லேசாய் மேடு கண்டிருந்த தன் வயிற்றை தடவிக் கொண்டே வேக வேகமாய் மருத்துவமனை நோக்கி நடந்தாள் புவனா.
"ப்ச்.... குடும்பம் இருக்கிற பொருளாதாரம் நிலைமையில் இப்போதைக்கு குழந்தை வேண்டாம்.... நாமே வயித்துப் பாட்டுக்குப் படாத பாடுபடறோம்... இதுல குழந்தை வேறயா?... வேண்டவே வேண்டாம்!... எப்பக் கை நிறைய சம்பாதிக்கிறோமோ அப்பப் பெத்துக்குவோம்" என்று முடிவு பண்ணி நானும் என் புருஷனும் சர்வ ஜாக்கிரதையாய் இருந்தும் ஏமாந்துட்டோமே?" அவள் மனம் அரற்றியது.
போகும் வழியில் சிலர் கும்பலாய் நின்று எதையோ வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க, ஆர்வம் மிகுதியில் புவனாவும் அந்த கும்பலில் நுழைந்து பார்த்தாள்.
ஒரு கோழி தன் முட்டைகளைக் கவ்வ வந்த பெரிய பாம்புடன் மூர்க்கமாய்ச் சண்டையிட்டுக் கொண்டிருந்தது.
சில நேரம் பாம்பின் கை உயர கூட்டத்தினர் "த்சொ... த்சொ" என்று பரிதாபம் காட்டினர். ஆனால் அடுத்த வினாடியே கோழி தன் மூர்க்கத்தை அதிகரித்துக் கொண்டு பாம்பைத் தன் அலகால் கொத்திக் கிழிக்க "ஆமாம்... அப்படிப் போடு" என்று ஆர்ப்பரித்தனர்.
அப்போது எங்கிருந்தோ பறந்து வந்து சண்டைக்கு நடுவில் புகுந்தது ஒரு சேவல்.
அனேகமாய் அதுதான் அந்த கோழியின் கணவராகவும் முட்டைகளுக்குக் காரண கர்த்தாவாகவும் இருக்கும் போல, வந்த வேகத்தில் தன் கோழிக்குத் துணையாக பாம்புடன் சண்டையிட்டது சேவல்.
பொண்டாட்டியும், புருஷனுமாகச் சேர்ந்து அந்தப் பாம்பை கொத்தி கொத்தியே கொன்று தங்கள் முட்டைகளைக் காப்பாற்றி விட கூட்டம் கைதட்டி மகிழ்ந்தது.
அந்த வினாடியில் புவனாவின் மூளைக்குள் ஒரு "ஃப்ளாஸ்" அடித்தது.
"ச்சே.... ஒரு சாதாரண பறவை இனம் முட்டைக்குள் இருக்கும் தங்கள் சிசுவைக் காப்பாற்ற பெரிய பாம்புடன் சண்டையிட்டு... பாம்பைக் கொன்று முட்டைகளைக் காக்கும் போது ஆறறிவு படைத்த மனித இனமான நானும் என் புருஷனும் எங்கள் சிசுவை வறுமையின் காரணமாய் அழிக்கப் போகிறோமே.... இது முறையா?... அந்தக் கோழிக்கும் சேவலுக்கும் பாம்பு எதிரி... எனக்கும் என் புருஷனுக்கும் வறுமைப் பாம்பு எதிரி.... நாங்கள் முயன்றால் வறுமையை தீர்க்க முடியாதா?... என் வயிற்றில் இருக்கும் சிசுவை காப்பாற்ற முடியாதா?..."
மருத்துவமனைக்குச் சென்று தன் கருவை கலைக்கும் எண்ணத்தை கைவிட்டு விட்டு, வீட்டை நோக்கித் திரும்பி நடந்தாள் புவனா.
அவளையுமறியாமல் அவள் கை அடி வயிற்றைத் தடவியது.
"ரொம்பத் தேங்க்ஸ்ம்மா" என்றது உள்ளிருந்த சிசு.
(முற்றும்)
முகில் தினகரன், கோயம்புத்தூர்.