tamilnadu epaper

வார்த்தைகளின் வலிமை

வார்த்தைகளின் வலிமை


வெறும் வார்த்தைகள்தானே என்ற அலட்சியம் வேண்டாம். வார்த்தைகளால் வாழ்க்கையை மாற்ற முடிகிறதோ இல்லையோ மனித மனங்களை ஆள முடியும் என்பது என் தீர்மானமான கருத்து. 


மருத்துவர் சொல்லும் ‘கவலைப்படாதீங்க... உயிருக்கு ஒன்றும் பாதகமில்லை’ என்ற ஒற்றை வரியும்...


பிரசவ வார்டுக்கு வெளியே தவித்துக்கொண்டிருப்பவரிடம் ‘தாயும் சேயும் நலம்’ என்று நர்ஸ் சொல்லும் ஒருவரி மந்திரமும்... 


‘இந்த குருபெயர்ச்சி வந்தால் உங்கள் பிரச்சனை எல்லாம் காணாமல் போய்விடும்’ என்று ஜோதிடம் சொல்லும் ஜோதிடரின் மேஜிக் வரியும்... 


‘நல்ல வேலை கிடைச்சு, மனம்போல திருமணமும் முடிந்து எல்லா வளமும் பெற்று சந்தோஷமாக இருக்கணும்’ என்று வாழ்த்தும் பெரியவர்களின் ஒருவரி ஆசியும்...


எப்படி நம் மனதுக்குள் உறங்கிக்கொண்டிருக்கும் அல்லது கொஞ்சம் கொஞ்சமாய் மடிந்துகொண்டிருக்கும் அணுக்களை துளைத்து உள்ளே சென்று அவற்றை உயிர்பெற செய்து உள்ளத்துக்கு மட்டுமில்லாமல் உடலுக்கும் புத்துணர்வு கொடுக்கின்றனவோ, அதுபோலதான் நம்பிக்கை வார்த்தைகள்தான் பலரது வாழ்க்கையை மலர வைத்துக்கொண்டிருக்கின்றன.


நாசமா போ, எக்கேடு கெட்டு போ, ஏன் என் உயிரை வாங்குகிறாய், எனக்கென்று வந்து வாய்த்திருக்கிறாயே இதுபோன்ற வசவு வார்த்தைகளை இன்முகத்துடன் யாரால் உள்வாங்கிக்கொள்ள முடியும்? 


‘வெறும் வார்த்தைகள்தானே...’ என்று ஒதுக்கிவிட்டு போக வேண்டியதுதானே. முடிகிறதா நம்மால். அப்படி நம்மைப் பார்த்துச் சொன்னவரிடம் எதிர்வினையாற்றத்தானே முயற்சிக்கிறோம்.


‘மைண்ட் யுவர் வேர்ட்ஸ்’ என்று குறைந்தபட்ச எதிர்ப்பையாவது காட்டுவோம் தானே.


எப்படி எதிர்மறை வார்த்தைகள் நம்முள் சென்று நம்மை இம்சிக்கிறதோ, அதுபோலவே நேர்மறை வார்த்தைகள் நமக்குள் நந்தவனத்தையும் அதன் வாசத்தையும் நிச்சயம் காட்டும்.


வாழ்க்கையில் எல்லா செல்வங்களும் இருந்தும் ஆதரவாக பேச ஆளில்லாமல் தவித்துக்கொண்டிருப்பவர்களுக்கு மட்டுமே வார்த்தைகளின் வலிமை புரியும். தவித்த வாய்க்கு தண்ணீர் கிடைக்காதா என பாலைவனத்தில் ஏங்குகின்ற வரண்ட மனோநிலை அது. 


ஒருநாள் தெருவில் நடந்து சென்றுகொண்டிருந்த இலக்கிய மேதை லியோ டால்ஸ்டாயிடம் பிச்சைக்காரர் ஒருவர் எதிர்பட்டு ‘ஐயா பசிக்கிறது உதவி செய்யுங்கள்...’ என்று கேட்டார். 


அந்த மேதை மிகவும் கனிவான குரலில். ‘சகோதரனே, உன் பசியை போக்குவதற்கு உணவோ அல்லது பணமோ இப்போது என்னிடம் இல்லையே’ என்ற வருந்தும் குரலில் சொன்னார். 


பிச்சைக்காரர் முகமெல்லாம் மலர்ச்சியுடன் நன்றி சொன்னார்.


அவரது பூரிப்பைப் பார்த்த டால்ஸ்டாய், ‘நான் உங்களுக்கு எந்த உதவியும் செய்யவில்லையே. எதற்காக நன்றி?’ என்று கேட்டார் வியப்பாக.


‘ஐயா என்னை யாருமே மனிதனாக மதித்து பேசியதில்லை. கண்களாலேயே அருவருப்பைக் காட்டி விரட்டுவார்கள். ஆனால் நீங்களோ என்னை சகோதரனே என அழைத்து அன்புடன் பேசினீர்கள். இதுநாள் வரை எனக்குக் கிடைக்காத அன்பு இது... வயிறு நிரம்பிவிட்டது ஐயா...’ என்று மீண்டும் நன்றி சொல்லிவிட்டு நகர்ந்தார் அந்த பிச்சைக்காரர். 


வார்த்தைகளின் வலிமை புரிகிறதா?



-முனைவர் பாலசந்தர் மண்ணச்சநல்லூர்