tamilnadu epaper

யதார்த்தங்களின் பயணத்தில்

யதார்த்தங்களின்  பயணத்தில்


    அந்தக் கவிதைப் புத்தகத்தை முழுவதுமாய்ப் படித்து முடித்த சுந்தர நிலவன், "ச்சை... இதெல்லாம் ஒரு கவிதையா?... இவனெல்லாம் ஒரு கவிஞனா?... கையில காசு இருக்குதுன்னு கண்டதையெல்லாம் எழுதிப் புத்தகமா போட்டு சமூகத்தைக் கெடுத்திட்டிருக்கான்!"என்று உரத்த குரலில் திட்டிக் கொண்டே அந்தக் கவிதைப் புத்தகத்தை பக்கத்திலிருந்த குப்பைத் தொட்டிக்குள் வீசினான்.


    சத்தம் கேட்டு வந்த அவன் மனைவி அவன் புத்தகத்தை வீசுவதை வினோதமாய்ப் பார்த்தாள்.


   "இப்பவே போய் அந்த டுபாக்கூர் கவிஞனை நாக்கைப் பிடுங்கிக்கற மாதிரி நாலு கேள்வி கேட்டுட்டு வர்றேன்!" ஆவேசமாய்த் தெருவில் இறங்கினான் சுந்தர் நிலவன்.


  "கவிஞர் ராஜமுத்து" என்ற போர்டைத் தாங்கிய கேட்டைத் தள்ளி கொண்டு உள்ளே நுழைந்தான் சுந்தரநிலவன்.


  போர்டிகோவில் அமர்ந்து எதையோ எழுதிக் கொண்டிருந்த கவிஞர் ராஜமுத்து, அவனைப் பார்த்து


 "வாப்பா உட்காரு... உங்களை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கு சட்டுனு ஞாபகம் வரலை!" ராஜமுத்து சொல்ல,


  "நானும் ஒரு கவிஞன் தான் சார்!... ஆனால் உண்மையான கவிஞன் சார்!" பற்களைக் கடித்துக் கொண்டு சொன்னான் சுந்தரநிலவன்.

   "உங்க பேரு?'.

   "சுந்தர நிலவன்"

   'கரெக்ட்... கரெக்ட்... இந்தப் பேரை அடிக்கடி பத்திரிகைகள் பார்க்கிறேன்!... உங்கள் கவிதைகள் சிலவற்றைக் கூட வாசிச்சிருக்கேன்!... ரொம்ப நல்லா எழுதுறீங்க... அருமையான வீச்சு இருக்கு உங்க எழுத்துல!".


  "ஹி..ஹி.. !"சுந்தர் வழிந்தான்.


  "ஆமாம்... உங்கள் கவிதைகளைத் தொகுத்து புத்தகம் போட்டிருக்கீங்களா?" ராஜமுத்து கேட்க.


  "இல்லை சார்... அந்த அளவுக்கு எனக்கு வசதி இல்லை சார்... வயித்துப் பாடே பெரும்பாடா இருக்கு சார் எனக்கு!" என்றான் சுந்தரநிலவன்.


   "எத்தனை கவிதைகள் எழுதி வச்சிருக்கீங்க?" கேட்டார் ராஜமுத்து.


  "அது ஒரு 300 கவிதைகளுக்கும் மேல் எழுதி வெச்சிருக்கேன் சார்!"


  "ஓகே... அதுகளை என்கிட்டக் குடுங்க... எனக்கு தெரிஞ்ச ஒரு பப்ளிஷர்ஸ்ல குடுத்து என் செலவுல... அதை புத்தகமாப் போட்டுத் தரேன்"


   வரும் போது இருந்த ஆவேசம் சுத்தமாய் தணிந்திருந்தது சுந்தரநிலவனுக்கு.


  "சார்... அது வந்து உங்களுக்கு எதுக்கு வீண் செலவு"


  "அய்யய்ய... உங்களைப் போன்ற திறமை வாய்ந்த கவிஞர்களை வெளி உலகுக்கு கொண்டு வரணும்".


  " நன்றி சார்... நாளைக்கே கொண்டு வந்து தரேன் சார்!" சுந்தரநிலவன் எழ.


   "ஓ.கே... நீங்க எதுக்கு வந்தீங்க?ன்னு சொல்லவே இல்லையே"


   "அது வந்து இன்னைக்கு காலையில உங்களோட "செல்லரித்த மானுடம்" கவிதைப் புத்தகம் வாசித்தேன்... சிலிர்த்துப் போனேன்... அதுக்காகப் பாராட்டத்தான் வந்தேன்"


  "ரொம்ப நன்றி நன்றி'


  வீட்டிற்குத் திரும்பிய சுந்தரநிலவன் குப்பை கூடையில் கிடந்த அந்த கவிதைப் புத்தகத்தை எடுத்து அலமாரியில் வைப்பதை வினோதமாய்ப் பார்த்தால் அவன் மனைவி.



-முகில் தினகரன்,

கோயமுத்தூர்