tamilnadu epaper

வாழ்க்கைப் பாடம்.

வாழ்க்கைப் பாடம்.


ஹலோ கோகிலா...நல்லா இருக்கீயா....

நேத்திலேருந்து உனக்கு போன் போட்டு கிட்டே இருக்கேன்....லயனே கிடைக்கல....

சுமதி... நான் நல்லா இருக்கேன்...நீ நல்லா இருக்கீயா...வீட்டுல எல்லாரும் நல்லா இருக்காங்களா....!

போன் கொஞ்சம் சரியாயில்ல....சரி பண்ணனும்....என்று

பதிலுக்கு கோகிலா சுமதியிடம் பேசினாள்..

சுமதியும், கோகிலாவும் பள்ளிப் பருவத்திலேருந்தே பால்ய சிநேகிதிகள்.இருவரும் பள்ளியிலும்,கல்லூரியிலும் ஒன்றாகப் படித்தவர்கள்.திருமணம் ஆனதும் கோகிலா தஞ்சாவூருக்கும், சுமதி கோயம்புத்தூருக்கும் புகுந்த வீட்டுக்கு போய்விட்டார்கள்.

இடையில் சில வருடங்கள் தொடர்பு இல்லாமல் நட்பை த் தொடரமுடியாமல் இருந்தார்கள்.

கைபேசி வந்த பிறகு, தொடர்பு இல்லாமல் இருந்த தோழிகள் இருவரும், கடந்த சில ஆண்டுகளாக தினம் தினம் கைப்பேசியில் அரட்டை அடித்துக் கொண்டிருக்கிறார்கள். சில நேரங்களில் வாட்ஸ்அப்பிலும் முகம் காட்டி நட்பைத் தொடர்கிறார்கள்.

கோகிலா... பசங்களுக்கு கோடை விடுமுறை விட்டாச்சு.

மகன் 9 ம் வகுப்பு தேர்வு எழுதியிருக்கான்.

மகள் நந்தினி பத்தாம் வகுப்பு தேர்வு எழுதியி ருக்கிறாள்.

இரண்டு பேரையும் கோச்சிங் கிளாசுக்கு அனுப்பப்போறன்.,என்றாள் சுமதி...

சுமதி...எப்பப் பார்த்தாலும் அந்த கிளாஸ், இந்த கிளாஸ்னு பசங்கள வெளியே அனுப்பிகிட்டே இருந்தா அதுங்களுக்கு மனச்சோர்வு ஏற்படும்.எப்போதும் பாடப்புத்தகமும்,கையுமா இருந்தா அலுப்பு ஏற்பட்டு நம்ம மேலயே அதுங்களுக்கு ஒரு வெறுப்பு உண்டாகும்.

அதுக்காக சும்மாவே வீட்டுலேயே வச்சுக்கறது தப்பில்லையா!

சுமதி...அவசரப்படாத...பள்ளிக்கூடத்திலயும், கல்லூரிலேயும் பிள்ளைங்க நல்லக் கல்வியைக் கத்துப்பாங்க...ஆனா அவுங்க நல்லா வாழ்றதுக்கான வாழ்க்கைக் கல்வியை பெற்றோர்கள்தான் கத்துத் தரமுடியும்.

வீட்டைச் சுத்தமா வச்சுக்கறது, சமையல் செய்யறது, வாசல பெருக்கிக் கோலம் போடுவது,

செய்தித் தாள், புத்தகங்கள் வாசிப்பது, பொது இடங்களில் எப்படி நடந்து கொள்வது பெரியவர்களுக்கு மரியாதை தருவது இப்படி இதையெல்லாம் நாமதான் சொல்லிக் கொடுத்து வளர்க்கனும். பள்ளிப்படிப்பு மட்டும் வாழ்க்கைக்கு உதவாது. நான் சொன்ன வாழ்க்கைப் பாடமும் நம்ம குழந்தைகளுக்கு அவசியம் தேவை.

இதை பள்ளி விடுமுறை காலத்திலே நாம சொல்லிக் கொடுத்தா குழந்தைங்க ஆர்வமா கத்துப்பாங்க... அப்பத்தான் அவங்க வாழ்க்கை நல்ல சிறப்பா இருக்கும்...

சுமதி, நான் சொல்றது உனக்கு புரியுதா...லயன்ல இருக்கீயா...என்ன சத்தத்தையே காணும்....!

கோகிலா...நீ சொன்னதை எல்லாத்தையும் கேட்டுக் கிட்டே நான் யோசிச்சப்படி இருந்தேன்.. இன்னைக்கு இருக்கற சூழ்நிலையில குழந்தைகளுக்கு வாழ்க்கைப் பாடம் மிக மிக அவசியங்கறதை எனக்கு நீ நல்லா புரிய வச்சுட்ட...இதுக்கு உனக்கு ,நான் தான் நன்றி சொல்லனும்...

என் பசங்க இரண்டு பேருக்கும், இன்னையிலேருந்தே வாழ்க்கைப்பாடத்தை

ஆரம்பிக்கப் போறேன் என்ற சுமதிக்கு கோகிலா வாழ்த்துத் தெரிவித்தாள்..!



ஆக்கம்:

தமிழ்ச் செம்மல் 

நன்னிலம் இளங்கோவன்,

மயிலாடுதுறை.