செல்போன் மணியடித்தது. போனையெடுத்தேன். "நான் நீலமேகம் பேசுகிறேன்" என்றார். நான் ஒரு பொழுதுபோக்கு வாட்ஸ் அப் குழுவில் உறுப்பினராக இருக்கிறேன். அவரும் அந்த குரூப்பில் உறுப்பினராக இருக்கிறார். நேரில் அறிமுகம் இல்லாவிட்டாலும், வாட்ஸ் அப்பில் சந்தித்துக்கொள்வதோடு சரி.
"வணக்கம். நலமாக இருக்கிங்களா? நான் நீலமேகம் பேசுகிறேன். விழுப்புரத்திலிருந்து உங்க கடலூர் வழியாகதான் எங்க ஊருக்கு காரில் போகிறேன். இப்போது கடலூர் அருகே வந்து விட்டேன். இன்னும் அரைமணி நேரத்தில் கடலூர் வந்து விடுவேன். ஒரு கால்மணி நேரம் சந்தித்து பேசலாமா?" என்றார்.
நானும், "பேசலாமே, வருகிறேன்!" என்றேன்.
அவர், "ஹோட்டல் ஆரியபவன் அருகே நில்லுங்கள். வந்து விடுகிறேன்" என்றார்.
எனது வீட்டிலிருந்து அந்த ஹோட்டல் ஸ்கூட்டரில் சென்றால் பத்து நிமிட நேரம்தான். நான் எனது ஸ்கூட்டரை எடுத்துக்கொண்டு அங்கே சென்றேன்.
நான் ஸ்கூட்டரை நிறுத்திவிட்டு அந்த ஹோட்டல் வாசலில் நின்றுக்கொண்டிருந்தபோது ஒரு கால் மணி நேரத்தில் நீலமேகம், அவருடைய இரண்டு மகள்களுடன் காரில் வந்தார். சொந்த கார்தான்.
என்னைப் பார்த்து, "வணக்கம் சார்" என்றவர், "ஹோட்டலில் காபி சாப்பிட்டுக்கொண்டே பேசுவோம்" என்றார்.
என்னிடம் ஏ டி எம் கார்டோ, என் போனில் ஜி பேயோ இல்லாவிட்டாலும் என் பையில் இருநூறு ரூபாய் இருந்தது. நானும் ஒரு காபிதானே என்று நினைத்தபடி சென்றேன்.
ஹோட்டலில் நுழைந்த நீலமேகமும் அவருடைய மகள்களும், நானும் ஒரு டேபிள் அருகே உட்கார்ந்தோம்.
"போண்டா நல்லா இருக்கும் போலிருக்கே!" என்றபடி ஆளுக்கொரு போண்டா ஆர்டர் செய்தார். "கிச்சடி சாப்பிடுவோம்" என்றபடி கிச்சடி கொண்டு வரச்சொன்னார். அப்புறம் சர்வரிடம், "ஆளுக்கொரு மசால் தோசை" என்றார். அதன் பிறகு சின்னதாக ஒரு ஏப்பம் விட்டபடி, "எல்லோருக்கும் காபி" என்றார். அதன்பிறகு "வீட்டில் மனைவி மட்டடும்தான் இருக்காங்க. வீட்டுக்குப்போக இரவாகி விடும்!" என்று சொல்லியபடி பார்சல் ஒன்றும் வாங்கிக்கொண்டார்!
ஹோட்டல் பில் ரூபாய் 800 வந்தது. நான் உள்ளூர் என்பதால் அந்த ஹோட்டல் சர்வர் பில்லை என்னிடம் கொண்டுவந்து கொடுத்தார்.
அதற்குள் நீலமேகமும் அவரது மகள்களும் கையை கழுவிக்கொண்டு, "சார், நாங்கள் வருகிறோம்! மறுபடியும் சந்திப்போம்!" என்றபடி 'டாட்டா'' காட்டியபடி காரில் ஏறி போய்விட்டார்கள்!
நான் திகைத்து நின்றேன். கேஷியரிடம் சென்று விஷயத்தைசொல்லி, "என்னிடம் ரூபாய் 200தான் இருக்கிறது. இதோ வீட்டுக்குப்போய் பாக்கி பணத்தை எடுத்து வருகிறேன்!" என்றேன்.
அந்த கேஷியர் நன்கு தெரிந்தவர் என்பதால் தப்பித்தேன் . " என்ன நாமம் போட்டுட்டு போயிட்டாரா!" என்றபடி அவர் சிரித்தார்.
"ஆமாம், அவர் நாமம் போடுறவர்தான்!" என்றபடி பாக்கி பணத்தை எடுத்துவர ஸ்கூட்டரில் வீட்டை நோக்கி விரைந்துக் கொண்டிருகக்கிறேன்!
-சின்னஞ்சிறுகோபு,
சிகாகோ.