tamilnadu epaper

பாதைகள் பயணங்கள்

பாதைகள் பயணங்கள்


-திருமாமகள்


 கடவுளை நம்புபவர்களுக்கு பயணம் செய்யும்போது நம்பிக்கை பாலமிடும். அதுவே வழி காண்பிக்கும். இதில் நாம் நிறைய விஷயங்களை கண்கூடாய் பார்த்திருப்போம். நிறைய பேர் சொல்லிக் கேள்வியும் பட்டிருப்போம்.

 அதற்கு என்ன காரணம்?

 நாம் நல்ல மனத்தோடு செய்யும் எந்த ஒரு நல்ல காரியமும், நாம் ஒரு ஆபத்தில் இருக்கும் போது, நம்மை காப்பாற்றும் என்பதே அது. உதாரணமாக நெருப்பு விபத்து, நம் கண்ணுக்கு, எதிரே இருக்கும் பள்ளத்தாக்குகள், வெள்ளம், நம்மை ஆயுதம் தாங்கி ஒருவர் குத்த வரும்போது, விபத்துகள், இவை எல்லாவற்றுக்குமே நமக்கு கடவுளால் கொடுக்கப்படும் உள் உணர்வின் எச்சரிக்கையில் நாம் நிச்சயமாக காப்பாற்றப் பட்டிருப்போம். அந்த உள் உணர்வை கொடுப்பது நாம் செய்த நல்ல செயலால் தான். அந்த சமயத்தில் கடவுள் வந்து நமக்கு சமிக்ஞை கொடுப்பார். அதில் நாம் நிச்சயம் காப்பாற்றப்படுவோம். இதில் இஞ்சித்தும் சந்தேகமில்லை.


 என்னுடைய வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவத்தை நான் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். மயிர் கூச்செறியும் சம்பவம் அது. ஒரு முறை ஒரு இடத்தில் மேம்பாலம் கட்டிக் கொண்டிருந்த பொழுது அந்தப் பகுதி பாலம் பாதியிலேயே விடப்பட்டிருந்தது என்பதை பெரும்பாலானவர்கள் அறியவில்லை. அங்கு அபாயம் என்று எழுதி வைக்கப்பட்டிருந்த சிவப்பு நிற கொடி கம்பியில் இருந்து உருவிக்கொண்டு காற்றில் பறந்து விழுந்து இருக்கிறது. அதை நாங்கள் கவனிக்கவில்லை. என்னுடைய மகளும் நானும் பைக்கில் சென்று கொண்டிருக்கிறோம். அன்று என்னவோ தெரியவில்லை எங்களுடைய பைக் மக்கர் செய்தது. வண்டியை விட்டு இறங்கி என் மகள் வண்டியை ஏதோ சரி செய்து கொண்டிருந்தாள். அப்பொழுது எதிரே ஒருவர் ஸ்கூட்டரில் வந்தார் வந்தார். மேடம் இந்த பாலம் பாதியிலேயே நிற்கிறது, நானும் விழாமல் தப்பித்தேன், நல்லவேளை சரியான சமயத்தில் உங்கள் பைக் ரிப்பேர் ஆகிவிட்டது, திரும்பி விடுங்கள், அங்கே பாலம் முடியாமல் தொங்கிக் கொண்டிருக்கிறது. அதல பாதாளத்தில் விழுந்து விடுவீர்கள் என்று அவர் சொன்னதும் அப்பொழுதுதான் கவனித்தோம் பாலம் அப்படியே தொங்கிக் கொண்டிருந்தது. அதற்கு கீழே 300 அடி ரோடு. நினைத்துப் பாருங்கள் விழுந்திருந்தால் என்ன நடந்திருக்கும் என்று யார் காப்பாற்றியது? நம்முடைய நற்சசெயல்கள் தான் காப்பாற்றி இருக்கிறது. அன்றிலிருந்து இன்னும் உறுதி எடுத்துக் கொண்டேன். ஒரு துளி கூட மனதில் கெட்ட எண்ணத்தை விதைக்கக் கூடாது என்று. சொல்லும்போது இன்னொரு விஷயமும் நான் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். மற்றவர்கள் சந்தோஷப்படும் பொழுது நீங்கள் துன்பப்படாதீர்கள், மற்றவர்கள் துன்பப்படும் போது நீங்கள் சந்தோஷ படாதீர்கள் இது இரண்டையும் வாழ்க்கையில் 

எப்போதும் கடைபிடிக்க வேண்டும்.


 விஷயத்துக்கு வருகிறேன். வாழ்க்கையில் நாம் எது செய்ய வேண்டும் எது செய்யக்கூடாது என்று சொல்லி நிறைய வளர்க்கப்பட்டிருக்கிறோம். என் தாய் தந்தையரே, நான் ஒரு தவறு செய்யும் போது இதுபோல் செய்யக்கூடாது என்று சொல்லுவார்கள். ஆனால் நாளடைவில் நம்முடைய பிரச்சனைகள் நம்மை சூழ்ந்து கொள்ளும் பொழுது நிறைய விஷயங்களை மறந்து விடுகிறோம். அப்படி மறக்க கூடாது என்பதற்காக இந்த கட்டுரை.


