tamilnadu epaper

த்ரில்

த்ரில்


அமுதா கொஞ்சம் வித்தியாசமானவள்.


 பெரிய பணக்கார வீட்டுப் பெண்தான், ஆனாலும் அவளிடம் ஒரு கெட்ட குணம்.


 கல்லூரி மாணவியான அவள், தன் சக மாணவர்களின் பர்ஸைத் திருடி அந்த பணத்தில் தோழிகளுடன் ஜாலியாக செலவு செய்வாள். 


  கேட்டால், "அதுதான் "த்ரில்" என்பாள்.


 அந்த வகையில் நேற்று அவள் அடித்த பர்ஸ் நவீனுடையது.


 அதில் இருந்த தொகை இருபத்தைந்தாயிரம்.


  "ஏய்... ஆளைப் பார்த்தா டம்மி பீஸ் மாதிரி இருக்கான்... ஆனா பர்ஸில் டுவெண்டி ஃபைவ் தௌஸண்ட் வெச்சிருக்கான்டி" சந்தோஷமாய்ச் சொல்லி விட்டு தோழிகளுடன் ஜாலியாக ஷாப்பிங் மால் சென்றாள்.  


அங்கே அவர்கள் பார்த்ததையெல்லாம் வாங்கித் தள்ளினர்.


கண்டதையெல்லாம் தின்று தீர்த்தனர்.


மறுநாள் மாலை தோழிகளுடன் அந்த ரெஸ்டாரன்ட் சென்ற அமுதா அங்கே நவீன் சர்வராக பணி புரிய, அதிர்ந்தாள். அதை வெளிக் காட்டிக் கொள்ளாமல் மெல்ல விசாரித்தாள் அமுதா. "நவீன்... வாட் ஈஸ் திஸ்?"


தன் பர்ஸ் காணாமல் போன கதையையும், அது கிராமத்திலுள்ள தன் அக்கா தன்னோட தாலியை அடகு வைத்து அவனுக்கு காலேஜ் பீஸ் கட்ட அனுப்பிய பணம் என்பதையும், தான் பார்ட் டைம் வேலை பார்த்துச் சம்பாதித்து முதலில் காலேஜ் ஃபீஸையும், அடுத்து அக்காவின் தாலிக் கடனையும் கட்ட வேண்டும் என்று கவலையோடு நவீன் சொல்ல.


குற்றவுணர்ச்சிக்கு ஆளானாள் அமுதா.


  "ஸாரி நவீன்" என்று சொல்ல வாய் துடித்தாலும், தானே தன் வாயால் மாட்டிக் கொள்ள விரும்பாமல் அமைதி காத்தாள்.


  "நான் மட்டும் தாலிக் கடனை கட்டி அக்காவோட தாலியை மீட்டால் மட்டுமே அவள் அவளோட புருஷன் வீட்டுக்கு போக முடியும்!" என்று சோகமாய்ச் சொல்லி விட்டு அமுதாவும் அவள் தோழிகளும் ஆர்டர் செய்திருந்த உணவுப் பதார்த்தங்களை கொண்டு வந்து அவர்கள் மேஜை மீது பரப்பினான் நவீன்.


அன்று இரவு முழுவதும் உறங்காமல் யோசித்த அமுதா அந்த முடிவுக்கு வந்தாள்.


மறுநாளே 'பிரவீன் கொடுத்தனுப்பிய பணம்' என்று கூறி வேறொருவர் மூலமாக அவனுடைய காலேஜ் ஃபீஸைக் கட்டினாள். 


தான் திருடிய நவீனின் பர்ஸைத் தேடிப் பிடித்து அதில் இருபத்தைந்தாயிரம் ரூபாயை வைத்து, அது கீழே கிடந்ததாய்ச் சொல்லி செக்யூரிட்டி மூலம் கல்லூரி அலுவலகத்திற்கு கொடுத்தனுப்பினாள்.


எல்லாவற்றிற்கு மேலாக, "இனிமேல் அடுத்தவர்கள் பரிசைத் திருடி அந்த பணத்தில் ஜாலியாக செலவு செய்யும் "த்ரில்"ல்லைச் செய்யப் போவதில்லை என்று உறுதியும் பூண்டாள் அமுதா.


கல்லூரி அலுவலகத்திலிருந்து நவீனுக்கு அழைப்பு வர ஓடினான்.


 அவனுடைய பர்ஸை அவர்கள் தர, அவசரமாய் வாங்கித் திறந்து பார்த்தான். அதில் பணம் அப்படியே இருக்க பீஸ் கட்டும் இடத்திற்கு ஓடினான்.


  "ஏன்பா நேத்திக்குத்தானே வேறொருத்தர் மூலமா பணத்தைக் கொடுத்தனுப்பி பீஸ் கட்டினே?... மறந்துட்டியா?"


  "என்னது?.. நான் அனுப்பினேனா?"


   தலையைப் பிய்த்துக்கொண்டான் நவீன்.


  அவன் தவிப்பை சற்றுத் தள்ளி நின்று ரசித்த அமுதாவைத் தோழிகள் கேலி செய்தனர். 'என்னடி அடுத்தது லவ் "த்ரில்"தானே?"


   "ச்சீய்... போங்கடி"

-முகில் தினகரன்.

கோயமுத்தூர்.