tamilnadu epaper

பிச்சை

பிச்சை

பாட்டியின் தட்டில் லொட்டென்று ஒரு ரூபாய் நாணயம் விழுந்தது. சற்று தள்ளி நின்று பார்த்தார் கதிரேசன். 'அஞ்சு ரூபா' என்று மனசு கணக்கு போட்டது.

 

கிழக்குக் கோபுர வாசல் அருகில் அரைமணியாய் காத்துக் கொண்டிருக்கிறார். வருவதாய்ச் சொன்ன நண்பரைத்தான் காணோம்.

 

'முன்னேபின்னே ஆனாலும் கட்டாயம் வந்துருவேன். பாலம் ரிப்பேர் நடக்கிறதால சுத்திகிட்டு வரணும்'

 

உட்கார இடமில்லை. நிற்பது அலுக்காமல் இருக்க வேடிக்கை பார்த்ததில் தான் அந்தப் பாட்டியின் செயல்கள்.

 

பக்கத்திலேயே சின்ன ஹோட்டல். 'ஒரு காபியாச்சும் குடிக்கலாம்' என்கிற நினைப்பைத் தள்ளி வைத்தார்.

 

பாட்டியின் கையில் இப்போது நசுங்கிய தண்ணீர் போத்தல். ப்ளக் ப்ளக்கென்று வெறும் வயிற்றில் நீர் இறங்கிய சத்தம் தெளிவாய்க் கேட்டது.

 

'காபி குடிச்சிட்டு ஒரு டிபன் பொட்டலம் வாங்கி பாட்டி கையில் கொடுத்தால் என்ன. கிழவியை அசத்திரலாம்'

 

யோசனையை உடனே செயலாக்கினார். 'ரெண்டு இட்லி கட்டுப்பா' என்றதும் 'பூரி சூடா இருக்கு' என்றார் சர்வர். 'சரி. அதையும் பார்சல் கட்டு' 

 

கொஞ்சம் கர்வமாய்த்தான் இருந்தது. மவராசன் என்று பட்டம் சூட்டுவாள்.

 

அருகில் போய் இரண்டு பொட்டலங்களையும் நீட்டினார். கை நீட்டி வாங்கிக் கொண்டவள் சுற்றுமுற்றும் பார்த்தாள். நகர இருந்தவரைப் பார்த்து சிநேகமாய் சிரித்தாள். 

 

"யாராச்சும் கொடுக்கிறாங்களா. ஒம்பங்கையும் எனக்கே கொடுத்திட்டியா. இந்தா நீயும் ஒண்ணு சாப்பிடுப்பா"

 

---------