 ஒன்று மட்டும் புரிந்து கொள்ள வேண்டும் நாம் சில தவறுகளை செய்யவே கூடாது என்று நினைத்தபோதிலும் சந்தர்ப்ப சூழ்நிலை நம்மை செய்ய வைத்து விடுகிறது. அந்த தவறை செய்துவிட்டு பின் நம் மனம் முழுக்க குற்ற உணர்ச்சியை வைத்துக் கொண்டு, ஆஹா நாம் இப்படி செய்து விட்டோமே என்று கோவில் கோவிலாக ஏறுவதால் எந்த பிரயோஜனமும் இல்லை. அதற்கு நம் மனதை சுத்தமாக வைத்துக்கொண்டு யாருக்கும் எந்த கெடுதலும் செய்யாமல் மனதையே கோவிலாக வைத்துக் கொள்ளலாம். கோவிலுக்கு செல்லவில்லை என்றாலும் பரவாயில்லை.


 நம்முடைய பாதை பயணங்கள் எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும்.


**நம்மிடம் ஒருவர் அன்பு செலுத்துகிறார் ஏதோ சந்தர்ப்ப வசத்தால் அவருக்கும் நமக்கும் சண்டை வந்துவிடுகிறது. இந்த சம்பந்தப்பட்டவர் உங்களிடம் வந்து மன்னிப்பு கேட்கிறார். ஆனால் நம்முடைய அகங்காரம் என்ன சொல்கிறது. அன்பை புரிந்து கொள்ளாமல், மற்றவர்களை கதற விடுவது. அது ஒரு நல்ல பண்பு கிடையாது. அதேபோன்று ஒருபோதும் செய்யாதீர்கள். மன்னிப்பு கேட்பவன் மனிதன் மன்னிக்க தெரிந்தவன் மாமனிதன். 


** பகவத் கீதையில் சொல்லி இருப்பது என் நினைவில் வந்தது. வெறுக்க கூடாத உறவுகள் நான்கு தாய் தந்தை சகோதர சகோதரிகள். நாம் ஊருக்கு நல்ல பேர் எடுக்கலாம். இதோ வருகிறாரே இவரை மாதிரி ஒரு மக்களுக்கு சேவை செய்ய முடியாது அவ்வளவு பண்பாளர் என்றெல்லாம் பெயர் வாங்கி இருப்போம். ஆனால் வீட்டுக்குள் வந்தால் சகோதரன் வீடு கட்டினால் பொறாமை, சகோதரி வீட்டில் ஒரு நல்லது நடந்தால் பொறாமை, அம்மா அப்பா வளரும் வரைக்கும் தான் அதன் பிறகு அம்மா அப்பாவை மதிக்காமல் இருப்பது. மனைவியின் பேச்சை கணவன் கேட்டுக் கொண்டு அல்லது கணவன் பேச்சை மனைவி கேட்டுக்கொண்டு பெற்றோர்களை வெறுப்பதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. தாய் தந்தை இல்லாமல் நாம் இல்லை. சகோதர சகோதரிகளின் அன்பு இல்லாமல் நமக்கு வாழ்க்கை இல்லை. தான் ஆடாவிட்டாலும் தசை ஆடும் என்று ஒரு பழமொழி இருக்கிறது. சகோதர சகோதரிகளில் யாருக்காவது ஒரு ஆபத்து என்றால் இங்கே நம்முடைய இதயம் படபட என்று அடிக்கும் வயிறு கலங்கி எழும். அதுதான் ரத்த பாசம். " இரத்தம் தண்ணீரை விட அடர்த்தியானது" என்ற ஒரு பழமொழி" இருக்கிறது. அது 100% உண்மை. எனவே தயவு செய்து தாய் தந்தை சகோதர சகோதரிகளே ஒருபோதும் வெறுக்காதீர்கள். ரத்த உறவுகளை வீதியில் தவிக்கவிடுவது என்பது கடவுளுக்கே நம் மீது இரக்கம் இல்லாமல் போகும் அளவு செய்து விடும். கவனம் தேவை.


**அதே போல் ஒருவனின் உழைப்பை ஏமாற்றி அவர்களிடம் இருந்து பணத்தையோ அல்லது அவர்களுடைய உறவையோ பறிக்கும் பொழுது, ஒரு கட்டத்தில் தானாக உங்களுடைய வேகம் குறைந்து விடும் காரணம். கடவுள் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கிறார் என்பதை விட நம் மனசாட்சி கடவுளை விட பெரியதாக உன்னை இயக்கும். நாம் மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்டு திருந்தி, செய்த பாவத்துக்கு பரிகாரம் செய்வது ஆரம்பம் தான். அதை விட , நாம் அது போல் ஒரு தவறை வாழ்க்கையில் நினைக்கக் கூட கூடாது என்று உறுதியுடன் முடிவெடுக்க வேண்டும். நம் வள்ளுவ பெருந்தகையின் வாக்குப்படி "பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா பிற்பகல் தாமே வரும்" என்பதை மனதில் ஏற்றுக்கொள்ள வேண்டும். அதன் வழி நடக்க வேண்டும். 


