tamilnadu epaper

புலி குகையில் புத்தர்

புலி குகையில் புத்தர்


தவம் செய்ய 

இடம் தேடி 

நாளெல்லாம் அலைந்தபின்னர்

நடந்தே 

வந்தடைந்தார் புத்தர்


வனப்புலி வாழும்

ஓர் தனி குகைக்கு;


அங்கே பசியோடு பதுங்கியிருந்த புலியொன்று

மாமிச வாசனையை நுகர்ந்தபடி 

நகர்ந்து முன்னேறியது!


தன் பசிக்கு 

நல் உணவு கிடைத்ததென்று!


“அங்கேயே நில்” என்றே 

ஆணையிடவில்லை புத்தர்!


கனிவுடனே அதன் கண்களை 

நோக்கினார் கருணையுடன்!


திகைத்து நின்றது விலங்கு!


ஒத்திப்போனது 

அதன் பசியுணர்வு!


அவர் புன்னைகையின் 

ஒளியே திரையாய் நின்றது

இடையில்!


புலியால் அவரை கொல்ல 

முடியவில்லை!


ஆயின் தன் பசியையும்

அதனால் 

வெல்ல முடியவில்லை!


“என் வினா ஒன்றுக்கு 

விடையளித்தால் உனக்கு

நான் இரையாகிறேன்” 


பதிலின்றி 

நீ தோற்பின்

என் வழியை 

நீ தொடர நேருமென்றார்!


“அப்படியே” என்ற புலி 

ஆவலுடன் கேட்டது கேள்வி

என்னவென்று!


“ஒரு முறை உண்டால் பசியே தோன்றாத உணவு 

எதுவென்று சொல்”

அந்த உணவை 

நான் தருகிறேன் உனக்கு!


இல்லையெனில் நானே 

உணவாகிறேன் உனக்கென்றார்!


பிறந்தது முதல் 

அன்று வரை 

பல நூறு உயிரை தின்றும்

அடங்காத பசியுடன் அலைந்த புலி

யோசித்து யோசித்து 

பதிலின்றி

தோல்வியை ஏற்றது இறுதியிலே!


"வயிற்று பசிக்கு இரைவேண்டும்;

ஞான பசிக்கு 

இறை வேண்டும்!


இறையோடு கலந்து உறவாடப்போகிறேன்

ஞானப் பசியாறப்போகிறேன்;


உடன்பட்டால் உடன் பிறப்பாய் நீயும் வா” என்றார் புத்தர்!


உண்மையை 

உணர்ந்த புலியும் 

உரிமையுடன் இணைந்துக்

கொண்டது 


புத்தனின் மோனதவத்தில்!


புலி குகை 

புத்தனின் தவகுகையானது 


புலியின் விமோசன குகையுமானது!


-ரேணுகாசுந்தரம்