முடக்கத்தான் கீரையின் மருத்துவ குணங்களைப் பற்றி நான் ஓரளவு அறிந்திருந்தேன். எங்கள் பூர்வீக கிராமத்தில் மட்டுமல்ல, சென்னை புறநகரின் வீட்டுமனை வேலிகளிலும் நிறைய படர்ந்து இருக்கிறது. அவ்வப்போது பறித்து வந்து அரிசி உளுந்துடன் சேர்த்து அரைத்து தோசை சுட்டு சாப்பிடுவது வழக்கம். இப்போது நலம் தரும் மருத்துவம் பகுதியில் இந்த கீரையின் முழு பயன்களையும் அறிந்தபோது, இந்தியா வந்ததும் இதை இன்னும் நிறைய உணவில் சேர்த்துக்கொள்ளவேண்டும் என்ற ஆவல் எனக்கு ஏற்பட்டிருக்கிறது.
கணவன் திருடனாக இருந்ததால் கிட்டத்தட்ட அனாதை போல இருந்த அமுதாவுக்கும், குழந்தை ரோஜாவுக்கும் சாந்தி உருவில் ஒரு நல்ல வாழ்க்கை அமைந்தது மகிழ்ச்சியாக இருந்தது. கடைசியில் ஆதரவு தந்த அந்த சாந்தியின் தம்பிதான் அமுதாவின் கணவன் என்ற எதிர்பாராத முடிவுடன் சிறப்பாக இருந்தது ராதா பாலுவின் 'ரோஜா' என்ற சிறுகதை!
ஒவ்வொருவரும் ஒவ்வொரு வேலைப் பார்த்துதான் காலத்தை ஓட்டவேண்டியிருக்கிறது. கே.பானுமதி நாச்சியாரின் 'சித்தாளின் முதல் நாள்' என்ற சிறுகதை ஒரு சித்தாளின் முதல் நாள் அனுபவத்தை சொல்வதுடன், சித்தாள் வேலைக்கு செல்லும் பெண்களின் சிரமங்களையும் சொல்லியது.
'வாழ்ந்தே தீருவோம்' என்ற ஹரணியின் தொடர்கதை மிக முக்கியமான அடுத்த கட்டத்திற்கு நகர்ந்திருக்கிறது. சரவணனை நம்பி வீட்டைவிட்டு, துர்க்கையை வணங்கிவிட்டு செல்லும் வள்ளியம்மையின் நிலமை அடுத்து என்னவாகுமோ என்ற கவலை எனக்கு ஏற்படுகிறது.
சுதந்திர இந்தியாவில் மாநிலங்கள் பிரிவில் கேரள மாநிலத்துடன் இருந்த குமரி மாவட்டம், பிறகு தமிழகத்தோடு இணைந்ததற்கு காரணமாக இருந்தவர்களின் போராட்டங்களைப் பற்றிய கட்டுரை சிறப்பு. இதைப்போன்ற தெரியாத பல தகவல்களை விரிவாகவும் தெளிவாகவும் தரும் தமிழ்நாடு இ. பேப்பரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
'எச்சில் கொள்ளி' என்ற ஹரணியின் சிறுகதை தொகுதிக்கான நூல் விமர்சனம் படித்தேன். இந்த நூல் விமர்சனம் பல்வேறு சிந்தனைகளுடன் வாழ்க்கையின் பல்வேறு கோணங்களை உணர்வுகளை பிரதிபலித்தது. 'புத்தகம் போடும் செயல் கனவுதான். நல்ல சகிருதயனின் இன்றைய நிலை இதுதான். ஆனால் கலைஞனின் பேனா ஒரு போதும் ஓய்வதில்லை' போன்ற வரிகள் சிந்தனையில் நிற்கின்றன. இந்த புத்தகத்தின் விமர்சகர் எழுத்தாளர் நா.விச்வநாதன், இந்த விமர்சனத்தை ஒரு இலக்கிய கட்டுரையாக தந்திருப்பது பாராட்டுக்குரியது.
புதுக்கவிதை பகுதிகள், பல்சுவை களஞ்சியம், வாழ்வு தரும் ஆரோக்கியம், செய்திகளை தந்திருக்கும் விதமென்று தமிழ்நாடு இ.பேப்பர் எல்லாவகையிலும் தனித்தரத்துடன் திகழ்கிறது.
-சின்னஞ்சிறுகோபு,
சிகாகோ.