அன்பான பார்வையில்
ஆளுமைக் கவிதை!
அரவணக்கும் கைகளில்
ஆறுதல் சிறுகதை!
தழுவிச் சிலிர்க்கும்
போதினில் துளிப்பா!
விழியோடு விழிமோதும்
தருணத்தில் தொடர்கதை!
படபடக்கும் இமைகளின்
பரவசத்தில் பிள்ளைத்தமிழ்!
கண்ணயர்ந்து உறங்கும்
வேளையில் கலம்பகம்!
காணாது ஏங்கும்
காலத்தில் காப்பியம்!
ஆலிங்கன அருகாமையில்
ஆற்றாத கவிப்பெருக்கு!
தோள்சாய்ந்து மயங்குகையில்
இதிகாச உபகதை!
தெள்ளுதமிழ் என்னாளும்
காதலின் மொழியே!
-முகில் தினகரன்,
கோயமுத்தூர்