tamilnadu epaper

வாசகர் கடிதம் (வெ.ஆசைத்தம்பி )-25.04.25

வாசகர் கடிதம் (வெ.ஆசைத்தம்பி )-25.04.25


பஹல்காம் தாக்குதலுக்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று பாகிஸ்தான் கூறுகிறது.

இது நம்பும்படியாக இல்லை. முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல் இருக்கிறது. 


நாங்கள் எந்த காலத்திலும் தீவிரவாதத்தை ஆதரிக்கவில்லை என்று வேறு பொய் சொல்கிறது. பாகிஸ்தான் அரசின் ஐ எஸ் ஐ அமைப்பால் ஆதரவு அளிக்கப்பட்டு வரும் ஒரு தீவிரவாத இயக்கம் இந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்று இருக்கிறது என்பதை பாகிஸ்தான் அரசு மறந்துவிட்டது.


காலம் காலமாக தீவிரவாத குழுக்களுக்கு பயிற்சி அளித்து அவர்களை தாக்குதல் நடத்த ஊக்குவித்து இந்திய எல்லைக்குள் ஊடுருவ செய்து வருவது பாகிஸ்தான் என்பது உலகறிந்த விஷயம்.


ஆறு மணி நேரத்தில் காஷ்மீரில் இருந்து 3337 பேர் விமானத்தின் மூலம் வெளியேற்றப்பட்டு இருக்கிறார்கள். இனி காஷ்மீரின் சுற்றுலா பொருளாதாரம் அதோகதியாகிவிடும். படகு வீடுகள் ஆளின்றி மிதக்கும். 

குதிரைகளுக்கு உணவளிக்க கூட வருமானம் கிடைக்காத நிலை ஏற்படலாம். உடலாலும் வாழ்க்கையாலும் இந்தியனாகவும் உள்ளத்தால் அடுத்த நாட்டிற்கு ஆதரவாளராகவும் விளங்குபவர்கள் இதை உணர வேண்டும்.


டிரம்ப் நிர்வாகத்தில் இருந்து எலான் மஸ்க் வெளியேறுவதாக கூறியிருக்கிறார். அரசின் ஒரு அங்கமாக அவர் இருப்பதால் அவரது நிறுவன பங்குகள் சரிவை சந்தித்து

வருவதை தடுப்பதற்காகத்தான் இந்த நடவடிக்கை.


இதிலிருந்து ட்ரம்பின் அதிரடி நடவடிக்கைகளுக்கு அமெரிக்க மக்களிடம் எவ்வளவு எதிர்ப்பு இருக்கிறது என்பதை உணர முடிகிறது,


ட்ரம்பின் அதிரடி நடவடிக்கைகளை அவரும் அவரது குடும்பத்தினரும் வேண்டுமானால் விரும்பி ரசிக்கலாம். உலகமே

அவரது திட்டங்களை அருவெறுப்புடன் பார்க்கிறது.


சிவகங்கை மாவட்டத்தில் ஒரு பள்ளியில் மாணவியை ஒருநாள் 200 தோப்பு கரணமும் மறுநாள் நான் 400 தோப்புக்கரணமும் போட செய்த ஆசிரியைக்கு

 மனித உரிமை ஆணையம் 2 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து இருக்கிறது. அபராத தொகையை மாணவிக்கு இழப்பீடாக வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறது.


 சிறிது கூட இரக்கமோ மனிதாபிமானமோ கருணையோ இல்லாத இந்த ஆசிரியை மனித உருவில் உலவும் மிருகமாகவே கருதப்படுவார்.


 -வெ.ஆசைத்தம்பி 

தஞ்சாவூர்