கே.பானுமதி நாச்சியார் 'கண் திருஷ்டி'யை பற்றி மிகச்சிறப்பாக எழுதியிருக்கிறார். படிக்கும்போதே என் கண்ணே பட்டுவிடும்போல இருந்தது! முதலில் எழுதிய இவர் திருஷ்டி சுற்றிப் போட்டுக்கொள்ள வேண்டியதுதான். சில சமயம் திருஷ்டிப் பூசணிக்காய்களை சுற்றி நடுரோட்டில் போட்டு உடைத்துவிட்டு, அதை அப்புறப்படுத்தாமல் அப்படியே போடுவதும், அதனால் டூவீலரில் செல்பவர்கள் விபத்துக்குள்ளாவதும் நாம் கேள்விப்பட்ட ஒன்றுதான். அப்படி செய்யக்கூடாது என்று இவர் அறிவுரை சொல்லியிருப்பது பாராட்ட வேண்டிய ஒன்றாகும்.
இந்த காலத்தில் பலர் பெற்ற தாய், தந்தைக்கே சோறு போடாமல் திண்டாட விடுகிறார்கள். பிரபாகர் சுப்பையாவின் 'அப்பாவுக்காக...' சிறுகதையில் குமார் தனது தந்தைக்காக பார்த்துப் பார்த்து குறையில்லாமல் செய்வது பெருமைப்படும் விதத்தில் இருக்கிறது. இந்த கதையில் குமாரின் மனைவியும் நல்ல பெண்மணியாக அமைந்திருப்பது குறிப்பிடதக்க ஒன்றாகும்.
நெல்லை குரலோனின் 'சிங்கப்பூர் பயணம்' கட்டுரை சிறப்பாக இருந்தது. அவர் கல்கி பத்திரிகையின் போட்டியில் வெற்றிப்பெற்று சிங்கப்பூர் சென்றது மகிழ்ச்சிக்குரிய நல்ல விஷயம். சுமார் ஐம்பதாயிரம் ரூபாய் செலவில் சிங்கப்பூர் போய் சுற்றிப் பார்த்துவிட்டு வருவதைவிட இரண்டு ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு உதவலாமே என்று இவரும் இவர் மனைவியும் நினைத்தது அற்புத குணம்.
நான் சிறுவயதில் பொ. திரிகூடசுந்தரத்தின் புத்தகங்கள் சிலவற்றை நூலகத்தில் படித்திருக்கிறேன். இவர் சாதி மறுத்து சுயமரியாதை திருமணம் செய்துக்கொண்டது, தனது வழக்கறிஞர் தொழிலைக் கைவிட்டு ஒத்துழையாமை இயக்கத்தில் கலந்துக்கொண்டது, காந்திய இயக்கத்தில் கலந்துக்கொண்டு சிறைசென்றது, காந்திய இயக்கத்தை வலுப்படுத்தும் பணிகளை மேற்கொண்டது என்று பல தகவல்களை இப்போதுதான் தமிழ்நாடு இ. பேப்பர் மூலம் தெரிந்துக்கொண்டேன். தினம் ஒரு தலைவர்கள் பகுதி நமது நாளிதழின் சிறப்பு வாய்ந்த பகுதிகளில் முக்கியமான ஒன்றாகும்.
பல்சுவை களஞ்சியத்தில் வெளியான பெரியவர்களிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்கள் பத்தும் பயன் மிக்கது. பலருக்கு நல்வழிக்காட்டக்கூடியதாகும்.
தினந்தோறும் யூடியூப் பார்க்கும் நான், யூடியூப்பிற்கு ஒரு தினமாயென்று ஆச்சரியத்துடன் படித்தேன். வி.பிரபாவதியின் இந்த கட்டுரை யூடியூப் தோன்றிய காலத்திலிருந்து இன்றுவரை அதன் வரலாற்றை சுருக்கமாக சொல்லியிருந்த விதம் பாராட்டும்படி இரூந்தது.
-சின்னஞ்சிறுகோபு,
சிகாகோ.