குடியரசு தலைவருக்கு யாரும் உத்தரவிட முடியாது என்று துணை ஜனாதிபதி பேசியிருப்பது சர்ச்சைக்குரியதாகி இருக்கிறது.
ஜனநாயகத்தின் தூண்கள் மூன்று என்றும் அவை சட்டமன்றங்கள் மற்றும் பாராளுமன்றம், நிர்வாகத்துறை, நீதித்துறை
என்று சமூக பாடத்திலேயே பல காலமாக பள்ளியில் கற்றுத் தருகிறார்கள்.
ஜனாதிபதி தேர்ந்தெடுக்கப்படும் முறைகள் மற்றும் பதவிக்காலம் ஆகியவை எழுதப்பட்ட சட்டமாக இருக்கும்போது அவரது அதிகாரங்களும் வரையறுக்கப்பட வேண்டியது அவசியம் என்பதை அனைவரும்
அறிவார்கள்.
அரசியல் அமைப்பை பாதுகாக்கும் கடைசி புகலிடம் நீதிமன்றங்களே !
சீனாவின் மீது இஷ்டத்துக்கு வரி விதித்திருக்கும் டிரம்ப் நிர்வாகத்தை பற்றி சீனா கொஞ்சம் கூட அலட்டிக் கொள்ளவில்லை. பதிலுக்கு பிற நாடுகளுடனான தன்னுடைய வர்த்தக தொடர்புகளை அது விரிவுபடுத்திக் கொண்டிருக்கிறது.
உலகமே சொன்னாலும் நான் கேட்க மாட்டேன் என் வழி தனி வழி என்று இஸ்ரேல் காசா மீது தொடுத்த போரை தொடர்ந்து வருகிறது.
முழு காஸா பகுதியையும் கைப்பற்றி தன்னுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்ற ஆக்கிரமிப்பு மனப்பான்மை தான் இஸ்ரேலுக்கு இருப்பதாக தோன்றுகிறது.
ராணுவ ஆட்சி நடக்கும் மியான்மரில் புத்தாண்டை முன்னிட்டு கைதிகள் 4900 பேருக்கு மன்னிப்பு அளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
இது கல்லுக்குள் ஈரம் இருப்பதைப் போன்றது.
அரசு படையினரை எதிர்த்து போரிடும் ஜனநாயகத்தை மீட்கும் படையினர்களுக்கும் அரசு படையினர்களுக்கும் மியான்மரில் போர் தொடர்கிறது.
மேற்கு வங்கத்தில் மாணவர்களின் தேர்வு காலத்தையும் எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டு புதிய ஆசிரியர்கள் நியமிக்கப்படும் வரை டிஸ்மிஸ் செய்யப்பட்ட ஆசிரியர்களை கொஞ்ச காலத்துக்கு வேலை பார்க்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்திருக்கிறது.
திடீரென்று பல்லாயிரம் ஆசிரியர்களை டிஸ்மிஸ் செய்தால் படிக்கும் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி விடும் என்பது கவலைக்குரிய விஷயமாகும்.
குழந்தை இல்லாததால் தான் கர்ப்பமாக இருப்பதாக கணவன் வீட்டாரிடம் 9 மாதமாக நாடகமாடிய
டில்லிப் பெண்மணி ஒருவர்
மருத்துவமனையில் இருந்து ஒரு குழந்தையை திருடி வீட்டுக்கு கொண்டு போயிருக்கிறார். காவல்துறையிடம் மாட்டிக் கொண்டு ஜெயிலில் இருக்கிறார். அவரது ஒன்பது மாத நாடகம் முடிவுக்கு வந்துவிட்டது. செய்தது கிரிமினல் குற்றமாக இருந்தாலும் அந்தப் பெண்ணின் மீது இரக்கம் தான் மேலிடுகிறது.
-வெ.ஆசைத்தம்பி
தஞ்சாவூர்