நாராயணன் சட்டியில் வெந்து கொண்டிருந்த வடைகளைப் புரட்டிப் பக்குவம் பாரத்துக் கொண்டிருந்தார். லேசான மஞ்சளில் இருந்தாலும் சற்று அடர்த்தியாகச் சிவக்கவேண்டும். ஒருசிலர் அந்த சிவந்த வடையைக் கொடுங்க என்பார்கள். பேருந்துகள் புழங்கும் சாலையில் இருந்தது அந்த டீக்கடை. எல்லாமும் நாராயணன்தான். மாஸ்டர், உரிமையாளர், வேலைக்காரர் என்று.
அப்போதுதான் கடைக்குள் நுழைந்தார் ராகவன்.
வாங்க சார்.. உக்காருங்க.. மெதுவடை சூடா இருக்கு.. சிவக்க எடுத்துத் தரேன் அதுதானே உங்களுக்குப் பிடிக்கும்.. என்றார்.
சரி கொடுங்க நாராயணன் என்று உள்ளே போய் மின்விசிறியைப் போட்டு நாற்காலியில் உட்கார்ந்தார் ராகவன்.
சற்று நேரத்தில் வெந்த வடைகளை எடுத்துக் கண்ணாடிப் பெட்டிக்குள் போட்டுவிட்டு எடுத்துச் சாப்பிடுங்க சார்.. என்றார் நாராயணன்.
ஒன்றை எடுத்தார். பேப்பரைத் தாண்டிச் சுட்டது. ஓர் ஓரத்தில் லேசாகப் பிட்டு வாயில் வைத்தார். பிட்ட இடத்திலிருந்து ஆவி வெளியே வந்தது.
இவர் பாதி வடையைச் சாப்பிடும்போது டீ போட்டுக் கொண்டு வந்து வைத்தார் நாராயணன். சார்.. டீயை ஆத்தலே.. நீங்க வடையைச் சாப்பிட்டு முடிங்க.. குடிக்கப் பதமா இருக்கும் என்றார்.
சரிங்க நாராயணன் என்றார் ராகவன்.
கொஞ்ச நேரத்தில் கடைக்குள் வந்தார் ஒரு நடுத்தர மனிதர். உள்ளே வரும்போதே பேசிகொண்டே வந்தார்.. சே.. என்னா வெயிலு.. வெயிலுக்குச் சில்லுன்னுதாம் குடிக்கணும்.. ஆனா டீ குடிக்காம வடை சாப்பிடாம இருக்கமுடியாது.. என்ன சார் சொல்றீங்க? என்று ராகவனைப் பார்த்துக் கேட்டபடியும்.. எனக்கு டீ போடுங்க.. நாட்டுச் சக்கரை இருக்கா.. அதுலப் பாதியப் போட்டுக் கொடுங்க.. இருங்க ஒரு வடை சாப்பிட்டுக்கறேன்.. அப்புறமாப் போடுங்க.. வடை சூடா இருக்கா? சிவந்த வடைதாம் எனக்குப் புடிக்கும்.. என்றபடி ஒரு சிவக்காத வடையை எடுத்துப் பிட்டு தின்ன ஆரம்பித்தார்.. வடை கொஞ்சம் சூடு குறைஞ்சிடிச்சில்ல.. என்றார் ராகவனைப் பார்த்து..
இல்லியே சூடாத்தான் இருக்கு.. இப்பத்தான் போட்டு எடுத்தாரு என்றார் ராகவன் டீயைக் குடித்தபடியே.
எனக்குக் கொதிக்கக் கொதிக்க இருக்கணும்.. அப்படியே சாப்பிட்டுப் பழகிட்டேன் என்றதும், சீக்கிரம் அந்த இடத்திவிட்டுக் கிளம்பணும் என்று ராகவன் நினைத்துக்கொண்டார்கள். இதுபோன்ற மனிதர்கள் நிறையக் கிளம்பிவிட்டார்கள்.
எழுந்து ஒருவடை ஒருடீ என்று சொல்லி நாராயணனிடம் காசைக் கொடுத்துவிட்டுக் கிளம்பினார் ராகவன்.
எனக்கு டீயைப் போடுங்க.. என்று நாராயணன் முதுகைப் பார்த்துச் சொல்லியபடியே இன்னொரு வடையை எடுத்துத் தின்ன ஆரம்பித்தார்.
நாராயணன் டீயைப் போட்டுக் கொடுக்க வாங்கிக் குடித்துவிட்டுக் கிளம்பும்போது
ஒரு விஷயம்.. உள்ளப் பாக்காமலே டீ போட்டுக் கொடுக்கறீங்க.. இப்ப ஒருத்தரு போனாரே அவரு ரெண்டு வடை ஒரு டீயைக் குடிச்சிட்டு ஒரு வடை டீக்குக் காசு கொடுத்துட்டுப்போறாரு.. என்றார்.
அப்படியா.. சரி நான் பாத்துக்கறேன்.. நீங்க சொல்லுங்க என்றார் நாராயணன்.
நான் ஒரு டீ ஒரு வடை.. சூடு குறைஞ்சிடிச்சி வடை.. என்றபடி காசக் கொடுத்ததும் நாராயணன் சொன்னார்..
என் பையன் வந்ததும் உள்ள கேமரா வச்சிருக்கேன்.. அதுல பாத்துட்டுக் கேட்டுக்கறேன் என்றதும் உடனே அவர்.. கேமரா இருக்கா? என்றபடி .. நான் மறந்துட்டேன்.. நானும் ரெண்டு வடையும் டீயும்தாம் என்றபடி விட்டுப்போன வடைக்குக் காசைக் கொடுத்துவிட்டு பரபரவென்று இறங்கி வேகமாகப் போனார்.
எத்தனை வருஷமா ராகவன் சார்.. இங்க வராரு.. இந்தாளு ரெண்டு வடை சாப்பிட்டுட்டு அவரக் குத்தம் சொல்றான்.. திருட்டுப்பயல்.. இவன மாதிரி ஆளுங்கதான் இன்னிக்கு நிறைய இருக்கானுங்க.. இவனுங்களுக்குத்தாம் காலம் இப்போ.. ராகவன் சார்… எப்பவாச்சுதாம் வடை சாப்பிடுவாரு.. அதுவும் ஒரு வடைக்குப் மேல சாப்பிட மாட்டாரு..
கடையில கேமரா இருக்காண்ணே? என்றான் ஒருவன்.
பெரிய லட்சக்கணக்குல வியாபாரம் ஆவுது கேமரா வக்கறதுக்கு.. சும்மா போட்டு வாங்குனேன்.. திருட்டுப்பய மாட்டிக்குவோம்னு காசக் கொடுத்துட்டு ஓடிட்டான் என்றபடி நாராயணன் டீயைப் போட ஆரம்பிததார் .
-ஹரணி,
தஞ்சாவூர்-2