tamilnadu epaper

செலவும்.. சிக்கனமும்..

செலவும்.. சிக்கனமும்..

பல்சுவைப் பகுதி

மிகவும் அருமையான தலைப்பு. எந்த காலத்திற்கும் அவசியமான தலைப்பும் கூட. நாம எவ்வளவு கவனமா சம்பாதிக்கிறோமோ, அதே கவனமாக செலவு பண்ணாத் தான் நம்ம கைல சேமிப்புங்கறது இருக்கும். சேமிப்புங்கிறது அத்தியாவசிய செலவை சமாளிக்க ரொம்ப ரொம்ப அவசியம்.


என்னைப் பொறுத்தவரை சில செலவுகளுக்கு கணக்கு பார்க்க மாட்டேன்.. உடல் ஆரோக்கியத்துக்கு தேவையான காய்கறி பழங்கள் போன்றவை அதில் அடங்கும். "வைத்தியருக்கு கொடுப்பதை வாணிகருக்கு கொடு" என்று ஒரு பழமொழி உண்டு. அதனால் ஆரோக்கிய விஷயத்திற்கு நோ காம்ப்ரமைஸ்.


மேலும் என்னிடம் உள்ள ஒரு பழக்கம் அன்றைய செலவை அன்றைக்கு நோட்டில் குறித்து வைப்பது. இதுல நன்மை என்னன்னா நம்மளுடைய வருமானம் நமக்கு தெரியும். நாம் செய்யும் ஒவ்வொரு செலவும் எது அதிகம், எது அனாவசியம், எதைக் குறைக்கலாம் என்பதை நாம் நோட்டை எடுத்துப் பார்த்தாலே எளிதில் கண்டுபிடித்து விடலாம். வீட்டு வருமானத்துக்கு தகுந்த செலவு செய்ய இது சிறந்த வழி.

என் அப்பா நான் 1978 ல் முதல் குடித்தனம் போகும்போது எனக்கு வாங்கி கொடுத்த பரிசு கணக்குநோட்டு தான். அதை இன்று வரை தொடர்கிறேன்.


அதுபோல இன்றைய காலகட்டத்தில் மின்சாரம், பெட்ரோல் போன்ற விஷயங்களை கவனத்தில வச்சுக்கணும் ரெண்டுமே விலை அதிகம் உள்ள பொருள்கள்.. அத்தியாவசிய தேவையும் கூட.. காரில் வெளியே செல்லும்போது அந்தப் பாதையில் வழியில் என்னென்ன வேலை உண்டோ அத்தனையும் முடித்து விடுவேன்.


தேவையில்லாத இடத்தில் மின்விசிறி ஓடிக்கொண்டிருப்பது அனாவசியமாக டிவியோடுவது தவிர்க்க வேண்டியது. முக்கியமாக ஹீட்டர், ஏசி போன்றவற்றில் கண்டிப்பாக ஒரு கவனம் இருக்க வேண்டும். இது இரண்டும் அதிகம் கரண்ட் பில் கூட்டக்கூடியது. கூடிய வரை பவர் சேவர்களை உபயோகப்படுத்தலாம்.


அதேபோல என்டர்டைன்மென்ட்க்கு என்று ஒரு தொகை தனியாக ஒதுக்கலாம். இன்றைய காலகட்டத்தில் ஒரு ஹோட்டலில் போய் சாப்பிட கூட ஆயிரத்தில் பணம் வேண்டி இருக்கிறது.அதேபோல ஒரு படத்திற்கும் செல்வது என்றாலும் ஆயிரங்களில் பணம் செலவாகிறது. அதனால் அதையெல்லாம் முறைப்படுத்தி ஓரிருமுறை மாதத்திற்கு என்று வைத்துக் கொண்டால் கணிசமான தொகை சேமிக்கலாம்.


பத்து வருடங்களுக்கு முன்பிருந்ததை விட எல்லா பொருள்களுமே விலைவாசி மூன்று மடக்க கூடிவிட்டது.

அதனால் கவனமாக செலவு செய்யாவிட்டால் எவ்வளவு சம்பாதித்தாலும் பலன் இல்லை .


