர்களுக்கு பேருந்து ஓடும் சத்தத்தில் எங்களின் உரையாடல் கேட்கவில்லை. நல்லவேளை சில கிலோமீட்டர் சென்றதும் நடுவழியில் இறங்கிக்கொண்டார். போகும்போது என்னைப் பார்த்து. உன் அதிர்ஷ்டம். இன்று என்னிடமிருந்து தப்பித்துக் கொண்டாய். ஜெயில் எனக்குப் புதுசு அல்ல. ஏற்கனவே மூன்று முறை போய் வந்திருக்கிறேன் என்று சொல்லியவாரே கீழே இறங்கிச் சென்றார். பேருந்தில் அருகில் இருந்தவர்கள் என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ளும் ஆர்வத்துடன் என்னைப் பார்த்தனர். எனக்கு மிகவும தர்மசங்கடமாக இருந்தது. எல்லோரும் என்ன என்ன தகராறு... ஆந்த ஆள் ஏன் இப்படி பேசிவிட்டு போகிறான் என்று கேட்டார்கள். நான் அதற்குப் பதில் ஏதும் சொல்லாமல் ஒன்றுமில்லை என்று கூறி விட்டேன். அந்நிகழ்வு நடந்த பிறகு சத்தி வழியாக பேருந்தில் கோபி வருவதையே நிறுத்திவிட்டேன். சில சமயங்களில் எனக்கு இயல்பாக வரும் கோபத்தைத் தவிர்க்க முயற்சி செய்து வருகிறேன்.
அன்புடன்
உ.மு.ந.ராசன் கலாமணி
( உ.மு.நடராஜன்)
நிலையான முகவரி
4, சுபி இல்லம்,
கிழக்குப் பூங்கா தெரு கோபிசெட்டிபாளையம் 638452.