tamilnadu epaper

பாவச் செயல்

பாவச் செயல்


    ராமநாதனுக்கு சோதிடத்தில் அதிக நம்பிக்கையுண்டு.

நல்லது, கெட்டது எல்லாவற்றுக்கும் நாள், நட்சத்திரம் பார்க்கக்கூடியவர்.

வீட்டுக்கு வெளியே செல்வதாக இருந்தாலும் ராகுகாலம், எமகண்டம் பார்த்துத்தான் செல்வார்.

அதேபோன்று எதை 

தொடங்கினாலும், இவருடைய ஆஸ்தான சோதிடர் கணேசனிடம் ஆலோசித்த பின்பே அந்த வேலையில் ஈடு படுவார்.இது இவருடைய தொன்றுத்தொட்ட பழக்கமாகி விட்டது.

அன்று தனது மகளுக்கு எப்போது திருமணம் செய்யலாம் என்று கேட்பதற்காக சோதிடரைத் தேடி வந்திருந்தார்.

எப்போதும் போல சோதிடரைப் பார்ப்பதற்கு கூட்டமாகவே இருந்தது.

சோதிடர் கணேசன் சோதிடம் சொல்வதில் நல்ல அனுபவம் மிக்கவர். அதைவிட கைராசிக்காரர் என்ற சிறப்பும் அவருக்குண்டு என்பதால் தினசரி இவரைத் தேடி குறைந்தது இருபது பேராவது வந்து போவார்கள்.

இளம் வயதிலுள்ள கணவனும் மனைவியுமாக இரண்டு பேரும் சோதிடர் முன்பாக அமர்ந்திருந்தனர்.

சோதிடர் அவர்கள் இருவரையும் பார்த்து சோதிடம் சொல்லிக்

கொண்டிருந்தார்.

உங்க மகளுக்கு அடிக்கடி இப்படி உடல்நலக் குறைவு ஏற்படுவதற்கு காரணம், உங்க முன்னோர்கள் செய்த பாவச் செயல்களே ஆகும்.இதை சரிப்பண்ணினாத்தான் உங்க மகள் உடம்பு பூரண குணமாகும்.

அதுக்கு நாங்க என்னாங்க செய்யனும்? என்று கணவன் மனைவி இருவரும் கோரஸாக 

சோதிடரிடம் கேட்டனர்.

இதை சரிபண்ணனும்னா,

நான் சொல்ற கோவிலுக்கு குழந்தையை கூடவே அழைச்சிட்டு போய் பரிகாரம் செய்யனும்.

இப்படி செஞ்சா நாளடைவில குழந்தைக்கு குணமாகறதுக்கு வாய்ப்புகள் இருக்கு....என்று சொன்னதைக் கேட்டு 

சோதிடருக்குரிய தொகையைக்கொடுத்துவிட்டு இருவரும் விடை பெற்றுச் சென்றனர்.

எதேச்சையாக இராமநாதனைப் பார்த்த சோதிடர், சார் வாங்க...எப்ப வந்திங்க.. என்றார்..

நான் வந்து அரைமணி நேரம் ஆகுது.... நீங்க அவுங்களுக்கு சோதிடம் சொல்லிக் கிட்டு இருந்தீங்கல்ல....

அப்பவே வந்துட்டேன்...

மகளுக்கு திருமண யோகம் வந்துடுச்சான்னு பார்த்து சொல்லுங்க...!

சரி...ஜாதக நோட்டை எங்கிட்ட கொடுத்துட்டு போங்க.... நான் பார்த்து வைக்கிறேன்.நீங்க சாயங்காலமா வாங்க என்றார் சோதிடர்...

கணேசன், நான் ஒன்னு சொன்னா தப்பா நினைச்சுக்க மாட்டீங்கள....

சொலலுங்க... நான் தப்பா நினைக்க மாட்டேன்....

அதாவது இப்ப இரண்டு பேருக்கு சோதிடம் சொன்னீங்கல்ல....

அதை நான் கவனிச்சிட்டுதான் இருந்தேன்...குறிப்பா அவங்க குழந்தைக்கு உடம்பு சரியில்லாம இருக்கறதுக்கு காரணம், முன்னோர்கள் செய்த பாவம்தான் காரணம்னு சொன்னீங்க... இவங்களுக்கு மட்டுமல்ல...பல பேருக்கும் சோதிடர் எல்லாருமே இப்படித்தான் முன்னோர்கள் செய்த பாவம்னும், செய்வினை காரணம்னும் சொல்லிடறீங்க...

எந்தவொரு கஷ்டத்துக்கும் உங்க முன்னோர்கள் செய்த பாவம்னு "தாரக மந்திரமா" இதை சொல்லிகிட்டே வரீங்க..

அப்படிப் பார்த்தா 

உலகத்துல உடம்பு சரியில்லாதவங்க, வாழ்க்கையில கஷ்டப்பட்டுகிட்டு இருக்கறவங்க எல்லாருக்கும் , அவங்க முன்னோர்கள் செய்த பாவம்தான் காரணம்னு எடுத்துகிடலாமா?

இப்படி நீங்க முன்னோர்கள் செய்த பாவச் செயல்தான் காரணம்னு சொல்றதுனால,

உங்ககிட்ட சோதிடம் கேட்டுட்டு போற குடும்பத்தில் கணவன் மனைவிக்குள்ளே சண்டை சச்சரவு, வீண் குழப்பங்கள் ஏற்படுது .

கணவன் மனைவி இரண்டு பேரும் மாறி மாறி உங்க முன்னோர்கள் தான்

காரணம்னு ஒருத்தருக்கு ஒருத்தர் சண்டைப் போட்டுப்பாப்பாங்க...

இது என் குடும்பத்துலேயே நடந்துருக்கு....

அதனால தயவு செஞ்சு இனிமே சோதிடம் பார்க்க வரவங்ககிட்டே, முன்னோர்கள் செய்த பாவம்தான்! காரணம்னு தப்பித் தவறிகூட சொல்லிடாதீங்க....!அப்படி நீங்க சொல்றதுதான் எனக்கு " பாவச் செயலா" த் தெரியது...என்று இராமநாதன் சோதிடரிடம் சொல்லிவிட்டு புறப்பட்டு சென்றார்.

இராமநாதன் சென்றதும், சோதிடர் கணேசன் சிறிது நேரம் யோசனை செய்து பார்த்தார்.

இராமநாதன் சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை என

உணர்ந்தபடி..இனிமேல்

தப்பித்தவறி கூட அந்த வார்த்தையை பயன் படுத்தக்கூடாது என முடிவெடுத்து க் கொண்டார்.


ஆக்கம்:

தமிழ்ச் செம்மல் 

நன்னிலம் இளங்கோவன்,

மயிலாடுதுறை.