tamilnadu epaper

தமிழ் எங்கள் உயிருக்கு மேல்..

தமிழ் எங்கள் உயிருக்கு மேல்..

-கவிஞர் இரா.இரவி 


எத்தனையோ மொழிகள் உலகில் தோன்றியுள்ளன. கால வெள்ளத்தைக் கடக்க முடியாமல் எத்தனையோ மொழிகள் அழிந்துவிட்டன. உலகிலேயே பழமையான மொழிகளில் இன்றும் உயர்தனிச் செம்மொழியாய் இருப்பது நம் தாய் மொழியாகிய தமிழ் மொழி மட்டும் தான்.

தமிழர்களுக்கு தமிழ் மொழியின் மீது பற்று வரவேண்டும் என்பதற்காக முப்பதாவது நூலாக தமிழ் எங்கள் உயிருக்கு மேல் என்று எழுத்தாளர் இந்த நூலை மிகச் சிறப்பாக எழுதியுள்ளார்.


உள்ளத்துள்ளது கவிதை - இன்பம்

உருவெடுப்பது கவிதை

தெள்ளத் தெளிந்த தமிழில் - உண்மை

தெரிந்துரைப்பது கவிதை.

                 -------------கவிமணி தேசிகவிநாயகம்பிள்ளை


 எந்த தொழிலும் சில நேரங்களில் சோர்வை தந்துவிடும் ஆனால் கவிதை வழங்குபவருக்கும் வாசிப்பவருக்கும் சோர்வளிப்பதில்லை.


எல்லா மொழிகளிலும் கவிதை இருக்கிறது. ஒரு மொழியே கவிதையாக இருக்கிறது என்றால் அது தமிழாக தான் இருக்க முடியும்.

தமிழ் மொழியின் சிறப்பினை பாவேந்தர் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் என்று பாடினார். ஆனால் எழுத்தாளரோ தமிழ் எங்கள் உயிருக்கு மேல் என்ற பாடி தமிழின் சிறப்பை உணர்த்தி உள்ளார்.


"அமுதம் வேண்டுமா தமிழ் வேண்டுமா என்றால் அமுதம் வேண்டாம் தமிழ் வேண்டும் என்பேன்!"


என்ற வரிகள் மொழிப்பற்று நிறைந்த உணர்ச்சிமிக்க வரிகள்.


" உயிருக்கு நிகராகத் தமிழை நேசித்தவர். உன்னதத் தமிழுக்கு வேராக நிலைத்தவர். தெருவெல்லாம் தமிழ் முழக்கம் முழங்கிட வேண்டியவர்

 தெருவில் கடைகளில் தமிழ்பலகை வேண்டியவர் !"

என்று பாவேந்தர் பாரதிதாசனைப் பற்றியும்


"அறம் பொருள் இன்பம் மூன்றும் பாடினான். அறவழியில் பொருள் ஈட்டுவதே இன்பம் என்றான்!"

என்று திருவள்ளுவரைப் பற்றியும்


"அறம் சொல்லும் திருக்குறளில் அகிலம் காக்கும் "என்று திருக்குறளின் சிறப்பினையும்,


"உலக நாகரிகம் அனைத்தும் இன்று உன்னத கீழடிக்கு கீழ் என்றானது !"


என்று கீழடியின் சிறப்பினையும் தனது எழுத்துக்களால் அழகாக எடுத்துரைத்துள்ளார்.


மொழிப்பற்று நிறைந்த கவிஞர் மரியாதைக்குரிய இரா இரவி அவர்கள் எழுதிய இந்தக் கவிதை தொகுப்பை போலவே

இன்னும் தன் எழுத்துக்களின் மூலம் சமூகத்திற்கு பல கவிதைகளை தருவதற்கு மனமார்ந்த வாழ்த்துகள் .வாழ்த்துகள் ஐயா 

நெல்லை கார்த்திகா ராஜா