tamilnadu epaper

இந்திரன் அமிழ்தம் இயைவதாயினும்

இந்திரன் அமிழ்தம் இயைவதாயினும்


தனிச்சிறப்பைக் கொண்டவர்தாம் தமிழர் என்று

     தமிழ்க்கவிஞர் பகன்றாரே பொய்யும் அன்று

இனிக்கின்ற அமிழ்தெனினும் தானே உண்ணா

     ஈகைப்பண்பைக் கொண்டதனால் பகுத்தே உண்பர்

கனிந்திடும் சொற்களினால் இனிக்க பேசி

     கனிவான விருந்தோம்பல் விரும்பிச் செய்வர்

பனிக்கின்ற பக்குவத்தால் அன்பை வெல்லும்

     பலநூறு குணநலன்கள் திசைகள் சொல்லும்!


கலைகள்தாம் தமிழர்க்கே ஆணி வேராம்

     கவின்மிகுந்த சிற்பங்கள் பெருமை சாற்றும்

விலைமதிப்பே இல்லாத வீரம் காட்டி

     வியப்பூட்டும் காளைகளை அடக்கும் ஆற்றல்

அலைகடலைத் தாண்டியும் ஆட்சி செய்யும்

     அயராத உழைப்பிற்குச் சொந்தக் காரர்

நிலைக்கின்ற புகழாலே அகிலம் வென்று

     நீள்கின்ற சாதனைகள் எல்லாம் செய்வர்


மற்றவர்க்குக் குழியேதும் பறிக்க மாட்டார்

     மானத்தில் சமரசத்தைச் செய்ய மாட்டார்

கற்றவர்கள் சபைதனிலே ஒடுங்க மாட்டார்

     கண்டதற்கும் ஆசைப்பட்டு கலங்க மாட்டார்

குற்றங்கள் செய்யவே விரும்ப மாட்டார்

     குறிக்கோள்கள் ஏதுமின்றி வாழ மாட்டார்

நெறியதனில் பிறழ்ந்துநின்று பிழைக்க மாட்டார்

     நேசத்தில் குறையேதும் வைக்க மாட்டார்


சான்றாக வாழ்வதிலே தமிழர் உச்சம்

     சரித்திரத்தில் இடம்தந்து உலகம் மெச்சும்

ஊன்றுகோலாய் எண்ணங்கள் பெருமை சேர்க்கும்

     உறுதிகொண்ட நெஞ்சத்தால் அச்சம் போக்கும்

தான்தோன்றித் தனமாக வாழ்வ தில்லை

     தன்னலத்தைப் பெரிதென்று கொள்வ தில்லை

மேன்மைக்குத் தமிழர்கள் சிறந்த மூலம்

     மென்முறையால் ஈர்த்திடுவர்; வியக்கும் ஞாலம்!-


-கவிஞர் மு.வா.பாலாஜி

ஓசூர்.