செலவு செய்வது என்பது தேவைக்கு செலவு செய்வது ..தேவைக்கு அதிகமாய் செலவு செய்வது ..என இருவகை படுத்தலாம்.ஒருவர் வருமானத்திற்கு ஏற்றவாறு திட்டமிட்டு தேவைகளை பூர்த்தி செய்து..அதே நேரம் தேவையற்ற செலவுகளை குறைத்து கொள்வது சிக்கனம். தேவைக்கு கூட செலவு செய்யாமல் இருப்பது நப்பித்தனம்.. கருமிதனம் என்றும் கூறலாம் .


சிக்கனத்தையும், நப்பித்தனத்தையும் சிலர் குழப்பி கொள்கிறார்கள். தேவைக்கு செலவு செய்யாத ஒருவரை யாரும் ஆதரிக்க மாட்டார்கள்.. அது போன்றே தேவைக்கு அதிகமாய் செலவு செய்பவரும்.


வீட்டின் வரவு செலவு கணக்கு எழுதும் பழக்கம் எங்கள் வீட்டில் என் அம்மா ,மாமியார் போன்றவர்களுக்கே உண்டு .. அதனால் விலைவாசி.. எந்த மாதத்தில், எந்த பொருள் விலை கூடுகிறது என்பதை எல்லாம் தெளிவாக புள்ளி விவரம் வைத்திருப்பார்கள்.. புளி , மிளகாய் வற்றல் இதெல்லாம் மலிவாய் இருக்கும் நேரத்தில் வாங்கி பக்குவப்படுத்தி பத்திரப்படுத்தி வைத்துக் கொள்வார்கள். மிளகாய் வற்றல் 80 ரூபாய்க்கு விற்கும் போது அவர்கள் 30 ரூபாய்க்கு வாங்கிய வற்றலை உபயோகிப்பர்.


மூடை நிறைய அரிசி இருந்தாலும் பானையில் அளவாகத்தான் போடனும்" என்பாள் என் ஆச்சி. எனக்குத் தெரிந்து எதையும் வீணாக்கி தரையில் கொட்டிய நினைவு இல்லவே இல்லை. அப்போது குளிர்சாதன பெட்டி இல்லாத நிலையில் வீணாக்காமல் செய்வது பெரிய காரியம்.


இப்போது உள்ள காலத்தில் நமக்கே தெரியும் எவ்வளவு உணவுப் பொருள்கள் பாக்கெட்டில் ஊற்றி குப்பையில் கொட்டப்படுகிறது என்பது அது வீடுகளிலும்.. சரி ஹோட்டல் மெஸ்களிலும் சரி. தண்ணி சிக்கனத்தை வலியுறுத்தும் கலத்தில் கல்யாண வீட்டில் வைக்கப்படும் தண்ணீர் பாட்டில்களை மீதி தண்ணீரோடு வைத்துவிட்டு வருவது சரியா என்று யோசிங்கள். நான் வெட்கப்பட மாட்டேன் கையோடு கொண்டு எடுத்து வந்து விடுவேன். தண்ணீரை குடித்த பிறகே தூரப் போடுவேன்.


என் வீட்டில் எனக்கு உதவியாக வேலை செய்ய வரும் பெண்கள் என்னிடம் கற்றுக் கொள்வது இந்த சிக்கனம் தான்

அதை அவர்களே சொல்லுவார்கள். காய்கறி நறுக்க சொன்னால் கூட ..டிவி ஷோவில் செப்கள் நறுக்குவது போல தலை பாகம் 1/4 inch.. அடிபாகம் 1/4 இன்சும் நறுக்கி தூர போட்டுவிட்டு மீதிக்காயை நறுக்குவார்கள். அந்தக் காலத்தில் காய் வெட்டுவதும் வெங்காயம் நறுக்குவதும் என்பது துளி கூட காய் வீணாகாமல் நறுக்குவார்கள். வெங்காயத்தின் தோலை மட்டும் தான் உரிப்பார்கள். இப்போது கலர் வெள்ளையாக தெரியும் வரை கத்தியால் வெட்டி தூக்கி போட்டு விடுகிறார்கள்ள் காய்கறிகளின் தோலையும் பீலரை வைத்து வெள்ளையாக தெரியும் வரை சீவி போடுகிறார்கள்.