** இன்றைய காலகட்டத்தில் நாம் அனைவருடன் பழக வேண்டியது மறுக்க முடியாத ஒன்று. அதற்காக ஒருவன் எல்லோரையும் ஏமாற்றுகிறான் என்று தெரிந்தும் 

அவன் எந்த அடாவடி செயலுக்கும் துணை இருப்பான் என்று தெரிந்தும் அவனுடன் பழக வேண்டிய அவசியம் இல்லை. பழங்காலத்தில் ஒரு பழமொழி இருக்கிறது "தாமரை இலை தண்ணீர் போல்"என்று. அது இலையின் அங்கும் எங்கும் ஓடும் ஆனால் ஒட்டாது, இலையும் அதை ஏற்றுக் கொண்றார் போல் இருக்கும் ஆனால் ஒட்ட விடாது. இது போன்ற ஒரு பழக்கம் எந்த வித பிரச்சனையையும் நமக்கு ஏற்படுத்தாது. 


** அடுத்து இப்பொழுது நாம் அன்றாடம் ஏதாவது ஒரு செய்தியில் பார்க்கிறோம், சூதாட்டம் எவ்வளவு ஆபத்தான முடிவை தருகிறது என்று. கையில் அலைபேசி இருக்கலாம் ஆனால், மனம் அலைபாயக்கூடாது. சூதாட்டங்களிலே ஏமாந்து தற்கொலை செய்யும் குடும்பத்தை நாம் பார்த்திருக்கிறோம். எந்த ஒரு விளையாட்டும் ஆபத்தை தரக்கூடாது. ஆபத்தை தருவது விளையாட்டு அல்ல. நம் குடும்பம் நம் பின்னணியில் இருக்கும் பொழுது நாம் கவனமாக இருக்க வேண்டும். அதுபோல போதை பழக்கம். போதையின் பாதையில் சென்றவன் மீண்டதே கிடையாது.

 எது நம்மை அழிக்க தயாராக இருக்கிறதோ அதை நாம் அழித்து விட வேண்டும். சூதாட்டம், போதை என்னும் விஷச்செடி நம்முள் விதைக்கப்படும் முன் அதை கிள்ளி எறிந்து விட வேண்டும். 


**அடுத்து பிறப்பால் ஒரு மனிதனை வகைப்படுத்துவதும், அவனை எல்லோரின் முன்னும் அவமானப் படுத்துவதும், சமுதாயத்தில் அவர்களை ஒதுக்கி வைப்பதும் மிகப் பெரிய குற்றமாகும். மனிதனுக்குள் இரண்டு பகுதி உண்டு. ஒன்று அறிவு மற்றொன்று ஆன்மா. அதில் மனிதர்களின் நிலை என்னவென்றே நமக்கு தெரிய பல வருடங்களாகும். அதற்குள் நாமே ஒரு முடிவு எடுத்து மற்றவர்களுக்கு தீங்கு செய்யக்கூடாது. பிறப்பால் ஒருவனை அவமானப்படுத்தக் கூடாது.


** இன்றைக்கு துரோகத்தை விட கொடிய நஞ்சு எதுவும் கிடையாது. ஒருவருக்கு நம்பிக்கை துரோகம் செய்யும் பொழுது அது அந்த மனிதனை அணு அணுவாக கொல்லும். ஒரு காலகட்டத்திற்கு பின் நம்பிக்கை துரோகம் செய்தவனை அது கொல்ல ஆரம்பிக்கும். இதுதான் உண்மை.



 முடிவாய் ஒன்று. நமக்கு ஒரு பக்கம் கடவுள் பாதை காட்டுகிறார். மறு பக்கம் அரக்க குணம் கொண்ட பாதை நம்மை வழிநடத்தத் தயாராக இருக்கிறது. சரியான பாதையை நாம் தான் தேர்ந்தெடுக்க வேண்டும். அதற்காகத்தான் நல்லவர்களுடைய பழக்கவழக்கங்கள், மூதாதையர்களின் அறிவுரைகள், நம்முடைய உண்மையான கடவுள் பக்தி இதைக் கொண்டு நல்லதை தேர்ந்தெடுப்பதே நமக்கு நல்லது. இன்னும் எதுவும் கெட்டு விடவில்லை. எதுவும் நடக்காமல் இருப்பதை விட தாமதமாக நடப்பது விரும்பத்தக்கது.