tamilnadu epaper

கனவுக் குதிரை..

கனவுக் குதிரை..


கனவுக் குதிரை ஏறியமர்ந்து போவோம் வாருங்கள்! 

கவிஞர்கள் உலகம் எப்படியிருக்கும் என்பதைப் பாருங்கள்.!

உணவு மட்டுமே உலகம் அல்ல உணர்ந்து பாருங்கள்! 

உணர்வில் கலந்து ஒவ்வொரு நொடியும் வாழ்வோம் வாருங்கள்!


ஒவ்வொரு உயிரும் உன்னுடன் பேசும் அனுபவம் உண்டாகும்!

எவ்வுயிர்க்குள்ளும் இருக்கும் இறைவன் நம்மையும் ஒன்றாக்கும்!


மேகத்திரையில் மெல்லிய தென்றல் உன்னை வரவேற்கும்! 

சோகம் மறைந்து சுதந்திரமாக உலவும் நாள்பிறக்கும்!


பறவையினங்கள் பக்கம் அமர்ந்து பழங்களை உனக்கூட்டும்.. 

சிறகு முளைத்தே செவ்வானத்தில் நிலவும் முகம் காட்டும்!


கானகம் யாவும் கவிதைக்குயில்கள் அன்புடன் தாலாட்டும்! 

அனைவரும் வருக அருவியும் அழைத்தே அமுதப் பாலூட்டும்.!


மலர்கள் தலையை அசைத்து மலர்ந்தே மனதுள் மகிழ்வூட்டும்!

நிலமும் வானும் நீயும் நானும் பறந்திட வழிகாட்டும்!


-வே.கல்யாணகுமார்