காய்கறி விற்கும் விலையில் சிக்கனம் என்பது யார் மனதிலும் இல்லை ..


என் வீட்டிற்கு என் உதவிக்கு வரும் பெண் கூறுவாள் தட்டில் சாதம் குழம்பு போட்டு காய்கறியை வைத்து கொடுத்து விடுவேன்.. சாப்பிட முடியவில்லை என்றால் பிள்ளைகள் வெளியே கொண்டு போய் கொட்டுவார்கள் என்பாள். இப்படிப்பட்டவள் எவ்வளவு சம்பாதித்தாலும் எப்படி பணம் நிற்கும். இன்று பொருட்கள் விற்கும் விலையில் தூர கொட்டுவது சரி கிடையாது.


சிறுவயதில் என் பிள்ளைகள் சாப்பிட முடியவில்லை என்று கூறினால் .."ஒரு பருக்கை சாதம் வீணாக்கினால் ஒன்பது நாள் பட்டினி" என்று என்ன ஆச்சி சொல்லுவதை சொல்லி அவர்களை பயமுறுத்துவேன் .அதையும் மீறி வீணாக்கினால் " நீங்களே கொண்டு போய் காம்பவுண்ட் சுவரில் பூனைக்கு வைத்துவிட்டு வாங்க..சாதத்தை வீணாக்குற பாவத்தை நான் செய்ய மாட்டேன் " என்று கூறிவிடுவேன். அப்படியே அவர்கள் செய்து ஓரிரு நாட்கள் செய்துவிட்டு, அதற்குப் பிறகு உணவை வீணாக்கக்கூடாது என்ற எண்ணத்திற்கு வந்து விட்டார்கள். இன்றுவரை உணவை எங்கள் வீட்டில் யாரும் வீணாக்குவதில்லை .


நாங்கள் இப்படி இருப்பதை பார்த்து கேலி செய்த வேலை பார்க்கும் பெண்.. இப்போது தாங்களும் அதை கடைப்பிடிப்பதாக கூறும் போது ஒரு சிறு சந்தோஷம். ஒன்று புரிந்து கொள்ள வேண்டும் சிக்கனம் என்பது சிறு சிறு செயல்களில் இருந்தாலே பெரிய அளவில் பலன் கிட்டும்.முதலில் எந்த பொருளையும் வீணாக்க கூடாது.


எவ்வளவு சம்பாதித்தாலும் திட்டமிட்டு செலவழிக்காவிட்டால்

பணம் கையில் நிற்காது. தேவையற்ற செலவுகளை குறைத்து ..தேவையானதற்கு சிக்கனமாக செலவு செய்தாலே

வரவிற்குள்ளாக செலவை அடக்கி விடலாம்.


என் தோழி கல்லூரி ப்ரொபசர். உழவர் சந்தையில் தான் போய் காய் வாங்குவார். முதலில் காய்கறி போர்டை பார்த்து

அன்றைய தேதியில் எந்த காய்கறி விலை குறைவோ அதை வாங்குவார். இன்று பீன்ஸ் விலை அதிகம் என்றால் சௌசௌ வாங்கிக் கொள்வேன் என்பார். பீன்ஸ் இந்த வாரம் சாப்பிடலைன்னா என்ன அடுத்த வாரம் தானா விலை குறைஞ்சிடும் அப்ப சாப்பிட்டுக்கலாம் என்பார் சிரித்துக் கொண்டே. காய்யின் விலைக்கேற்ப மெனு போட்டுக் கொள்வார். எல்லோரும் அவரை கேலி பண்ணினாலும் கவலைப்பட மாட்டார்.


விலைவாசி நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே போகும் இந்த நிலையில் சிக்கனமாக இருப்பது ஒன்றே நம் கண் முன் தெரியும் எளிதான வழி ..எந்த நேரத்தில் எப்போது அவசர செலவுகள் வரும் என்று சொல்ல முடியாது. அதை சமாளிக்க

எப்போதும் சேமிப்பு அவசியம்.



-தி.வள்ளி

திருநெல்வேலி.